சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்வதா? ஆளுநர் ரவிக்கு ராமதாஸ், அன்புமணி கடும் கண்டனம்!

post-img
சென்னை: ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்பும் வகைகளில் தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்டதாக பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் தேசிய கீதம் முதலில் இசைக்கப்படவில்லை என கூறி ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்ததற்கு அன்புமணி கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் ஆளுனர் புரிந்து கொள்ள வேண்டும். ஆளுனருக்கு உரிய மரியாதை அரசு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு , பெண்களுக்கு பாதுகாப்பு, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள், உழவர்களின் எண்ணிக்கையிலடங்காத கோரிக்கைகள், பட்டியலின மக்களின் தேவைகள் என விவாதிக்கப்படுவதற்கும், செயல்படுத்தப்படுவதற்கும் ஏராளமான விவகாரங்கள் உள்ளன. அவற்றை விடுத்து, கவனத்தை திசைதிருப்பும் வகையிலான எந்த செயலையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவை தவிர்த்திருக்கப்பட வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் ஆளுனர் இல்லாமலேயே ஆளுனர் உரை படிக்கப்பட்டிருக்கிறது. உரையை படிப்பதற்காக வந்த ஆளுனர், ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களைக் கூறி, உரையை படிக்காமல் வெளிநடப்பு செய்திருப்பதை ஏற்க முடியாது. சட்டப்பேரவையில் பேரவைத்தலைவரால் படிக்கப்பட்ட ஆளுனர் உரையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான எந்த முக்கிய அறிவிப்பும் இடம் பெறாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாட்டின் இன்றைய தலையாய பிரச்சினை சமூகநீதி தான். ஆபத்தில் இருக்கும் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்; அதன் அடிப்படையில் முழுமையான சமூகநீதியை நிலை நிறுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நானே நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். அது குறித்த அறிவிப்பு ஆளுனர் உரையில் இடம் பெறும் என்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் எதிர்பார்த்தனர். ஆனால், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பான எந்தவித அறிவிப்பும் ஆளுனர் உரையில் இடம்பெறவில்லை. இது மிகப்பெரிய துரோகமும், சமூக அநீதியும் ஆகும். அதற்கு மாறாக, தேசிய அளவில் 2021&ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டியதுடன் தனது கடமையை தமிழக அரசு முடித்துக் கொண்டது. இதன்மூலம் சமூகநீதியில் விளம்பர மாடல் அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதும், அடுத்தவர் மீது பழி போட்டு கடமையைச் செய்வதிலிருந்து தப்பித்துக் கொள்ள துடிப்பதும் உறுதியாகியிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இதுவரை ஒரே ஒரு புதிய மருத்துவக் கல்லூரி கூட அமைக்கப்படவில்லை; அதற்கான அறிவிப்பு கூட வெளிவரவில்லை. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிக்கப்படவில்லை. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற இலக்கை எட்ட இன்னும் 6 மாவட்டங்களில்; புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும். அது குறித்த அறிவிப்பு ஆளுனர் உரையில் இடம் பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், ஏமாற்றம் மட்டும் தான் பரிசாக கிடைத்துள்ளது. இந்தியாவில் சிறிய மாநிலங்களில் ஒன்றான பஞ்சாபில் புதிய அரசு பதவியேற்று 33 மாதங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அரசு வேலைகள் வழங்கப் பட்டிருக்கின்றன. ஆனால், இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை 40,000 பேருக்கு மட்டும் தான் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. அரசுத் துறைகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆளுனர் உரையில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் ஏராளமான நலத் திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டியுள்ளது. ஓராண்டில் அரசு செயல்படுத்தவிருக்கும் திட்டங்களின் முன்னோட்டம் தான் ஆளுனர் உரை என்பதால், அந்தத் திட்டங்களின் விவரங்கள் ஆளுனர் உரையில் இடம் பெறுவது வழக்கம் ஆகும். ஆனால், ஆளுனர் உரையில் எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை என்பதிலிருந்தே, நடப்பாண்டில் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தப் போவதில்லை என்பது தெளிவாகியிருக்கிறது. சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்று சொல்வார்கள். அதன்படி பார்த்தால், தமிழக அரசு என்ற சட்டியில் எதுவும் இல்லாததால் தான் ஆளுனர் உரை என்ற அகப்பையில் எதுவும் வரவில்லை என்று தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டு நலனில் அரசுக்கு ஏதேனும் அக்கறை இருக்குமானால், ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் போதாவது தமிழ்நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பல்வேறு அறிவிப்புகளை திமுக விளம்பர மாடல் அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post