'அந்த இடத்தில் இருந்தால்தான் புரியும்' - அண்ணா பல்கலை. மாணவிகள், பெற்றோர்கள் கூறுவது என்ன?

post-img
"அந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அதே இடத்தில் நானும் நடந்து சென்றிருக்கலாம். அந்த மாணவியை நான் பார்த்திருக்கலாம். அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவரை அதே பகுதியில் நானும் தினசரி கடந்து வந்திருக்கலாம். இதை நினைக்கும்போதுதான் பயமும் கவலையும் அதிகரிக்கிறது,". "நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என நம்பும் இடத்திலேயே நடப்பது பயமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது." "பாதிக்கப்பட்டவரை மிக எளிதில் குறை கூறலாம், ஆனால் அந்த இடத்தில் இருந்தால்தான் புரியும்," இது, அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் சில மாணவிகள் என்னிடம் கூறிய வார்த்தைகள். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் கடந்த வாரம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம், தமிழ்நாட்டின் பொதுத் தளத்திலும் அரசியல் அரங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் எஃப்.ஐ.ஆர் சில ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 'சட்ட ரீதியாக குற்றம் என்றபோதிலும், இந்த வழக்கின் எஃப்.ஐ.ஆர் வெளியானது எப்படி? ஆரம்பகட்ட விசாரணையில் ஒருவர் மட்டுமே குற்றவாளி என காவல் ஆணையர் பேட்டியளித்தது ஏன்?' இவ்வாறு உயர் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. தேசிய மகளிர் ஆணையத்தின் உண்மை கண்டறியும் குழு இந்த சம்பவம் தொடர்பாக டிசம்பர் 30-ஆம் தேதி அன்று பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்தியது. இதனிடையே, அண்ணா பல்கலை.யில் தற்போது படிக்கும் மாணவிகள் சிலரிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் பேசினேன். அனைத்துத் தரப்பிலும் ஒருவித பயமும் எச்சரிக்கை உணர்வும் மேலோங்கியிருப்பதை உணர முடிந்தது. மாணவிகளின் பெற்றோர்கள் தங்களின் மகள்கள் மீதான பாதுகாப்பு குறித்து அதிக கவலைகொண்டிருப்பதாக தெரிவித்தனர். அண்ணா பல்கலை.யில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் பேசியபோது, "சென்னையிலேயே பாதுகாப்பானது எங்கள் கல்லூரிதான் என்ற எண்ணம் எங்களுக்கு இருந்தது. மற்ற கல்லூரிகளில் ஆடை கட்டுப்பாடு இருக்கும், இங்கு அப்படி இருக்காது. இந்த சம்பவத்திற்குப் பிறகு பயம் வந்திருக்கிறது. பல்கலைக்கழக நிர்வாகம் எங்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் விஷயங்களைத்தான் ஆரம்பித்திருக்கின்றனர்" என்றார். இந்த விவகாரம் பெரிதான நிலையில், அண்ணா பல்கலை. விடுதியில் மாணவ, மாணவிகள் உள்ளே வருவதற்கான நேரத்தை இரவு 8.30 மணியிலிருந்து மாலை 6.30 மணியாக மாற்றியிருந்தனர். இதனால் விடுதிக்கு வெளியே சென்று உணவு உட்கொள்வது, படிப்புக்காக வெளியே செல்வது என பல பிரச்னைகள் ஏற்படும் என மாணவர்கள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். இதன்பின், இந்த அறிவிப்பு நிர்வாகத்தால் திரும்பப் பெறப்பட்டதாகக் கூறுகிறார் அம்மாணவி. பெற்றோர்கள் மத்தியில் பயம் அதிகரித்திருப்பதாகக் கூறுகிறார் அந்த மாணவி. "யாரையும் நம்ப வேண்டாம் என்றுதான் பெற்றோர்கள் நினைக்கின்றனர். நாங்களே எல்லோரையும் சந்தேகப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது" என்கிறார் அவர். பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்களுடன் எஃப்.ஐ.ஆர் வெளியாகியிருப்பது, மாணவிகளையும் அவர்களது பெற்றோரையும் வெகுவாக பாதித்திருக்கிறது. புகார் அளிக்க முன்வர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவரை குற்றம் சொல்வது மிகப்பெரிய தவறு எனக்கூறும் அந்த மாணவி, உடன் இருந்த மாணவரையும் குற்றம் சொல்லும் போக்கு இருப்பதாகக் கூறுகிறார். "பாலியல் வன்கொடுமை நடந்த அந்த நேரத்தில்தான் பல்கலைக்கழக வளாகம் மிகுந்த பரபரப்பாக இருக்கும். உணவு சாப்பிட்டுவிட்டு, நண்பர்களுடன் பேசிக்கொண்டு கலகலப்பாக மாணவர்கள் இருப்பார்கள். இனி அப்படி இருக்க வாய்ப்பில்லை." என்கிறார் அவர். "தன்னுடைய நடத்தை குறித்து தவறாக பேசுவார்கள் என தெரிந்தும் பாதிக்கப்பட்ட அந்த மாணவி தைரியமாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இத்தகைய சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மற்ற மாணவிகளுக்கு ஒருவித நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், புகார் அளித்தவருக்கு இன்னும் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அவரது அடையாளம் வெளியாகியிருக்கிறது" என்றார் நான்காம் ஆண்டு படிக்கும் அந்த மாணவி. இதே கருத்துகளை பிரதிபலிக்கிறார், அப்பல்கலை.யில் பயிலும் இறுதியாண்டு மாணவி ஒருவர். "இந்த வழக்கின் எஃப்.ஐ.ஆர். வெளியானது அதிர்ச்சியாக உள்ளது. இம்மாதிரியான விஷயங்களில் தைரியமாக சென்று புகார் அளிக்கும் துணிச்சல் ஒருசிலருக்குதான் உண்டு. பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் புகார் அளிக்க முன்வருபவர்களின் மனவலிமையை இது பாதிக்கலாம். இதனால், புகார் அளிக்க யோசிப்பார்கள்." என்கிறார் அவர். "இதற்கு முன்பு பல்கலை. வளாகத்தில் நாங்கள் பாதுகாப்பின்மையை உணர்ந்தது கிடையாது. இப்போது எங்களுக்கு பயம் இருக்கிறது. நான் சென்னையை சேர்ந்தவள். மதியமே வகுப்புகள் முடிந்துவிடும். மாலையில் வீட்டுக்கு சென்றுவிடலாம். ஆனால், விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளின் குடும்பத்தினர் நிச்சயமாக அதிக பயத்தில் இருக்கின்றனர். எப்படி விடுதியில் தொடர்ந்து தங்கள் பிள்ளைகளை தங்கவைப்பது என தயங்குகின்றனர்" என்கிறார், அந்த மாணவி. பல்கலைக்கழகம் என்பது அனைத்துத் தரப்பு மக்களும் எளிதாக வந்து பலதரப்பட்ட விவாதங்களையும், பணிகளையும் மேற்கொள்ளக்கூடிய இடம்தான் என்றாலும், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி வெளியாட்கள் குறித்த கண்காணிப்பு வேண்டும் என மாணவிகள் கோருகின்றனர். பல்கலைக்கழகத்தின் அனைத்து நுழைவுவாயில்களிலும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்கின்றார், அந்த இறுதியாண்டு மாணவி. "இச்சம்பவத்திற்கு முன்பே மாலை 6 மணிக்கு மேல் எங்கும் அமர்ந்து பேசக்கூடாது என பேராசிரியர்களே அறிவுறுத்தியுள்ளனர். வளாகத்தில் அமர்ந்து பேச வேண்டாம் என கூறியிருக்கின்றனர். இருப்பினும், இந்த சம்பவத்திற்கு பின், பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனும் நோக்கில், என்னுடைய இயல்பை மாற்றிக்கொள்ள வேண்டும் என நினைக்கவில்லை. பாதிக்கப்பட்ட அந்த மாணவியை மிக எளிதில் குற்றம் சொல்லிவிடலாம். ஆனால் அந்த இடத்தில் இருந்தால்தான் சூழல் புரியும்" என தெரிவித்தார். அந்த மாணவியின் தந்தையிடம் பேசியதிலிருந்து, இச்சம்பவத்தை விட எஃப்.ஐ.ஆர் வெளியானது அவருக்குக் கவலையை அதிகரித்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. "அண்ணா பல்கலைக்கழகத்திலேயே இப்படி நடந்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. சில ஊடகங்களில் பயத்தை அதிகரிக்கும் வகையில் இச்சம்பவம் குறித்த செய்திகள் வெளியாகின்றன." என்றார் அவர். தன் மகள் விடுதியில் தங்கி படிப்பவராக இருந்தால் தங்களின் கவலைகள் இன்னும் அதிகமாகும் என்றவர், பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளம் வெளியானதுதான் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார். "என் மகளுக்கு இப்படி நேர்ந்திருந்தாலும் புகார் அளித்திருப்பேன். என்றாலும், அம்மாணவியின் விவரங்கள் வெளியானது பல நெருடல்களையும் குழப்பங்களையும் உருவாக்கியுள்ளது" என தன் பயத்தை வெளிப்படுத்தினார். இந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கை பொறுத்தவரை பொதுவெளியில் பாதிக்கப்பட்ட மாணவியை குற்றம் சொல்லும் போக்கு அதிகமாக உள்ளது. மாணவியையும் உடன் இருந்த மாணவரையும் கைநீட்டி எழுப்பப்படும் கேள்விகளை என்னிடம் பேசிய மாணவிகள் விரும்பவில்லை, அவற்றை ஆதரிக்கவில்லை. ஆனால், சில மாணவிகளின் பெற்றோர்கள் அத்தகைய கருத்துகளையே கூறுகின்றனர். "பாதிக்கப்பட்ட மாணவியை நோக்கிதான் என்னுடைய வீட்டிலேயே குறை கூறுகின்றனர். பாதிக்கப்பட்டவரின் இடத்தில் இருந்து பார்க்கும்போது இந்த சூழல் இன்னும் பயத்தை வரவழைக்கிறது. அந்த மாணவிக்கு ஆதரவாக நான் பேசினாலும் என்னையே என் பெற்றோர்கள் திட்டுகின்றனர்," என்கிறார், அண்ணா பல்கலை. மூன்றாமாண்டு மாணவி ஒருவர். வெளிமாவட்டத்திலிருந்து இங்கு விடுதியில் தங்கி படிக்கும் அந்த மாணவி, விடுதியில் பாதுகாப்பாக இருப்பதாகவே கருதுகிறார். வெளியாட்களை உள்ளே விட மாட்டார்கள் என்றும், மாணவ, மாணவிகளும் சரியான நேரத்தில் விடுதிக்கு வந்துவிட வேண்டும் என்றும் கூறுகிறார். "இந்த சம்பவம் என் பெற்றோர்களுக்கு மிகுந்த பயத்தை ஏற்படுத்தியுள்ளது. 'பத்திரமாக இருக்க வேண்டும்' என அடிக்கடி கூறுகின்றனர். எங்கு போனாலும் சொல்லிவிட்டுப் போக வேண்டும் என்கின்றனர். வீட்டுக்கு போன் செய்து பேசவில்லை என்றால் பயப்படுகின்றனர். இப்போது நானே அவ்வப்போது அழைத்துப் பேச வேண்டும் என நினைக்கிறேன். என் நண்பர்களும் இதே பயத்தைத்தான் வெளிப்படுத்தினர். கல்லூரியே கட்டுப்பாடு விதிக்காவிட்டாலும் இனி அதிகாரபூர்வமற்ற முறையில் எங்கள் மீதான கட்டுப்பாடுகள் இருக்கும்" என அவர் தெரிவித்தார். அந்த மாணவியின் பெற்றோரிடம் பேசியபோது பாதிக்கப்பட்ட மாணவியை குறை சொல்லும் போக்கு இருந்தது. "இருட்டாக இருக்கும் இடத்திற்கு தனியாகவோ, நண்பர்களுடனோ போகக் கூடாது எனவும் நிறைய பேர் இருக்கும் இடத்தில் அமர்ந்து பேச வேண்டும் எனவும் என் மகளிடம் கூறியிருக்கிறேன். சமூகம் இப்படித்தான் இருக்கும், நீதான் உன்னை கவனித்துக்கொள்ள வேண்டும் என்கிறோம். அவள் எங்களுக்கு ஒரே குழந்தை என்பதால் இன்னும் பயமாக இருக்கிறது" என்றார், அந்த மாணவியின் தாய். பாலியல் வன்கொடுமை சம்பவமும் அதைத்தொடர்ந்து எழும் பேச்சுகளும் கட்டுப்பாடுகளும் மாணவிகளை ஒருவித பயத்திலும் பதட்டத்திலும் ஆழ்த்தியிருக்கிறது. "இத்தகைய சம்பவங்களைத் தொடர்ந்து சுற்றியிருப்பவர்களுக்கு பயமும் பதட்டமும் இருக்கலாம். நடத்தை தொடர்பான மாற்றங்கள் ஏற்படலாம். யாருடனும் கலக்காமல், தனியே இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அந்த சம்பவம் நடந்த இடத்திற்கு செல்ல பயப்படுவார்கள். ஆண்களுடன் பேசுவதில் தயக்கம் இருக்கலாம். எனினும், தொடர்ந்து பயமும் பதட்டமும் இருந்தால் மன நல ஆலோசகரை அணுக வேண்டும்" என்றார், சென்னையை சேர்ந்த மன நல மருத்துவர் கிருபாகரன். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post