மகா கும்பமேளா போர்க்களமாக மாறும்.. இந்து சித்தாந்தத்தை அழிப்போம்.! காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல்

post-img
லக்னோ: பிரயாக்ராஜில் இன்னும் சில நாட்களில் மகா கும்பமேளா தொடங்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையே மகா கும்பமேளாவுக்கு மிரட்டல் விடுத்துள்ள காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன், இந்துத்துவா சித்தாந்தத்தை அழிக்க வேண்டும் என்றும் பிரயாக்ராஜ் நகரம் போர்க்களமாக மாறும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது. இந்து மத நிகழ்வுகளில் முக்கியமானது மகா கும்பமேளா.. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மகா கும்பமேளா, உத்தரப் பிரதேசத்தில் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும். கங்கை, யமுனை மற்றும் இந்துக்கள் நம்பும் சரஸ்வதி நதிகள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் இடத்தில் நடக்கும் இந்த மகா கும்பமேளாவில் பல கோடி பக்தர்கள் ஒன்றுகூடி புனித நீராடுவார்கள். இந்தாண்டு ஜன. 13 முதல் பிப. 26ம் தேதி வரை மகா கும்பமேளா நடைபெறுகிறது. அதில் ஷாஹி ஸ்னான் எனப்படும் முக்கிய புனித நீராடுதல் நிகழ்வு இரண்டாம் நாளான ஜன. 14ம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசும் உத்தரப் பிரதேச அரசும் செய்துள்ளது. பக்தர்கள் எந்தவொரு சிரமத்தையும் எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காக மின்சாரம், கழிப்பறை, குளியலறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பல கோடி பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவை சீர்குலைக்கப் போவதாகத் தடை செய்யப்பட்ட சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் தலைவரான காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் மிரட்டல் விடுத்து இருக்கிறார். இது தொடர்பாக "பிரயாக்ராஜ் சலோ" என்ற மிரட்டல் வீடியோவை விடுத்துள்ள அவர், இந்துத்துவா சித்தாந்தத்தை எதிர்க்கவும் அழிக்கவும் வேண்டும் என்று கூறியிருக்கிறார். மேலும், லக்னோ மற்றும் பிரயாக்ராஜ் நகரில் உள்ள விமான நிலையங்களில் காலிஸ்தான் மற்றும் காஷ்மீரி கொடிகளை ஏந்திச் செல்லுமாறும் அவர் தனது ஆதரவாளர்களுக்கு வலியுறுத்தினார். இந்தாண்டு மகா கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜ் நகரம் போர்க்களமாக மாறும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார். மகா கும்பமேளாவுக்கு எதிராகக் கடந்த 10 நாட்களில் குர்பத்வந்த் சிங் விடுக்கும் இரண்டாவது எச்சரிக்கை இதுவாகும். இதற்கு முன்பு வெளியிட்ட எச்சரிக்கை வீடியோவில், மகர சங்கராந்தி (ஜனவரி 14), மௌனி அமாவாசை (ஜனவரி 29), மற்றும் பசந்த பஞ்சமி (பிப்ரவரி 3) ஆகிய நாட்களில் நடைபெறும் நீராடலைச் சீர்குலைக்கப் போவதாக அவர் மிரட்டல் விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. குர்பத்வந்த் சிங்கின் மிரட்டலுக்கு இந்து மத சாமியார்களின் உச்சபட்ச அமைப்பான அகில பாரதிய அகடா பரிஷத் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. குர்பத்வந்த் சிங்கின் மிரட்டலை நிராகரித்த பரிஷத்தின் தலைவர் மஹந்த் ரவீந்திர புரி, அவரை பைத்தியக்காரன் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "குர்பத்வந்த் சிங் என்ற அந்த நபர் மகா கும்பமேளாவில் நுழைய முயன்றால் அவர் அடித்து விரட்டப்படுவார். இதுபோன்ற பல நூறு பைத்தியக்காரர்களை நாங்கள் பார்த்திருக்கிறோம் இது சீக்கியர்களும் இந்துக்களும் ஒன்றிணைந்து நடந்தும் மகா கும்பமேளா. இங்கே பிரிவினையைத் தூண்டும் பன்னூனின் முயற்சிகள் தேவையற்றது. சீக்கிய சமூகம் தான் நமது சனாதன பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்துள்ளது. அவர்கள் சனாதன தர்மத்தைப் பாதுகாத்துள்ளனர்" என்று அவர் மேலும் கூறினார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post