"நடந்து போனாலே கைது.. தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி.." திமுக அரசை சாடிய அண்ணாமலை

post-img
சென்னை: ஆளுநர் விவகாரத்தில் திமுக போராட்டம் அறிவித்துள்ள நிலையில், அது தேவையில்லாத உப்புசப்பு இல்லாத காரணத்திற்காக நடைபெறும் போராட்டம் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். மேலும், இடதுசாரிகள் சொன்னதை போல இங்கு அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலையே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் நேற்று சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. பொதுவாக ஆண்டின் சட்டசபை கூட்டத்தொடரின் தொடக்கத்தில் ஆளுநர் உரையாற்றுவார். ஆனால், கூட்டத்தொடர் தொடங்கும் போது ஆளுநர் அவையில் இருந்து வெளியேறினார். தேசிய கீதம் ஒலிபரப்பப்படவில்லை என்பதால் ஆளுநர் அவையில் இருந்து வெளியேறியதாகச் சொல்லப்பட்டது. இதற்கிடையே ஆளுநரை எதிர்த்து திமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை திமுக அரசைக் கடுமையாகச் சாடினார். அண்ணா பல்கலை. விவகாரத்தைத் திசை திருப்பவே திமுக போராட்டம் நடத்துவதாக அவர் விமர்சித்தார். இது தொடர்பாகச் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ் தாய் வாழ்த்து பாடல் முழுமையாக ஒலிபரப்பிய பிறகே ஆளுநர் அங்கிருந்து கிளம்பினார். அவர் இது தொடர்பாக விளக்கத்தையும் கொடுத்திருந்தார். ஆளுநர் ரவி தமிழ் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர். தமிழை கற்றுக்கொண்டு தமிழில் பேசுபவர். அவர் ஆளுநர் கடந்தாண்டும் கூட இதே கருத்தைத் தான் சொன்னார். ஆனால், அப்போது திமுக போராட்டம் எதையும் நடத்தவில்லை. இந்தாண்டு மட்டும் போராட்டம் நடத்துகிறார்கள். அண்ணா பல்கலை. பிரச்சனையைத் திசைதிருப்பவே திமுக இந்த போராட்டத்தை நடத்துகிறது. அவர்கள் கட்சி சம்பந்தப்பட்டு இருக்கிறது என்பதற்காக அதைத் திசை திருப்ப உப்புசப்பு இல்லாத காரணத்திற்காகப் போராட்டம் நடத்துகிறார்கள். அண்ணா பல்கலை. விவகாரம் தொடர்பாக யார் போராட்டம் நடத்தினாலும் போலீசார் கைது செய்கிறார்கள். நடந்து போனால் கூட கைது சூழலே தமிழகத்தில் நிலவுகிறது. இடதுசாரிகள் சொன்னதை போல இங்கு அறிவிக்கப்படாத எமர்ஜென்சி தான் நடக்கிறது. ஆளுநருக்கு எதிராக திமுகக்காரர்கள் பெயர் போட்டே ஆபாசமாக போஸ்டர் ஓட்டுகிறார்கள். ஆனால், போலீசார் அவர்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதில்லை. நாளை முதல்வர் மீது பாஜகவினர் இதேபோல போஸ்டர் ஓட்டலாமா.. அதற்கு போலீஸ் அனுமதி தருமா? சட்டம் என இருந்தால் அனைவருக்கும் ஒரே போல இருக்க வேண்டும். மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் வராது என்பதை மத்திய அரசு தெளிவாகச் சொல்லிவிட்டது. முதல்வர் மதுரைக்குச் சென்று டங்ஸ்டன் சுரங்கம் வராது என்று விவசாயிகளிடம் சொல்வதில் என்ன பிரச்சினை.. மத்திய அரசு அறிவித்த பிறகும் தமிழக அரசு தனியாக எதாவது ஒப்பந்தம் போட்டுள்ளனரா என்ன? இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர முதல்வர் மதுரைக்கு போய் இருக்க வேண்டும். அங்கு டங்ஸ்டன் சுரங்கம் வராது என்பதைத் திட்டவட்டமாகக் கூறிவிட்டோம். அதையும் தாண்டி வந்தால் என்ன செய்வது எனக் கேட்டால்.. நானே களத்திற்கு வந்து அதற்கு எதிராகப் போராடுவேன் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன். முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி ஏன் மதுரைக்கு நேரில் போகப் பயப்படுகிறார்கள். மக்களுக்காகப் போராட வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சி 3 ஆண்டுகளாக அமைதியாக இருக்கிறார்கள். திமுக தலைவர்கள் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியை அவமதிக்கும் வகையில் பேசி வருகிறார்கள். இதனால் திமுக கூட்டணியில் இந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் வெளியே வர வேண்டும்" என்றார். மேலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்று சொன்ன அவர், அங்குப் போட்டியிடுவது தொடர்பாகத் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை செய்து முடிவெடுப்போம் என்றும் தெரிவித்தார். முன்னதாக சமீபத்தில் விழுப்புரத்தில் நடந்த சிபிஎம் கட்சியின் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் அப்போதைய மாநில செயலாளர் தலைவர் கே பாலகிருஷ்ணன் பேசுகையில், "அதாவது அந்த கூட்டத்தில் பேசிய அவர், "தமிழகத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று சொன்னாலே போலீஸ் வழக்குப் போடுகிறது. தமிழக முதல்வரை நான் ஒன்று கேட்க விரும்புகிறேன்.. இங்கே தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா? போலீசார் எப்படி இதுபோல கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுகிறது" என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post