அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் அரசியலாக்கப்படுகிறதா?

post-img
"அரசியல் கட்சிகளின் போராட்டங்கள், ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில் மட்டுமே உள்ளன. உண்மையான அக்கறையால் அல்ல. பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல் பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன்?" அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக போராட்டம் நடத்த பாமகவுக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், பாமக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் தெரிவித்த கருத்துகளே மேலே உள்ளவை. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 23-ஆம் தேதி இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். மறுநாள் (டிசம்பர் 24) கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாணவி கொடுத்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸார், ஞானசேகரன் என்ற நபரைக் கைது செய்தனர். இந்த வழக்கின் எஃப்.ஐ.ஆர் விவரங்கள் சில ஊடகங்களில் வெளியானது முதல் எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டங்கள் வரை, அனைத்துமே தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. வழக்கு பதிவு செய்யப்பட்டு கிட்டதட்ட பத்து நாட்கள் கடந்துள்ள நிலையில் காவல்துறை, ஆளும் அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் இந்த வழக்கை கையாளும் முறை குறித்து சட்ட நிபுணர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கூறுவது என்ன? சென்னை உயர் நீதிமன்றம் கூறியது போல இந்த விவகாரம் அரசியலாக்கப்படுகிறதா? டிசம்பர் 26-ஆம் தேதியன்று காலையில், மாணவி அளித்த புகார் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வெளியானது. மாணவிக்கு நடந்த அசம்பாவிதங்கள் பற்றிய விரிவான தகவல்கள் மட்டுமின்றி, அவரது பெயர், அலைபேசி எண், படிக்கும் பாடப்பிரிவு, முகவரி உள்ளிட்ட தகவல்கள் அதில் இடம் பெற்றிருந்தன. சில தொலைக்காட்சி நிறுவனங்கள் அவரது தனிப்பட்ட விவரங்கள் தவிர்த்து, எந்தெந்தப் பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் அடங்கிய எஃப்.ஐ.ஆரை ஒளிபரப்பின. இது தொடர்பாக டிசம்பர் 26 அன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் அருண், "எஃப்.ஐ.ஆர் இணையத்தில் பதிவேற்றப்பட்டதும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லாக் ஆவதில் தாமதமாகி இருக்கலாம். அந்த நேரத்தில் இதைப் பதிவிறக்கம் செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டிருப்பார்கள்" என்று விளக்கினார். இதையே கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த பொதுநல வழக்கின் வாதத்தில், அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தெரிவித்தார். பிபிசி தமிழிடம் வழக்கறிஞர் அஜிதா, "தொழில்நுட்ப கோளாறு என்றால் அன்றைய நாளில் வேறு ஏதேனும் எஃப்.ஐ.ஆர்-கள் வெளியானதா? தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படும், அதுவும் ஒரு மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான ஒரு வழக்கின் எப்.ஐ.ஆர் குறித்த விஷயத்தில் இவ்வளவு அலட்சியம் காட்டப்பட்டது ஏன்? இதற்கு காவல்துறையிடம் பதில் இல்லை." என்கிறார். சென்னை காவல் ஆணையர் அருண், டிசம்பர் 26ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசியபோது, "இதுவரை நடைபெற்ற புலன் விசாரணையில் ஞானசேகரன் என்ற ஒருவர் மட்டுமே குற்றவாளி எனக் கண்டறியப்பட்டுள்ளது" என்றார். இதுகுறித்து பேசிய வழக்கறிஞர் அஜிதா, "விசாரணை என்பது முழுமையாக நடத்தப்பட்டு, ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை சமர்பிக்கப்படுவதற்கு முன்பே இதில் ஈடுபட்டது ஒரு குற்றவாளிதான் என காவல் ஆணையர் உறுதியாக கூறுகிறார்." "எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட ஓரிரு நாட்களுக்குள்ளாகவே இதை அவர் சொல்வதைப் பார்க்கையில், விரைவாக வழக்கை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே வெளிப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவி குறித்தோ அல்லது இனி இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என்ற அக்கறையோ வெளிப்படவில்லை" என்கிறார். மக்களிடடையே காவல்துறை குறித்து கெட்டப் பெயர் வந்துவிடக்கூடாது என்ற ஒரே நோக்கத்தில், அரசியல்வாதிகள் செயல்படுவது போல காவல்துறை இந்த வழக்கில் செயல்படுகிறது என்கிறார் அஜிதா. "அண்ணா பல்கலைக்கழகம் போன்ற இந்தியாவின் பிரபலமான ஒரு கல்வி மையத்தில் இத்தகைய மோசமான ஒரு சம்பவம் நடந்தது தங்கள் ஆட்சியின் மீது படிந்த கறையாகவே இந்த அரசு பார்க்கிறது. அதனால்தான் அதை எவ்வாறு சரிசெய்யலாம் என்று ரீதியில் மட்டுமே இதை அணுகுகிறார்கள். மாணவியின் நலனுக்கு முன்னுரிமை கொடுப்பதாக தெரியவில்லை" என்கிறார் எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் ஷாலின் மரியா லாரன்ஸ். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஞானசேகரன், திமுகவைச் சேர்ந்தவர் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதுகுறித்து டிசம்பர் 26ஆம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, " ஞானசேகரன் திமுகவில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லை. துணை முதல்வர், அமைச்சர்கள் ஆகியோருடன் மக்கள் நின்று புகைப்படம் எடுப்பது சகஜம்தான்" என்று தெரிவித்தார். "ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் என்ற குற்றச்சாட்டு அரசு மீது அழுத்தம் உருவாகக் காரணம். தமிழ்நாடு முழுக்க பரபரப்பாக பேசப்படும் அளவுக்கு இந்த விவகாரம் மாறிய பிறகும் கூட இதுவரை முதலமைச்சர் அல்லது துணை முதலமைச்சர் இதுகுறித்து பேசாதது, தமிழ்நாடு அரசு இந்த வழக்கை எப்படி அணுகுகிறது என்பதை தெளிவாகச் சொல்கிறது" என்கிறார் ஷாலின் மரியா லாரன்ஸ். பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் சாந்தகுமாரி, "இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் இந்த சூழலில், இந்த வழக்கை இன்னும் கொஞ்சம் வெளிப்படைத்தன்மையோடு அரசு அணுகியிருக்க வேண்டும்" என்கிறார். கைது செய்யப்பட்ட நபர் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் என்ற குற்றச்சாட்டு எழுந்ததால், அரசு இதில் சற்று தடுமாறிவிட்டது என்கிறார் வழக்கறிஞர் சாந்தகுமாரி. "நிச்சயமாக இந்த வழக்கை வெளிப்படைத்தன்மையோடு கையாள்வதால் அரசுக்கோ, ஆளும் கட்சிக்கோ கெட்டப் பெயர் ஏற்படப் போவதில்லை. திமுகவின் தடுமாற்றத்தை, எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக்கொண்டன" என்கிறார் அவர். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜக மகளிரணி சார்பில் மதுரை முதல் சென்னை வரை நீதி யாத்திரை நடைபெறும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் தடையை மீறி யாத்திரை நடைபெறும் என பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாஜக மகளிரணியினர் மதுரையில் நேற்று (ஜனவரி 3), கையில் தீச்சட்டி சுமந்து போராடுவது, கோவில் ஒன்றில் அம்மனுக்கு மிளகாய் சாற்றி போராடுவது, கண்ணகி போன்று வேடமணிந்து போராடுவது, கைகளில் சிலம்பு ஏந்தி முழக்கமிடுவது என பல்வேறு முறைகளில் எதிர்ப்பை பதிவு செய்தனர். "தமிழக பாஜக இந்த விஷயத்தை வைத்து ஒரு மோசமான அரசியலைச் செய்கிறது. அதில் எந்த சந்தேகமுமில்லை" என்கிறார் ஷாலின் மரியா லாரன்ஸ். "பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அவர்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என தெரியும். மணிப்பூரில் நடந்த குற்றங்கள் பற்றி தமிழக பாஜக இன்றுவரை மௌனம் காக்கிறது" என்கிறார் ஆனால், அனைத்து எதிர்கட்சிகளுமே தங்கள் அரசியல் லாபத்தை மட்டுமே கணக்கில் கொள்வதாகவும், சாட்டையால் அடித்துக்கொள்வது போன்ற நூதன போராட்டங்களை வெறும் கவன ஈர்ப்பிற்காக செய்வது கவலை அளிக்கிறது எனவும் கூறுகிறார் வழக்கறிஞர் சாந்தகுமாரி. "இதுபோல ஒரு தவறு நடந்துவிட்டால் உடனே பெண்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகரித்துவிடும். எனக்கு தெரிந்து எத்தனையோ கல்லூரிகளில் ஆண்கள்- பெண்கள் பேசினால் கூட அபராதம் விதிப்பார்கள். குற்றங்களைக் குறைக்க வேண்டும் என்றால், கல்வி நிலையங்களில் சுதந்திரமான சூழலை உருவாக்க வேண்டும்." என்று கூறும் வழக்கறிஞர் அஜிதா இந்த வழக்கில் காவல்துறை, ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் என எல்லோருக்கும் வெவ்வேறு கணக்குகள் உள்ளன என்றும், ஆனால் நியாயமான அணுகுமுறை என்பது பாதிக்கப்பட்ட பெண்ணை களங்கப்படுத்தாமல், அவர் பக்கம் நிற்பதுதான் என்கிறார் அவர். "அப்படி நின்றால் மட்டுமே, பாதிக்கப்படும் பெண்கள் தைரியமாக புகார் அளிக்க முன்வருவார்கள் ''என கூறுகிறார் அஜிதா Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post