நடுவானில் நெருப்பு 'கங்கு'.. அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா! 30,000 மக்களின் கதி என்ன?

post-img
நியூயார்க்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீ சுமார் 30,000 மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. தீ பரவிய காட்சிகள் வானத்தில் நெருப்பு கங்காக எதிரொலிக்கிறது. வெறும் 20 ஏக்கர் பரப்பளவில் தொடங்கிய காட்டு தீ, மளமளவென அடுத்த சில மணி நேரங்களில் 1200 ஏக்கர் அளவில் பரவியிருக்கிறது. தீயை கட்டுக்குள் கொண்டுவர ஏராளமான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். லாஸ் ஏஞ்சல்ஸின் பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் காட்டு தீ நேற்று முன்தினம் பரவ தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் இது குளிர்காலம் என்பதால் காட்டு தீ ஏற்பட வாய்ப்பே இல்லை என்றுதான் பலரும் நம்பியிருந்தனர். பிப்ரவரி 28ம் தேதி குளிர்காலம் முடிந்து, அன் பின்னர் வசந்த காலம் தொடங்கி, பிறகுதான் கோடைக்காலம் வரும். கோடை வந்தால்தான் காட்டு தீயின் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த வகையில் தற்போதைய காட்டு தீ குறித்து கவனக்குறைவாக இருந்ததே தீ மேலும் பரவ காரணம் என்று சொல்லப்படுகிறது. காட்டு தீ காரணமாக சுமார் 30,000 மக்கள் ஆபத்தில் இருக்கிறார்கள் என்றும், அவர்களை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தீயணைப்பு துறையினர் கூறியிருக்கின்றனர். ஏராளமான தீயணைப்பு வாகனங்கள், 250க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. மக்களை வெளியேற்றிவிட்டாலும் வீடுகளுக்கு இன்னும் அச்சுறுத்தல் இருந்து வருவதாக லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் தலைவர் கிறிஸ்டின் குரோலி கூறியுள்ளார். அதாவது 13,000 க்கும் மேற்பட்ட பெரிய கட்டிடங்கள் மற்றும் 10,000 வீடுகள் தீயினால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் மட்டுமல்லாது கலிஃபோர்னியாவிலும் தீ வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் ஏற்பட்ட புயல் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது என்றும், வேகமான காற்றால்தான் தீ பரவி வருகிறது என்றும் தீயணைப்பு துறை கூறியிருக்கிறது. தீ காரணமாக வானத்தை சூழ்ந்துள்ள புகை, நெருப்பு கங்கை போல இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். தண்ணீர் மற்றும் தீயணைப்பு துறை வீரர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததால் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்று கலிஃபோர்னியா மக்கள் கூறுகின்றனர். தீ ஏற்படுத்தும் புகை, கண் எரிச்சல் மற்றும் மூச்சு திணறலையும் ஏற்படுத்துவதாகவும், குழந்தைகள் இணை நோய் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் இதனால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். 'கேம்ப் பயர்' (Camp fire) எனும் முறை அமெரிக்காவில் மிகவும் பிரசித்திப்பெற்றது. அதாவது காடுகள் உள்ள பகுதிக்கு சுற்றுலா செல்லும் மக்கள் அங்கு தீ மூட்டி குளிர்காய்ந்து இரவை கொண்டாடி தீர்ப்பார்கள். ஆனால், காட்டு தீ ஏற்பட முக்கிய காரணமே இந்த 'கேம்ப் பயர்' தான் என்பது தெரிந்திருந்தாலும் மக்கள் இதை நிறுத்துவதில்லை. அதேபோல காலநிலை மாற்றமும் காட்டு தீ ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. எப்படி இருப்பினும் இப்போது ஏற்பட்டுள்ள காட்டு தீயை கட்டுப்படுத்த தவறிவிட்டால் ஏராளமான வீடுகளும், காட்டு உயிர்களும் அழிந்துவிடும் என்பது கவனிக்கத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post