'வேதாந்தா'வின் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு.. மேலூரில் வைகோ போராட்டம்!

post-img
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அரிட்டாபட்டி பகுதியில் வேதாந்தா குழுமத்துக்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி தலைமையில் இன்று போராட்டம் நடைபெற்றது. அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக ஏற்கனவே தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமத்துக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்த அனுமதிக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டசபையிலும் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து அரிட்டாபட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனாலும் அரிட்டாபட்டி பகுதியில் மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரிட்டாபட்டிக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் நேரில் சென்று மக்கள் போராட்டத்தில் பங்கேற்றும் வருகின்றனர். இந்த நிலையில் மேலூர் பேருந்து நிலையம் அருகே இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி தலைமையில் டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரிட்டாபட்டி சுற்று வட்டார பொதுமக்களும் மதிமுகவினரும் பங்கேற்றனர். முன்னதாக டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசின் கீழ் இயங்கும் கனிமம் மற்றும் சுரங்கம் அமைச்சகம் கனிம வளங்களை எடுப்பதற்காக நாடு தழுவிய அளவில் ஏலம் விட்டிருந்தது. கடந்த நவம்பர் 7 ஆம் தேதி கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் 7ஆவது ஏலம் நடத்தப்பட்டது. அதில் மேலூர், நாயக்கர்பட்டியில் உள்ள டங்ஸ்டன் (Tungsten) கனிமத்தைத் தோண்டி எடுப்பதற்கு 5,000 ஏக்கர் பரப்பளவில் சுரங்கம் அமைப்பதற்கான அனுமதியை வேதாந்தாவின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் (Hindustan Zinc) நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. இதன்படி மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் அரிட்டாபட்டி, வல்லாளப்பட்டி, நாயக்கர்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் டங்ஸ்டன் என்னும் கனிமவளங்கள் வெட்டி எடுப்பதற்கு வேதாந்தா குழுமத்தின் கிளை நிறுவனமான இந்துஸ்தான் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அரிட்டாபட்டி கிராமத்தை 5000 ஏக்கர் (193.215 ஹெக்டேர்) பரப்பளவில் பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த கிராமத்தைச் சுற்றி ஏழு சிறிய குன்றுகள் உள்ளன. 250 வகையான பறவைகளுக்கு வாழ்விடமாக இப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்று குளங்களும் உள்ளன. விவசாயத்தினை அடிப்படையான கொண்ட பகுதியாகவும் உள்ளது. மேற்கண்ட குளம், ஏரி மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகின்றன. இப்பகுதியில் 2200 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்து கல்வெட்டுகள், சமணர் படுகைகள், குடைவரை கோயில்கள் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும் உள்ள பகுதியாக உள்ளன. கனிம சுரங்கம் அமைக்கப்படவுள்ள அரிட்டாபட்டி கிராமம் இயற்கை வளங்கள் மிகுந்த பகுதி என்பதால், இங்கு வாழும் மக்கள் மலைக் குன்றுகளில் இருந்து வரும் மழைநீரை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சுரங்கம் அமைக்கப்பட்டால் நீர் ஆதாரமான 7 மலைக்குன்றுகள், 200 இயற்கை நீர்ச்சுனைகள் அழிந்து போகும். மேலும் 2022 ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசால் பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் சுற்றுச்சூழல் தளமாக அறிவிக்கப்பட்ட இப்பகுதியில் உள்ள மலைகளில் வெள்ளை வல்லூறு, செம்மார்பு வல்லூறு, ராஜாளி கழுகு போன்ற 250க்கும் மேற்பட்ட உயிரினங்களும். அழுங்கு, மலைப் பாம்பு, தேவாங்கு போன்ற அரியவகை உயிரினங்களும் அழிந்து போகும்.. இப்பகுதியில் 2200 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டுக்கள், குடைவரைக் கோவில்கள், சமணர்ப் படுக்கைகள் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் சான்றுகள் இத்திட்டத்தால் அழிக்கப்படுவதோடு, அருகில் உள்ள பெருமாள் மலையில் இருக்கும் உயிரினங்களும் அழிக்கப்படும் என்பதால் சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் 16 பேரைச் சுட்டுக் கொள்வதற்குக் காரணமான வேதாந்தாவின் துணை நிறுவனத்திற்கு மீண்டும் மக்கள் வாழ்வாதாரங்களை அழிப்பதற்கான அனுமதியை ஒன்றிய பாஜக அரசு வழங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கக் கூடாது என்று ஒன்றிய அரசை வலியுறுத்தியும் டிசம்பர் 9 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள தீர்மானத்தை ஒன்றிய பாஜக அரசு ஏற்றுக்கொண்டு, உடனடியாக வேதாந்தா குழுமத்திற்கு வழங்கியுள்ள டங்ஸ்டன் கனிம வள சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை ரத்து செய்து, இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post