அண்ணா பல்கலை. பேராசிரியர்களுக்குப் பறந்த சுற்றறிக்கை.. பதிவாளர் அதிரடி நடவடிக்கை

post-img
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் டீன்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கோட்டூர்புரம் காவல் துறையினர் இந்த வழக்கு தொடர்பாக ஞானசேகரன் (33) என்பரை கைது செய்தனர். இச்சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மாணவி உரிய நீதி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கில் குற்றவாளியான ஞானசேகரனை போலீஸார் கைது செய்துள்ள நிலையில், அவரைக் காப்பாற்ற சிலர் முயற்சி செய்து வருவதாகவும், இச்சம்பவத்தை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. தொடர்ந்து, சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இதன்படி, பாலியல் வன்கொடுமை குறித்து விசாரணை செய்ய 3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. பின்னர், ஞானசேகரன் வீட்டில் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்ட குழுவினர் பல ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். ஞானசேகரன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞானசேகரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் டீன்கள் மற்றும் துறை தலைவர்களுக்கு பல்கலைக்கழக பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அனைத்து தெருவிளக்குகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் முழுமையாக செயல்படுகின்றனவா என்பதை சரிபார்க்கவும். உதவி மேசை செயல்படுவதையும் மாணவர்களுக்கு உதவ போதுமான பணியாளர்கள் இருப்பதையும் உறுதி செய்யவும். வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் பிற துறை சார்ந்த வசதிகளில் தேவைப்படும் மேம்பாடுகள் குறித்து கருத்துத் தெரிவிக்க, துறை தலைவர்களுடன் அவ்வப்போது சந்திப்புகளை நடத்துங்கள். உயர்தர உணவு வழங்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த, உணவகத்தை அவ்வப்போது ஆய்வு செய்யவும். கட்டுமானத் தொழிலாளர்கள் எந்த சூழ்நிலையிலும் வேலை நேரத்திற்குப் பிறகு வளாகத்தில் தங்குவதில்லை என்பதை உறுதிப்படுத்தவும். வளாகத்திற்குள் வெளியாள்கள் வாகனங்களை நிறுத்துவதைத் தடுக்கவும். அங்கீகரிக்கப்படாத வாகனங்கள் என்றால், கண்டுபிடிக்கப்பட்டு காவல்துறையில் புகார் அளிக்கவும். நாள்தோறும் பாதுகாப்புப் பணியாளர்களால் உள்ளூர் ரோந்துக்கு ஏற்பாடு செய்யுங்கள், குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில். பழைய மற்றும் பயன்படுத்த முடியாத சாதனங்கள், மரச்சாமான்கள் ஆகியவற்றிற்கான செயல்முறையை விரைவுபடுத்துங்கள். ஏதேனும் சிக்கல்கள் அல்லது குறைகளை நிவர்த்தி செய்ய பாலியல் துன்புறுத்தல் தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பான ஆசிரியர்களுடன் வழக்கமான மாதாந்திர சந்திப்புகளை நடத்துங்கள். 24 மணி நேரமும் சுகாதார மையம் செயல்படுவதையும், மாணவர்களின் குறைகள் மற்றும் அவசரநிலைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் திறனையும் உறுதிசெய்யவும். வெளியாள்களுக்கு வளாக அணுகலைக் கட்டுப்படுத்துங்கள். ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும். வெளிநபர்கள் வளாகத்தை நடைபயிற்சி அல்லது வேறு கல்வி சாரா நோக்கங்களுக்காக பயன்படுத்துவதைத் தடுக்கவும். மாணவர்கள் தங்கள் அடையாள அட்டைகளை எல்லா நேரங்களிலும் அணிந்திருக்க வேண்டும். மாணவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கூடுதல் தெருவிளக்குகள் தேவைப்படும் பகுதிகள் குறித்து மாணவர்கள் கருத்து தெரிவிக்கலாம். அதேப்போன்று கேமராக்கள் அல்லது பிற வசதிகள் எதுவாக இருந்தாலும் தெரிவிக்கலாம். கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் கலாசார நிகழ்ச்சிகளுக்கு, காவல்துறை பாதுகாப்பு கோரப்பட வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பிற்காக காவலன் உதவி செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு மாணவர்களுக்குத் தெரிவிக்கவும். மாணவர்கள் தங்கள் அடையாள அட்டையை கொண்டுவர மறந்துவிட்டால், அவர்களின் பெயர், பதிவு எண் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை பாதுகாப்புப் பணியாளர்களால் பராமரிக்கப்படும் பதிவேட்டில் நேரம் மற்றும் வெளியேறும் நேரத்தை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post