179 பேர் பலி: கட்டுப்பாட்டு அறை விடுத்த எச்சரிக்கைக்கு விமானி கொடுத்த சமிக்ஞை - இரண்டே நிமிடங்களில் என்ன நடந்தது?

post-img
தென் கொரியாவில் 181 பேர் பயணித்த விமானம் ஒன்று அந்நாட்டின் முவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில் சுமார் 179 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில், ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற இந்த விமானம் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக யோன்ஹாப் செய்தி முகமை தெரிவித்துள்ளது. ஜேஜூ ஏர் நிறுவனத்தின் இந்த விமானத்தில் 175 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் உட்பட 181 பேர் பயணித்துள்ளனர். தாய்லாந்திலிருந்து வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இந்த விமானம் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 737-800 ரக விமானம் என்று ஜேஜூ ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் உயிர் பிழைத்த இருவரும் விமானக் குழுவை சேர்ந்தவர்கள். சமூக ஊடகங்களில் கிடைக்கப்பெறும் உறுதிப்படுத்தப்படாத காணொளியில், விமானம் சறுக்கிக்கொண்டே ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று சுவரில் மோதுவது தெரிகிறது. பின்னர் விமானத்தில் தீப்பிடித்தது. விமான விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இருப்பினும் பறவைகள் மீது மோதியதாலோ அல்லது மோசமான வானிலை காரணமாகவோ இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தென் கொரிய போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விமானம், விமான நிலையத்தை அடைந்தவுடன் என்ன நடந்தது என்ற விவரத்தை வெளியிட்டுள்ளனர். விமானம் தரையிறங்கும் போது, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம், பறவைகள் இருப்பதாகவும் தரையிறங்க வேண்டாம் என்று எச்சரிக்கை வழங்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு நிமிடங்களுக்கு பிறகு விமானி ஆபத்துக்கான சமிஞ்சையான 'மேடே' என்று தெரிவித்துள்ளார். எனவே விமானம் எதிர் திசையில் தரையிறங்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் அனுமதி வழங்கியுள்ளது. அதனை விமானி ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் விபத்து குறித்தான வீடியோவில் விமானம் ஓடுபாதையில், சக்கரங்கள் அல்லது எந்தவித லேண்டிங் கியர்கள் இன்றியும் தரையிறங்கி ரன்வேயிலிருந்து விலகி சுவரில் மோதி வெடிப்பதாக தெரிகிறது. விமான பயணிகளில் 173 பேர் தென் கொரியர்கள் எனவும், 2 பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது. பிபிசியின் செய்தியாளர் ஷான் மெக்கென்சி, முவான் விமான நிலையத்தில் விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ளார். அவர் இந்த விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவருமே உயிரிழந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுவதாக தெரிவித்தார். உயிர் பிழைத்த விமானக் குழுவினர் இருவர் விமானத்தில் பின் புறம் இருந்தனர் என்றும் மெக்கென்சி தெரிவிக்கிறார் விமான பாகங்கள் அடையாளம் காண முடியாத அளவில் வெடித்து சிதறியுள்ளதாக அந்த நாட்டின் தேசிய தீயணைப்பு முகமையினர் தெரிவிக்கின்றனர். அருகில் உள்ள வேலியில் விமானத்தின் வெடித்து சிதறிய பாகங்களை பார்க்க முடிவதாகவும் மெக்கென்சி தெரிவிக்கிறார். விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் ஜேஜூ ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். செய்தியாளர் சந்திப்பில், இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிம் இ-பே மற்றும் பிற அதிகாரிகள் தங்கள் தலையை தாழ்த்தி மன்னிப்பு கேட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பதே தற்போது தங்களின் முன்னுரிமை என்று கிம் இ-பே கூறினார். மேலும் இந்த விமான நிறுவனம், அதன் இணையதளத்தை கருப்பு நிறத்திற்கு மாற்றி ஆன்லைனில் மன்னிப்பு கோரியது. விமான பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் துறையாகத் தென் கொரியாவின் விமானப் போக்குவரத்துத் துறை கருதப்படுகிறது. ஜேஜூ விமான நிறுவன வரலாற்றில் இதுவே முதல் உயிரிழப்புகளைக் கொண்ட மோசமான விபத்தாகும். தென் கொரியாவின் மிகப்பெரிய குறைந்த கட்டண விமான நிறுவனமான இது 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. விபத்து நடைபெற்ற முவானை சிறப்பு பேரிடர் மண்டலமாக அந்நாட்டின் இடைக்கால அதிபர் சோய் சாங் மோக் அறிவித்துள்ளார். முன்னதாக விபத்து தொடர்பாக தலைநகர் சோலில் அவசரகால கூட்டம் ஒன்றையும் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post