2024ல் உலக அரங்கில் திரும்பிப் பார்க்க வைத்த 4 இந்திய பெண்ணியத் திரைப்படங்கள் - எப்படி சாத்தியமானது?

post-img
பாலிவுட் படங்கள் 2024 ஆம் ஆண்டில், பெரிதாக சாதிக்காத நிலையில், இந்தியப் பெண்களின் சிறிய பட்ஜெட் படங்கள் நுணுக்கமான கதைகளைச் சொல்லி, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. கடந்தாண்டு மே மாதம், இந்தியத் திரைப்பட இயக்குநர் பாயல் கபாடியாவின் `ஆல் வீ இமேஜின் ஆஸ் லைட்' (All We Imagine As Light) திரைப்படம், கேன்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் (Grand Prix) விருதை வென்றதன் மூலம் சரித்திரம் படைத்தது. அதன்பிறகு ஒரு சில மாதங்களில், `ஆல் வி இமேஜின் ஆஸ் லைட்', திரைப்பட விழாக்கள் மற்றும் விருதுகளை வென்று பிரபலமானது. நியூயார்க் திரைப்பட விமர்சகர்கள் வட்டம் மற்றும் டொராண்டோ திரைப்பட விமர்சகர்கள் சங்கம் உள்ளிட்ட மதிப்புமிக்க அமைப்புகளால் இது சிறந்த சர்வதேச திரைப்படமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு கோல்டன் குளோப் விருதுகளுக்கான இரண்டு பரிந்துரைகளும் செய்யப்பட்டுள்ளன. அதில், பாயல் கபாடியாவுக்கு சிறந்த இயக்குநருக்கான பரிந்துரையும் அடங்கும். 2024-ம் ஆண்டுக்கான சிறந்த படங்கள் குறித்த பிபிசி மற்றும் நியூயார்க் டைம்ஸ் உட்பட பல்வேறு பட்டியல்களில் இந்த திரைப்படம் இடம்பிடித்துள்ளது. மற்றொரு திரைப்படமும் இதேபோன்று பல அங்கீகாரங்களை பெற்றுள்ளது. இயக்குநர் சுசி தலாதியின் `கேர்ள்ஸ் வில் பீ கேர்ள்ஸ்' (Girls Will Be Girls) திரைப்படம் சன்டான்ஸ் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை வென்றது. இத்திரைப்படம் இளம் வயதில் இருந்து முதிர்வயதை அடையும் மாற்றங்களை மையமாக கொண்டது. கிரண் ராவின் லாபட்டா லேடீஸ் (Laapataa Ladies) இரண்டு மாதங்களுக்கு மேலாக முதல் 10 இந்திய நெட்ஃபிக்ஸ் (Netflix) படங்களில் ஒன்றாக இடம்பிடித்தது. இந்த ஆண்டு சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் 'லாபட்டா லேடீஸ்' திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் இது சர்ச்சைக்குரிய முடிவாக சிலரால் கருதப்பட்டது. ஆனால், 'லாபட்டா லேடீஸ்' ஆஸ்கர் விருதுக்கான தேர்வு பட்டியலில் இடம்பெறவில்லை. பிரிட்டிஷ்-இந்திய இயக்குநர் சந்தியா சூரியின் இந்தி திரைப்படமான `சந்தோஷ்', ஆஸ்கர் விருதுக்கு பிரிட்டன் தேர்வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்திய திரைப்படங்களின் இந்த திடீர் வெற்றி அலை ஒரு சிறந்த மாற்றத்தை குறிக்கிறதா அல்லது உலகளாவிய பார்வையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மாற்றமா? திரைப்பட விமர்சகர் சுப்ரா குப்தா, இந்த படங்கள் "ஒரே இரவில் தயாரிக்கப்பட்டவை" அல்ல என்று சுட்டிக்காட்டுகிறார். உதாரணமாக, `கேர்ள்ஸ் வில் பீ கேர்ள்ஸ்' படத்தின் இயக்குநர் சுசி தலாதி மற்றும் அதன் இணை தயாரிப்பாளரான ரிச்சா சதா ஆகியோர், கல்லூரியில் ஒன்றாக படித்தபோதே படத்திற்கான யோசனையை பகிர்ந்துகொண்டனர். "அவர்கள் பல ஆண்டுகளாக அந்த திரைப்படத்திற்காக பணியாற்றினர்" என குப்தா கூறுகிறார். "இந்த படங்கள் ஒன்றாக 2024 ஆம் ஆண்டில் வெளியாகி உரையாடல்களைத் தூண்டியது." இந்தத் திரைப்படங்களின் உலகளாவிய தாக்கத்திற்கு முக்கிய காரணம், அவற்றின் தரம் தான். மேலும் இத்திரைப்படங்கள் தனிமை, உறவுகள், அடையாளம், பாலினம் உள்ளிட்ட உலகளாவிய கருப்பொருள்களையும் ஆராய்வதில் வேரூன்றியுள்ளது. வலுவான பெண் குரல்கள் மற்றும் வழக்கத்திற்கு மாறான பெண்ணியக் கதைகளுடன், இந்தக் கதைகள் பிரதான இந்திய சினிமாவால் ஆராயப்படாத கருப்பொருள்களுக்குள் நுழைகின்றன. இந்தி, மராத்தி மற்றும் மலையாள மொழிகளில் தயாரிக்கப்பட்ட `ஆல் வீ இமேஜின் ஆஸ் லைட்' என்ற திரைப்படம், மும்பையில் உள்ள மூன்று புலம்பெயர்ந்த பெண்களுடைய வாழ்க்கையில் அனுதாபம், உறுதி மற்றும் உறவுகள் ஆகியவற்றைப் பேசுகிறது. இந்த திரைப்படம் தனிமையை பற்றிப் பேசுகிறது. சமூக-அரசியலை பற்றியும் பேசுகிறது. குறிப்பாக, அனு (திவ்யா பிரபா) என்ற கதாபாத்திரத்தின் காதல், ஷியாஸ் (ஹ்ரிது ஹாரூன்) உடனான அவரது பிணைப்பு, இந்து-முஸ்லிம் உறவு ஆகியவற்றை ஆராய்கிறது. தனது படங்களில் பெண்கள் நிதி ரீதியாக சுதந்திரமாக இருந்தாலும், அவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில், குறிப்பாக காதல் விஷயங்களில் வரம்புகளை, கட்டுப்பாடுகளை எதிர்கொள்கிறார்கள் என்று கபாடியா பிபிசியிடம் கூறினார். "என்னைப் பொறுத்தவரை, இந்தியாவில் காதல் அரசியலாக்கப்படுகிறது. குடும்பத்தின் கெளரவத்தையும் சாதியையும் பெண்கள் அதிகம் பற்றிக் கொண்டிருக்க வேண்டிய சூழல் இருப்பதாகத் தெரிகிறது. எனவே, ஒரு பெண் வேறு மதம் அல்லது வேறு சாதியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டால், அது ஒரு பிரச்னையாக மாறும். என்னைப் பொறுத்தவரை, இது உண்மையில் பெண்களைக் கட்டுப்படுத்துவதற்கான வழியாக பார்க்கிறார்கள்" என்றார். தலாதியின் `கேர்ள்ஸ் வில் பீ கேர்ள்ஸ்' படம், இமயமலையில் உள்ள ஒரு கடுமையான உறைவிடப் பள்ளியில் படிக்கும் 16 வயது சிறுமியின் கதை. பலவீனம் மற்றும் தீர்க்கப்படாத உணர்வுகளுடன் போராடும் அவரது தாயான அனிலா உடனான அவரது உடைந்த உறவு ஆகியவற்றைப் பற்றி கதை பேசுகிறது. மேலும் சிறுமியின் இளமைப் பருவம், தலைமுறைகளுக்கு இடையிலான மோதல்களையும் ஆராய்கிறது. இந்த திரைப்படம் இந்திய சினிமாவில் பொதுவாக பேசப்படாத கருப்பொருளை கொண்டுள்ளது எனக்கூறும் குப்தா, இத்திரைப்படம் பெண்களை மிகவும் அக்கறையான, அன்பான பார்வையில் இருந்து பார்க்கிறது என்கிறார். கிரண் ராவின் 'லாபட்டா லேடீஸ்' படம் வணிக ரீதியாக வெற்றிப் பெறவில்லை. ஆனால், பார்வையாளர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்த மாதம் லண்டனில் நடந்த 'பாஃப்டா' (BAFTA) திரையிடலில், கிரண் ராவ் தற்போதைய தருணத்தை "இந்திய பெண்ணுக்கு இது மிகவும் சிறப்பானத் தருணம்" என்று விவரித்தார். இதுபோன்ற கதைகள் இனி தொடர்ந்து படமாக்கப்படும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். இந்தத் திரைப்படம் இரண்டு புதுமணத் தம்பதிகள் தங்கள் முக்காடு காரணமாக ரயிலில் தற்செயலாக இடம் மாறிச் செல்கின்றனர். அவர்கள் எப்படி இந்த குழப்பத்தை சரி செய்கிறார்கள் என நகைச்சுவையாக கதை நகர்கிறது. இது ஆணாதிக்கம், பெண்களின் அடையாளம் மற்றும் பாலின பாகுபாடு பற்றிய பார்வையை வழங்குகிறது. இது பல காலமாக ஆண்களை மையமாகக் கொண்ட முக்கிய இந்திய திரைப்படங்களில் இருந்து மாறுபட்டு நிற்கிறது. "நம் சமூகத்தில் பலர் ஆணாதிக்க மனநிலையில் இருக்கிறோம், ஏனென்றால் நாம் அப்படித்தான் வளர்க்கப்பட்டோம்." எனத் திரையிடலுக்குப் பிறகு படத்தின் இணை தயாரிப்பாளரான பாலிவுட் நட்சத்திரம் ஆமீர் கான் கூறினார். "ஆனால் நாம் புரிந்துகொள்ள வேண்டும், குறைந்தபட்சம் இந்த வகையான சிந்தனையிலிருந்து வெளியே வர ஒருவருக்கொருவர் உதவ முயற்சிக்க வேண்டும்." என்றார். இந்த ஆண்டு பிரிட்டிஷ்-இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் சந்தியா சூரி இயக்கிய இந்தி மொழிப் திரைப்படமான `சந்தோஷ்', பிரிட்டனில் இருந்து ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. 44 நாள் அட்டவணையில் முழுக்க முழுக்க இந்தியாவில் படமாக்கப்பட்டது, இது பெரும்பாலும் பெண் குழுவினரைக் கொண்டிருந்தது. இந்திய நடிகர்களான ஷஹானா கோஸ்வாமி மற்றும் சுனிதா ராஜ்பர் நடித்த, `சந்தோஷ்' திரைப்படம், பிரிட்டன், இந்தியா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் முழுவதும் உள்ள சினிமா பிரமுகர்கள் மற்றும் நிறுவனங்களால் இணைந்து தயாரிக்கப்பட்டது. இந்தப் படம் பெண்களுக்கு எதிரான வன்முறையைப் பற்றிய இந்தியக் கதையாகும், இது ஒரு திரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. கோஸ்வாமி கூறுகையில், `சந்தோஷ்' மற்றும் `ஆல் வீ இமேஜின்' படத்தின் வெற்றியானது, வெவ்வேறு நாடுகளுக்கு மத்தியில் பரிமாறப்பட்ட கலை மற்றும் திரைப்படத் துறையின் விரிவாக்கத்தை சுட்டிக்காட்டுகிறது. "இந்திய திரைப்படங்களுக்கு [குறிப்பிட்ட] கலாசார சூழல் தேவை என்று நாம் கருதுகிறோம். ஆனால் அது அப்படி இல்லை. உணர்வு ரீதியாக இயக்கப்படும் எந்தவொரு படமும் அது எங்கு எடுக்கப்பட்டது என்பதை பொருட்படுத்தாமல், உலகளவில் எதிரொலிக்கும்" என்று அவர் பிபிசியிடம் கூறினார். 'ஆல் வீ இமேஜின் ஆஸ் லைட்', 'கேர்ள்ஸ் வில் பீ கேர்ள்ஸ்' மற்றும் 'சந்தோஷ்' ஆகிய மூன்று படங்களும் ஒரு பொதுவான பண்பைப் பகிர்ந்துகொள்கின்றன. இந்த படங்கள், நாடு கடந்த கூட்டுத் தயாரிப்பால் எடுக்கப்பட்டவை. இது எதிர்காலத்திற்கான ஒரு ஃபார்முலாவாக இருக்கலாம் என்று கோஸ்வாமி ஒப்புக்கொள்கிறார். "எடுத்துக்காட்டாக, ஒரு பிரெஞ்சு தயாரிப்பாளரின் இந்திய திரைப்படம், ஒரு பரந்த திரைப்படத் துறையைப் பின்தொடரும் பிரெஞ்சு பார்வையாளர்களை ஈர்க்கும் வாய்ப்பைப் பெறுகிறது. இது உலகளவில் அணுகக்கூடியதாகவும் பொருத்தமானதாகவும் அந்த படைப்பை மாற்றும். " என்கிறார். பாலிவுட்டில் கூட, இந்த ஆண்டு சில பெண்கள் நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. சுதந்திரமாகச் சிந்திக்கும் பெண்களைக் கடத்திச் செல்லும் அசுரனுடன் சண்டையிடும் பெண்ணைப் பற்றிய திகில் மற்றும் நகைச்சுவையான `ஸ்ட்ரீ 2' திரைப்படம். இது மாதக்கணக்கில் திரையரங்குகளில் ஓடியது. ஆண்டின் இரண்டாவது பெரிய வெற்றிப் படமானது. ஸ்ட்ரீமிங் தளங்களில், சஞ்சய் லீலா பன்சாலியின் நெட்ஃபிக்ஸ் தொடரான `ஹீரமண்டி: தி டயமண்ட் பஜார்', சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையில் நடந்த பெண் வெறுப்பு மற்றும் சுரண்டல் பற்றிய ஆய்வாக இந்த படம் இருந்தது. இந்த ஆண்டு கூகுள் உள்ளிட்ட தேடுப்பொறிகளில் அதிகம் தேடப்பட்ட டிவி நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். அவர்களின் வெற்றி, இத்தகைய கதைகளுக்கான வளர்ந்து வரும் எதிர்பார்ப்பின் அடையாளமாகத் தெரிகிறது. ரசிகர்கள் எதிர்பார்ப்பது போல் பொழுதுபோக்கு மதிப்பை தியாகம் செய்யாமல், முக்கியக் கருப்பொருள்களை மைய நீரோட்ட சினிமாவால் பேச முடியும் என்பதை நிரூபிக்கிறது. பல சவால்கள் இருந்தபோதிலும், 2024 இந்தியாவிலிருந்து வரும் பெண் குரல்களின் உலகளாவிய சக்தியையும், மாறுபட்ட கதைகளுக்கான தேவையையும் எடுத்துக்காட்டுகிறது. இந்தியத் திரைப்படத் துறையானது அதன் சுயாதீனத் திரைப்படங்களுக்கான பரவலான விநியோகத்தைப் பெறுவதற்கும் மேலும் பலதரப்பட்ட மற்றும் சமமான திரைப்பட நிலப்பரப்பிற்கு வழி வகுக்கும் வேகம் முக்கியமானது. அதன் சுயாதீனத் திரைப்படங்களின் விநியோகத்தை விரிவுபடுத்துவதற்கும், மேலும் மாறுபட்ட மற்றும் சமத்துவத் திரைப்படக் காட்சி அமைப்பை உருவாக்குவதற்கும், இந்தியத் திரைப்படத் துறை இந்தப் போக்கைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post