கோவை: 'ரூ. 6,000 செலுத்தினால் தினமும் ரூ. 300' - மொபைல் ஆப் மூலம் மக்களை ஏமாற்றியது எப்படி?

post-img
கோவையில் ஜிபிஒய் (GBY) என்ற மொபைல் செயலி வாயிலாக 6,000 ரூபாய் பணம் கட்டினால், தினமும் 300 ரூபாய் சம்பாதிக்கலாம் என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி, நுாற்றுக்கணக்கான மக்கள் பணம் செலுத்தி ஏமாந்துள்ளதாக, காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த செயலியில் பணம் கட்டுவதற்கு பரிந்துரைத்ததாக, 9 பேரை பொள்ளாச்சி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்தாண்டு பிப்ரவரி மாதம் கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மைவி3 ஆட்ஸ் என்ற நிறுவனம் மூலம், தினமும் 2 மணிநேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களைச் சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானத்தை ஈட்டலாம் எனவும் கூறி ஏராளமானோர் ஏமாற்றப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில், ஜிபிஒய் மொபைல் செயலி வாயிலாக இந்த மோசடி எப்படி நடந்தது என்ற முழு விவரத்தைப் பார்க்கலாம். கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜிபிஒய் என்ற மொபைல் செயலி மூலமாக மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. ஜிபிஒய் என்ற மொபைல் செயலி மூலமாக குறைந்த அளவு பணம் செலுத்தினால், 'தினமும் பல மடங்கு அதிகமாகச் சம்பாதிக்கலாம்; ஆட்களைச் சேர்த்துவிட்டால் ஊக்கத்தொகை பெறலாம்' என்று சமூக ஊடகங்கள் வாயிலாக விளம்பரங்கள் செய்யப்பட்டு, அதை நம்பி பலரும் பல லட்ச ரூபாய் செலுத்தியுள்ளனர். இதுதொடர்பாக ஏராளமான காணொளி விளம்பரங்களும் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. அதில், எவ்வளவு பணம் செலுத்தினால் எத்தனை நாளில் எவ்வளவு சம்பாதிக்க முடியும், தினமும் எவ்வளவு வருவாய் வரும், எத்தனை பேரைச் சேர்த்து விட்டால் எவ்வளவு ஊக்கத்தொகை வரும் என பல்வேறு அட்டவணைகள் மற்றும் கவர்ந்திழுக்கும் விளம்பரங்களுடன் விரிவாக விளக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 6 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், ஒரு நாளுக்கு 300 ரூபாய் கிடைக்குமென்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, 30 பேரைச் சேர்த்துவிட்டால் தினமும் 500 ரூபாயும், மாதம் 2 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும், 60 பேரைச் சேர்த்து விட்டால் இது இரட்டிப்பாகவும் கிடைக்குமென்றும் காணொளியில் விளக்கப்படுகிறது. அவை சார்ந்த விளக்கப்படங்களில் தங்கம், பல லட்ச ரூபாய் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் ஆங்கிலத்தில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. வாட்ஸ்ஆப் மூலமாக இதில் இணையலாம் என்று அழைப்பு விடுக்கப்படுகிறது. அதில் இணைந்தபின் தரப்படும் 'லிங்க்'குகளைப் பயன்படுத்தி, ஜி பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலமாக பணம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. அதிலேயே அவரவருக்குச் சேரும் பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி என்பதும் தெரிவிக்கப்படுகிறது. இதை நம்பி ஏராளமான மக்கள் பணம் செலுத்தி, சில நாட்கள் தினமும் குறிப்பிட்ட தொகையையும் அதில் கிடைக்கப் பெற்றுள்ளனர் என்றும், அதை நம்பி பலரும் மீண்டும் மீண்டும் அதில் பணம் செலுத்தியுள்ளனர் என்றும் போலீசார் கூறுகின்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக பணம் எதுவும் அதில் கிடைக்காத நிலையில், தங்களை இந்த செயலிக்கு அறிமுகப்படுத்திய நபர்களின் வீடுகள் முன்பாகச் சென்று போராடத் தொடங்கியுள்ளனர். மாக்கினாம்பட்டி பகுதியில் இந்த செயலியில் இணையுமாறு பரிந்துரை செய்த நபர் வீட்டின் முன்பாக பலரும் கூடி வாக்குவாதம் செய்த நிலையில், பொள்ளாச்சி கூடுதல் எஸ்பி சிருஷ்டி சிங் தலைமையில் காவல்துறையினர் அங்கு சென்று விசாரித்தனர். அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து 9 பேரை கைது செய்துள்ளனர். இந்த மோசடி தொடர்பாக தற்போது கைதானவர்கள் பற்றியும், இவர்களும் இதே மொபைல் செயலியில் பணம் செலுத்தி, மற்றவர்களையும் சேர்த்துவிட்டு ஏமாற்றமடைந்திருப்பதாகக் கூறப்படுவது பற்றியும் மகாலிங்கபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ரத்னகுமாரிடம் கேட்டதற்கு, ''அதுபற்றி இப்போது ஒன்றும் கூற முடியாது.'' என்று தெரிவித்தார். கைது நடவடிக்கைக்குப் பின்னும் இந்த செயலி தொடர்பான விளம்பரங்கள், சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. ஜிபிஒய் என்ற மொபைல் செயலியில் எப்படி சேர்வது, எப்படிப் பணம் சம்பாதிப்பது என்பது பற்றி விளக்கி, சமூக ஊடக இன்ஃப்ளூயென்சர் ஒருவர் வெளியிட்ட காணொளியில் ஒரு தொடர்பு எண் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த எண்ணுக்கு பிபிசி தமிழ் சார்பில் பேசி விளக்கம் கேட்டபோது அதில் பேசிய பெண், ''நானும் முதலில் இந்த செயலியை நம்பி இந்த வீடியோவை வெளியிட்டேன். ஆனால், நானும் அதில் பணத்தை இழந்திருக்கிறேன். அதனால் இதில் யாரும் முதலீடு செய்ய வேண்டாம் என்று மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளேன்.'' என்றார். மோசடியில் கைதானவர்கள் மற்றும் வழக்கு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பொள்ளாச்சி கூடுதல் எஸ்.பி. சிருஷ்டி சிங், ''இந்த மோசடி தொடர்பாக பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் ஒழுங்குபடுத்தப்படாத வைப்புத்தொகை தடுப்புச்சட்டம் மற்றும் பிஎன்எஸ் 2வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது; இதுவரை 9 பேரை கைது செய்துள்ளோம். இவர்களுடன் தொடர்புடைய மற்றவர்கள் தப்பிவிடக்கூடாது என்பதற்காக பெயர்களை வெளியிடாமல் இருக்கிறோம். பொள்ளாச்சியில் இதில் ஏமாற்றமடைந்தவர்கள் சிலரிடம் புகார் பெறப்பட்டுள்ளது. இதேபோல மற்ற மாவட்டங்களிலும் இந்த மோசடி நடந்திருக்கலாம்.'' என்றார். இதை இயக்குபவர்கள் பற்றிய விவரம், தலைமையிடம் பற்றி அவரிடம் கேட்டபோது, ''ஆன்லைன் மோசடி என்பதால் எங்கிருந்து இயக்குகின்றனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. யார் இதில் முக்கியப்புள்ளி என்பதையும் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. அதுபற்றி சைபர் கிரைம் பிரிவினர் உதவியுடன் விசாரித்து வருகிறோம்.'' என்றார். இதுதொடர்பாக தங்களுக்கு பல புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதாகவும், அதனடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார். மேலும், இந்த மோசடி குறித்த முழுமையான தகவல்கள் குறித்து விசாரிக்க இரண்டு நாட்கள் ஆகும் என்றும் அவர் தெரிவித்தார். கடந்தாண்டு பிப்ரவரி மாதம் கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு மைவி3 ஆட்ஸ் என்ற நிறுவனம் மூலம், தினமும் 2 மணிநேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களைச் சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வரும் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அதன் நிறுவனர் சக்தி ஆனந்தன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கோவையில் மீண்டும் மோசடி புகார் எழுந்துள்ள நிலையில், பொதுமக்களுடன் இத்தகைய ஏமாற்று மோசடிகளில் சிக்க வேண்டாம் என தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திவருவதாக, கோவை காவல்துறையினர் கூறுகின்றனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post