இந்தியாவிலேயே முதல்முறை குமரி கடலில் கண்ணாடி பாலம்.. இன்று திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா பொதுக்கூட்டம்

post-img
கன்னியாகுமரி: திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 2ம் நாள் நிகழ்ச்சிகளாக, இன்று காலை பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விழா பேருரை நிகழ்த்துகிறார். திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா மலரையும் முதல்வர் வெளியிடுகிறார். கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25வது ஆண்டு வெள்ளிவிழாவையொட்டி, இந்தியாவிலேயே முதன் முறையாக திருவள்ளுவர் சிலை- விவேகானந்தர் பாறை இடையே கடல் நடுவே 37 கோடி ரூபாயில் கட்டப்பட்ட கண்ணாடி இழை பாலத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்துள்ளார். கடல் மீது கட்டப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கண்ணாடி இழை பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததுடன், அந்த கண்ணாடி பாலம் மீது கடல் அழகை ரசித்தவாறே நடந்து சென்றார். திருவள்ளுவர் சிலை: பிறகு, திருவள்ளுவர் சிலையின் மேல் தளம் சென்று, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன், அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து திருவள்ளுவர் சிலையை சிறிது நேரம் ரசித்தார். பிறகு திருக்குறள் நெறிபரப்பும் 22 தகைமையாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு, சான்றிதழ் வழங்கினார். படகுத்துறையில் திருவள்ளுவர் மணல் சிற்பத்தையும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள லேசர் ஒளி வண்ண விளக்குகளில் திருவள்ளுவர் சிலை ஒளிர்வதையும், ஸ்டாலின் ரசித்து பார்வையிட்டார். பிறகு "திருக்குறளால் அதிக நன்மை தனி மனிதருக்கே, சமுதாயத்திற்கே" என்ற தலைப்பில், சுகி சிவம் நடுவராக பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது. ரசித்து கேட்ட முதல்வர்: தனி மனிதருக்கே என்ற தலைப்பில் ராஜாராம், மோகனசுந்தரம், மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோரும், சமுதாயத்திற்கே என்ற தலைப்பில் புலவர் சண்முக வடிவேல், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, ராஜா ஆகியோரும் இந்த பட்டிமன்றத்தில் பங்கேற்றிருந்தனர். பட்டிமன்றத்தை ரசித்து கேட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்னர் அரசு விருந்தினர் மாளிகை திரும்பினார். இந்நிலையில், 2ம் நாள் நிகழ்ச்சிகளாக இன்று காலை 9.30 மணிக்கு திருவள்ளுவர் வெள்ளிவிழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.. விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு விழா பேருரை நிகழ்த்துகிறார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரும் இந்த பொதுக்குழுவில் பங்கேற்று பேசுகிறார்கள். தலைமை செயலாளர் முருகானந்தம் வரவேற்கிறார். கலெக்டர் அழகுமீனா நன்றி கூறுகிறார். திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா மலரையும் முதல்வர் வெளியிடுகிறார். 2 நாள் குறைப்பு: முன்னதாக, கன்னியாகுமரியில் 3 நாட்கள் நடைபெறுவதாக இருந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் 2 நாட்களாக குறைக்கப்பட்டிருந்தது. டிசம்பர் 31ம் தேதி நடைபெற இருந்த கலை நிகழ்ச்சிகள் அனைத்தும், மன்மோகன் சிங் மறைவையொட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதுடன், நாளை ஜனவரி 1ம் தேதி நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்று டிசம்பர் 31ம் தேதியே நடைபெறும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post