கர்நாடகாவில் பஸ் டிக்கெட் கட்டணம் உயர்வு.. வெளியான மேஜர் அறிவிப்பு! எவ்வளவு சதவீதம் உயர்கிறது?

post-img
பெங்களூர்: நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் பேருந்து கட்டணத்தை உயர்த்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி வரும் ஜன.5ம் தேதி முதல் கர்நாடகாவில் 15% பேருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதேநேரம் இந்த அறிவிப்புக்கு அங்கு எதிர்க்கட்சியான பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டைப் போலவே கர்நாடகாவிலும் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் நடைமுறையில் இருக்கிறது. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு வந்து கிட்டதட்ட 1.5 ஆண்டுகள் ஆகிறது. இந்த திட்டத்தால் கர்நாடக அரசுக்கு மாதம் ரூ.417 கோடி ரூபாய் செலவாகிறது. அங்குக் கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் (KSRTC), கல்யாண கர்நாடக சாலை போக்குவரத்துக் கழகம் (KKRTC), வடமேற்கு கர்நாடக சாலை போக்குவரத்துக் கழகம் (NWKRTC), மற்றும் பெங்களூர் பெருநகர போக்குவரத்துக் கழகம் (BMTC) என்று நான்கு போக்குவரத்துக் கழகங்கள் உள்ள நிலையில், ஒவ்வொன்றுக்கும் இத்திட்டத்திற்காக தலா ரூ. 104 கோடி ஒதுக்கப்படுகிறது. இருப்பினும், இந்தத் திட்டத்தால் போக்குவரத்துக் கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதனால் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் அங்குப் பேருந்து கட்டணத்தை உயர்த்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி வரும் ஜன. 5ம் தேதி முதல் அங்கு நான்கு போக்குவரத்துக் கழகங்களிலும் டிக்கெட் கட்டணம் 15% உயர்த்தப்படுகிறது. கட்டண உயர்வு தொடர்பான முன்மொழிவைக் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதமே போக்குவரத்துக் கழகங்கள் சமர்ப்பித்து இருந்தது. நிதி நெருக்கடி காரணமாக டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இப்போது தான் அதற்குக் கர்நாடக அரசு அனுமதி கொடுத்துள்ளது. அந்த முன்மொழிவில் பெங்களூர் பெருநகர போக்குவரத்துக் கழகம் அதிகபட்சமாக 42 சதவீத டிக்கெட் விலை உயர்வைக் கோரியிருந்தது. பெங்களூர் பெருநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் கடந்த 2014க்கு பிறகு உயர்த்தப்படாமல் இருக்கும் நிலையில், 42% டிக்கெட் விலை உயர்வைக் கோரியிருந்தது. கேஎஸ்ஆர்டிசி 25 முதல் 30 சதவீதம் டிக்கெட் விலையை உயர்த்த கோரிக்கை விடுத்து இருந்தது. அதேபோல வடமேற்கு கர்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகம் (NWKRTC) 30 சதவீதம், வடகிழக்கு கர்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகம் (NEKRTC) 25 முதல் 30 சதவீதம் வரை கட்டண உயர்வைக் கோரியிருந்தன. இந்த 3 போக்குவரத்துக் கழகங்களும் கடைசியாக 2020 பிப். மாதம் தங்கள் டிக்கெட் கட்டணத்தை மாற்றி அமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி 25% முதல் 42% வரை டிக்கெட் உயர்வுக்குக் கோரிக்கை விடுத்த போதிலும், கர்நாடக அரசு நான்கு போக்குவரத்து கழகங்களின் டிக்கெட் விலையை 15% மட்டுமே உயர்த்த அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் தினசரி ரூ.8.84 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் கர்நாடக அரசின் இந்த அறிவிப்பை அம்மாநில பாஜக மிகக் கடுமையாக எதிர்த்துள்ளது. அம்மாநில பாஜக எதிர்க்கட்சித் தலைவர் அசோகா, "தினசரி எதாவது பொருளின் விலையை உயர்த்தி கர்நாடக மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் அரசின் பேராசையைக் கன்னடர்கள் இன்னும் எத்தனை வரிகளையும் கட்டணங்களையும் செலுத்த வேண்டும்" எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post