இன்றைய நவீன நாட்காட்டியை உருவாக்க வரலாற்றில் தொலைக்கப்பட்ட 10 நாட்கள் பற்றி தெரியுமா?

post-img
இன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படும் புத்தாண்டு கொண்டாட்டம் எப்போது தொடங்கியது? இன்று நாம் பின்பற்றும் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான நாட்காட்டி முறை எப்போது தொடங்கியது தெரியுமா? முந்தைய கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது. நாட்காட்டி என்பது கிட்டத்தட்ட அனைத்து நாகரிகங்களிலுமே, சமூகரீதியாக மிக முக்கியப் பங்காற்றக்கூடிய ஒன்று. நாட்காட்டிகளைப் பொறுத்தவரை, அவற்றிலும் அறிவியல் மற்றும் மத அடிப்படையிலான கூறுகளைப் பிரித்துப் பார்ப்பது சற்று கடினமான ஒன்றாகவே நீண்ட காலமாக இருந்து வந்தது. ஆனால், ரோமன் நாட்காட்டிகளுக்குப் பிறகு உலகளாவிய பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள கிரிகோரியன் நாட்காட்டி என்றழைக்கப்படும், நாம் இப்போது பரவலாகப் பயன்படுத்தும் நாட்காட்டி தான், புவி முழுவதும் வாழும் அனைத்து நாகரிகங்களும் இப்போது ஒருமனதோடு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அது எப்படி உருவாக்கப்பட்டது? இப்போதைய நவீன நாட்காட்டியும் அதில் கொண்டாடப்படும் புத்தாண்டு தேதியும் எப்படி முடிவு செய்யப்பட்டது? நாட்காட்டிகள் முன்பு பல்வேறு நாகரிங்களுக்கு ஏற்ப தனித்தனியாக இருந்தன. பாபிலோன், எகிப்து, சீனா, கிழக்காசியா, மாயன், ஆஸ்டெக், ரோமன், ஜூலியன், யூத, இஸ்லாமிய, பிரெஞ்சு ரிபப்ளிக் என்று பல்வேறு வகை நாட்காட்டிகள் இருந்தன. அனைத்து நாட்காட்டிகளுமே இரவு, பகல், நிலவின் சுழற்சி, பருவ மாற்றங்கள், சூரியனின் நகர்வுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவைதான். ஆரம்பகாலத்தில் நம்முடைய முன்னோர்களுக்கு சூரியன், நிலா ஆகியவற்றின் நகர்வுகளைக் கணக்கிடுவதற்குரிய எந்தவித ஞானமும் இருக்கவில்லை. அவர்கள் அடிப்படை எண் கணிதத்தை அறிந்த பிறகு, கணக்கிலடங்கா நாட்களுக்கு இரவுகளிலும் பகல்களிலும் மிகக் கவனமாக வான் செயற்பாடுகளைக் கணக்கிட்டு, நாட்காட்டி என்ற ஒன்றை உருவாக்கத் தொடங்கினார்கள். நேரத்திற்கும் நாட்காட்டிக்கும் பெரிய வேறுபாடு உள்ளது. நேரம் என்பது எப்போதுமே உள்ளது. ஆனால், நாட்காட்டி என்பது, அந்த நேரத்தில் இருக்கும் கடந்த காலத்தின் பதிவுகளை ஒருங்கிணைக்கவும் எதிர்காலத்தைத் திட்டமிடவும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது. “நாட்காட்டிகளில் இருக்கும் பொதுவான அடிப்படை, நேரத்தை நாட்களாகவும் மாதங்களாகவும் ஆண்டுகளாகவும் கணக்கிடுவது தான். இதில், ஒரு நாள் என்பது பூமி தன்னைத் தானே சுற்றிக்கொள்ளும் கால அளவு அல்லது மனிதர்களுடைய பார்வையில் சூரியன் அதன் பயணத்தைத் தொடங்கி, மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து முடிப்பதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் என்ற அளவில் கணக்கிடப்பட்டது,” என்று ‘மேப்பிங் டைம்: தி கேலண்டர் அண்ட் இட்ஸ் ஹிஸ்டரி’ என்ற நூலில் எட்வர்ட் கிரஹாம் ரிச்சர்ட்ஸ் குறிப்பிடுகிறார். துருவப் பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில், இரவு, பகலின் சுழற்சியைப் பொறுத்து நாட்கள் கணக்கிடப்பட்டன. ஒரு நாள் என்பது நம்முடைய உடலோடு ஆழமாகக் கலந்துவிட்ட ஓர் உணர்வு. இரவு என்றால் ஓய்வெடுக்க வேண்டும், பகல் என்றால் செயல்பட வேண்டும். இது சுழற்சி முறையில் மாறுபடலாமே தவிர, ஆனால் அனைத்து உயிர்களுக்குமே இரவு பகல் சுழற்சிக்குள் ஒரு வாழ்க்கை முறை உண்டு. மாதக் கணக்கீடு, நிலவின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதைப் போலவே, பருவநிலையில் ஏற்படும் மாற்றங்களின் சுழற்சியைப் பொறுத்து ஆண்டுகள் கணக்கிடப்பட்டன. கிரேக்க கவிஞர் ஹீசியோட், இத்தகைய பருவநிலைகளையும் பல்வேறு இயற்கை நிகழ்வுகளையும் ‘பணிகளும் நாட்களும்’ என்ற தனது படைப்பில், கிறிஸ்து பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கும் முன்பே பதிவு செய்துள்ளார். இப்போது பயன்பாட்டிலுள்ள நவீனகால நாட்காட்டி முதலில் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக ஜூலியன் நாட்காட்டி தான் அமலில் இருந்தது. அவர் ரோம் ஆட்சியாளரான பிறகு தான், 12 மாதங்களாகப் பிரிக்கப்பட்ட நாட்காட்டி உருவாக்கப்பட்டது. அதில் தான் முதன்முதலாக ஒவ்வொரு சூரிய ஆண்டிலும் கூடுதலாக இருக்கும் கால் பகுதி நாளை ஈடுசெய்வதற்காக, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இடைசெருகப்பட்ட ஒரு நாள் கொண்டுவரப்பட்டது. அதன்படி, பிப்ரவரி மாதத்தில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாள் கூடுதலாக இருக்கும் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்த நாட்காட்டி கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை நாளைக் கணக்கிடுவதில் குழப்பங்களை ஏற்படுத்தின. ஜூலியன் நாட்காட்டியில், ஓராண்டுக்கான கால அளவு 11 நிமிடங்கள், 14 விநாடிகள் நீளமாக இருந்தது. அந்த நாட்காட்டி உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் இந்தப் பிசிறு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், அடுத்தடுத்து வந்த நூற்றாண்டுகளில், அது வானியல் கணக்குகளில் சில குழப்பங்களை ஏற்படுத்தின. ஈஸ்டர் நாள் கடைபிடிக்கப்பட்டபோதுதான், இந்தப் பிசிறு பெரும்பான்மையாக கவனத்தை ஈர்த்தது. ஒவ்வோர் ஆண்டும் வசந்தகால சம இரவு பகல் (Vernal Equinox) நாளுக்குப் பிறகு தோன்றும் முதல் முழு நிலவு நாளை அடிப்படையாக வைத்து கொண்டாடப்பட்டதாகவும் அதைச் சரியாகக் கணக்கிடுவதில் ஜூலியன் நாட்காட்டி குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் 1921ஆம் ஆண்டு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பதிப்பகம் வெளியிட்ட ‘தி கேலண்டர்: இட்ஸ் ஹிஸ்டரி, ஸ்டிரக்ச்சர் அண்ட் இம்ப்ரூவ்மென்ட்’ என்ற நூலில் அதன் ஆசிரியர் அலெக்சாண்டர் பிலிப் குறிப்பிட்டுள்ளார். “ஜூலியன் நாட்காட்டியின்படி, ஒராண்டுக்கு 365.25 நாட்கள். ஆனால், உண்மையில் ஓராண்டுக்கு 365.24219 நாட்கள். இதனால், ஒவ்வோர் ஆண்டிலும் சிற்சில நிமிடங்கள் என்ற அளவில் உண்மையான கால அளவு மாறிக் கொண்டே வந்தது. அதாவது 128 ஆண்டுகளுக்கு ஒரு நாள் என்ற கணக்கில் வானியல் நிகழ்வுகள் முன்னதாகவே நிகழ்ந்துகொண்டிருந்தன,” என்று எட்வர்ட் கிரஹாம் ரிச்சர்ட்ஸ் மேப்பிங் டைம் நூலில் குறிப்பிட்டுள்ளார். ஜூலியன் கணக்குப்படி பார்க்கையில், கணக்கிடப்படும் நாளுக்கு முந்தைய நாளிலேயே வசந்த கால சம இரவு பகல் முடிந்துவிட்டிருந்தது. கிபி.325ஆம் ஆண்டில் கிறிஸ்த்தவ ஆலயங்களுக்கான சபையாக இருந்த நைசியா, ஈஸ்டர் கொண்டாட்ட நாளை அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களுக்கும் பொதுவாக வைக்க வேண்டும் என்றது. அதன்படி, “கி.பி.325இல் வசந்தகால சம இரவு பகல் மார்ச் 20ஆம் நாள் மாலையில் தொடங்கியிருந்தாலும், அந்த நாள் மார்ச் 21 என்று நிர்ணயிக்கப்பட்டது. மேலும், ஜூலியன் நாட்காட்டியில் கூடுதலாக இருந்த அந்த 11 நிமிடங்கள், மற்ற நாள் கணக்கீடுகளில் குழப்பங்களை ஏற்படுத்தியது பின்னர் கண்டறியப்பட்டது. அது மட்டுமின்றி, மார்ச் 21 சம இரவு பகல் நாளாகக் கருத்தில் கொள்ளப்பட்டாலுமே கூட, அந்த நாட்காட்டியின்படி ஈஸ்டர் பெருவிழாவை கொண்டாடும் நாளில் மாற்றங்கள் வந்து கொண்டே இருந்தன. இந்த விஷயம் கிறிஸ்தவ ஆலயங்களுக்கான சபையின் முன்பாகப் பல ஆண்டுகளுக்குக் கொண்டு வரப்பட்டது. இறுதியாக 1572ஆம் ஆண்டில், 13ஆம் கிரிகோரி போப் ஆனபோது, அவர் முன்பாக இந்தக் கோரிக்கைகள் கொட்டிக் கிடந்தன. இறுதியாக, வானியலாளரும் காலக்கணிப்பு வல்லுநருமான அலோய்சியஸ் லிலியஸ் இதற்கு முன்வைத்த திட்டம், போப் 13ஆம் கிரிகோரியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1577ஆம் ஆண்டில், அவர் லிலியஸ் முன்வைத்த திட்டத்தை காலக்கணிப்பு வல்லுநர்கள், கணிதவியலாளர்களின் குழு ஒன்றை அமைத்து ஆராய்ந்தார். இறுதியாக அவர்களுடைய கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு, 1582 பிப்ரவரி 24ஆம் தேதியன்று, புதிய நாட்காட்டிக்கான ஒப்புதலை வழங்கினார். அந்த ஒப்புதல் படிவத்தில், “வசந்தகால சம இரவு பகல் நாளை மீண்டும் ஒன்றுபோல் நிலைநாட்டுவதற்காக, மார்ச் 21 அதன் தோற்ற நாளாகக் கடைபிடிக்கப்படும். அதோடு, இது அமலுக்கு வரும் ஆண்டான 1582ஆம் ஆண்டில், பத்து நாட்களை நீக்க வேண்டும். அதன்படி, 1582இல் அக்டோபர் 4ஆம் தேதிக்குப் பிறகு வரக்கூடிய நாள் அக்டோபர் 15ஆம் தேதியாக குறிப்பிடப்படும்,” என்று உத்தரவிட்டதாக அலெக்சாண்டர் பிலிப் தனது நூலில் தெரிவித்துள்ளார். லிலியஸின் இந்த நாட்காட்டி முறை அனைவரும் பின்பற்ற மிக எளிமையாக இருக்காது என்று பலரும் இதுகுறித்த ஆலோசனையின்போது கூறினார்கள். அதைச் சரிக்கட்டுவதற்காக அன்டோனியோ கிக்லியோ என்பவரால் இதைப் பயன்படுத்துவதற்கு வழிகாட்டும் கையேடு ஒன்று 1585ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதற்குப் பிறகுதான் இப்போது நடைமுறையில் இருக்கும் நவீனகால நாட்காட்டியான கிரிகோரியன் நாட்காட்டி அமலுக்கு வந்தது. போப் 13ஆம் கிரிகோரியின் உத்தரவுக்குப் பிறகு, ரோம ஆன்மீக ஆளுமையின்கீழ் இருந்த நாடுகள் இந்த நாட்காட்டி முறையை ஏற்றுக்கொண்டன. இந்தப் புதிய நாட்காட்டி வடிவத்தை பிரான்ஸ் 1582 டிசம்பரில் பின்பற்றத் தொடங்கியது. சுவிட்சர்லாந்து, கத்தோலிக்க நெதர்லாந்து ஆகியவை 1583ஆம் ஆண்டில் பின்பற்றத் தொடங்கின. புரொடெஸ்டன்ட் மதத்தைப் பின்பற்றிய நாடுகள் சில காலத்திற்கு இதை மறுத்துக் கொண்டிருந்தனர். பிறகு, 1699இல் அவையும் பின்பற்றத் தொடங்கின. பிரிட்டனை பொறுத்தவரை 1750ஆம் ஆண்டில் கேலண்டர் நியூ ஸ்டைல் சட்டம் இயற்றப்பட்டு, 1752ஆம் ஆண்டில் தான் கிரிகோரியன் நாட்காட்டி பின்பற்றப்பட்டது. அதுவரை பிரிட்டனில் ஜூலியன் நாட்காட்டி பயன்பாட்டில் இருந்ததால், கிரிகோரியன் காலகட்டத்தில் செய்ததைப் போலவே 1752ஆம் ஆண்டிலும் ஜூலியன் நாட்காட்டி ஏற்படுத்திய நேர இழப்புகளை ஈடுகட்டுவதற்கு 11 நாட்களைத் தியாகம் செய்ய வேண்டியிருந்தது. ஆகவே, செப்டம்பர் 2ஆம் தேதிக்கு அடுத்த நாள் செப்டம்பர் 14 எனக் குறிப்பிடப்பட்டது. சில காலத்திற்கு இது பிரிட்டன் மக்கள் மத்தியில் பெருவாரியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மக்கள் கூட்டங்கள் அவ்வப்போது கூடி, “எங்கள் 11 நாட்களைத் திருப்பிக் கொடு” என்று முழக்கமிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார் அலெக்சாண்டர் பிலிப். ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு நாடாக சிறுகச் சிறுக கிரிகோரியன் நாட்காட்டி முறையைப் பின்பற்றத் தொடங்கின. இதைப்போலவே, புத்தாண்டு கொண்டாட்டம் என்பது எப்போதுமே ஜனவரி 1ஆம் தேதியாக இருக்கவில்லை. புத்தாண்டு கொண்டாட்டம் என்பது கடந்த சில நூறு ஆண்டுகளில் வந்ததில்லை. மெசபொதேமிய நாகரிகத்தில் கிமு 2000 ஆண்டிலேயே புத்தாண்டு கொண்டாட்டம் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக பிரிட்டானிக்கா என்ற வரலாறு, இலக்கியத்திற்கான இணையதளம் குறிப்பிடுகிறது. மேலும், பாபிலோனியாவில் வசந்தகால சம இரவு பகலுக்குப் பிறகு வரும் பௌர்ணமியில் மார்ச் மாத மத்தியில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அதுவே, அஸ்ஸிரியாவில் இலையுதிர்கால சம இரவு பகலுக்குப் பிறகு வரும் பௌர்ணமியில், செப்டம்பர் மாத நடுவில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. கிரேக்க நாகரிகத்தில் டிசம்பர் 21, குளிர்கால கதிர்த்திருப்பத்தின்போது (Winter Solstice) கொண்டாடப்பட்டது. ரோம ரிபப்ளிக் நாட்காட்டியின்படி, மார்ச் 1ஆம் தேதி புத்தாண்டாக கொண்டாடப்பட்டது. ஆனால், கிமு 153ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டாக கடைபிடிக்கப்பட்டது. அது கிமு 46 வரை தொடர்ந்தது. அதற்குப் பிறகு, மத்திய காலத்தின்போது மார்ச் 25ஆம் தேதி புத்தாண்டாக கொண்டாடப்பட்டது. ரோமன் கத்தோலிக்க திருச்சபை 1582ஆம் ஆண்டில் கிரிகோரியன் நாட்காட்டியை அமலுக்குக் கொண்டுவந்த பிறகு, ஜனவரி 1 மீண்டும் ஆண்டுப் பிறப்பாக கடைபிடிக்கப்பட்டது. அதை, ஸ்காட்லாந்து 1660இல், ஜெர்மனியும் டென்மார்க்கும் 1700இல், இங்கிலாந்து 1752இல், ரஷ்யா 1918இல் கடைபிடிக்கத் தொடங்கினர். இஸ்லாமிய நாட்காட்டியின்படி முஹர்ரம் நாளில் புத்தாண்டு கடைபிடிக்கப்படுகிறது. சீன புத்தாண்டின்படி, ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. ரோமானியர்கள் ஜேனஸ் என்ற கடவுளை முதன்மைப்படுத்தி முதல் மாதத்திற்கு ஜனவரி என்று பெயரிட்டார்கள். ஜேனஸ், புதிய தொடக்கங்களுக்கான கடவுள் என்று ரோமானிய புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ‘ஜேனஸ் இன் ரோமன் லைஃப் அண்ட் கல்ட்’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கடவுளுக்கு இரண்டு முகங்கள். அதில் ஒன்று கடந்த காலத்தையும் இன்னொன்று எதிர்காலத்தையும் பார்க்கும் என்றும் ஒரு கூற்று முன்வைக்கப்படுகிறது. ஆனால், ‘ஜேனஸ் இன் ரோமன் லைஃப்’ நூலின் ஆசிரியர், “ரோமானிய நாகரிகத்தில் குறிப்பிட்ட காலகட்டம் வரையிலுமே உருவ வழிபாடு என்பது இருக்கவில்லை. இதுவரை மூன்று முறை மட்டுமே ஜேனஸின் சிலை எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அவற்றில் இரண்டு சிலைகள் ஜேனஸின் உருவ சித்தரிப்போடு பொருந்தவே இல்லை. இன்னொன்று இரண்டு முகங்களோடு கிடைத்துள்ளன. அதுதான் ஜேனஸ் என்று கூறப்பட்டது. ஆனால், ரோமானிய கலாசாரத்தில் ஹெர்மிஸ் என்ற கடவுள் தான் பெரும்பாலும் இரண்டு முகங்கள் உடையவராக சித்தரிக்கப்பட்டுள்ளார். ஜேனஸ் மனித வடிவில் வழிபடப்படவே இல்லை. பகன் நம்பிக்கையின்படி, அவர் ஒரு திறவுகோலாக, கதவு வழியாகவே சித்தரிக்கப்பட்டார். சுமார் 170 ஆண்டுகள் வரை ரோமானிய கலாசாரத்தில் மனிதர் அல்லது மிருகம் போன்ற உருவ வழிபாடு இருக்கவில்லை,” என்று கூறியுள்ளார். இருப்பினும், சித்தாந்தப்படி ஜேனஸ் என்ற கடவுளுக்கு கடந்த காலம், எதிர்காலத்தைப் பார்ப்பதற்கு இரண்டு முகங்கள் இருப்பதாகச் சொல்லப்படுவதைப் போலவே, பழைய கெட்ட பழக்கங்களை விட்டொழித்து, புதிய நல்ல பழக்கங்களைப் பின்பற்ற வேண்டுமென்ற கருத்துகளின் பதிவுகளும் வரலாற்றில் பழங்காலம் வரை காணப்படுவதாக பிரிட்டானிக்கா கூறுகிறது. இந்தப் பழக்கத்தை 4,000 ஆண்டுகளுக்கு முன்பு பாபிலோனியர்கள் தொடங்கி வைத்ததாகப் பதிவுகள் காணப்படுகின்றன. இந்தப் பழக்கத்தின் நீட்சியாக, ஆண்டுப் பிறப்பின் முதல்நாளில் ஒருவர் என்ன செய்கிறார் என்பது அந்த ஆண்டு முழுவதும் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை வருவதுரைப்பதாக இன்றளவும் நம்பிக்கைகள் பின்பற்றப்படுகின்றன. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post