திமுகவுக்கு சிக்கல்! அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அதிமுக கேவியட் மனு

post-img
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியை மிரட்டி இழுத்து சென்று பலாத்காரம் செய்த வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தை உலுக்கி உள்ள இந்த வழக்கால் தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது திமுகவுக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி கடந்த மாதம் 23ம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் தனது காதலனுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற நபர் அவரது காதலனை தாக்கிவிட்டு மாணவியை மிரட்டி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் என்பவரை அதிரடியாக கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர் மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்தது தெரியவந்தது. மேலும் கைதான ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இது ஒருபுறம் இருக்க மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவான எப்ஐஆரில் மாணவியின் நடத்தையை தவறாக சித்தரிக்கும் வகையிலான வார்த்தைகள் இடம்பெற்றதாக எதிர்க்கட்சி தலைவர்கள் போலீசாரை விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் இந்த வழக்கு தமிழக அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தான் இந்த வழக்கில் சார் என்ற நபரை, மாணவி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டு இருந்தார். அவர் யார் என்பது புதிராகவே உள்ளது. அதோடு தற்போது வரை இந்த வழக்கில் முதல்வர் முக ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே தான் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கறிஞர்கள் வரலட்சுமி மற்றும் மோகன்தாஸ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் வி லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது மாணவி பாலியல் வழக்கில் எப்ஐஆர் கசிவு எப்படி நடந்தது? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை தமிழக அரசிடம் கேட்டனா். அரசு அதிகாரிகள் நடத்தை விதிகளில் பத்திரிகையாளர்களை சந்திக்கும் முன் அரசு அனுமதி பெற வேண்டுமா? என்பது குறித்தும் முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்தும் அதற்கு யார் பொறுப்பு என்பது குறித்தும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கேட்டு கொண்டது. அதுமட்டுமின்றி மாணவி பாலியல் வழக்கு குறித்து சிறப்பு விசாரணை குழு அமைக்கவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து சென்னை அண்ணா நகர் துணை ஆணையர் சினேக பிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் கொண்ட மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அதிமுக நாடி உள்ளது. அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‛‛அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறது. இந்த சிறப்பு விசாரணை குழுவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட வாய்ப்புள்ளது. தமிழக அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டால் தங்கள் தரப்பு வாதத்தையும் ஏற்க வேண்டும்'' என்று கூறி அந்த கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் தற்போது தமிழக அரசுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post