Exclusive: நெருங்கி வரும் அண்ணாமலை.. மீண்டும் அதிமுக கூட்டணியா? போட்டு உடைக்கிறார் கிஷோர் கே சுவாமி

post-img
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்மையில் அதிமுக ஐடி விங் நடத்திய போராட்டத்தை பாராட்டி இருந்தார். லண்டன் சென்று திரும்பிய பிறகு அண்ணாமலை அதிமுகவை விமர்சிப்பதில்லை. இதனால் 2026 சட்டசபை தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக பேச்சுகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் அரசியல் விமர்சகர் கிஷோர் கே சுவாமி நமது ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார். கேள்வி: அண்ணாமலை ஒரு பேட்டியில் அதிமுகவுடன் தனக்கு எந்த விரோதமும் இல்லை, தலைமையின் முடிவுதான் இறுதியானது எனக் கூறியுள்ளார். 2026ல் தமிழ்நாட்டில் நிச்சயம் கூட்டணி ஆட்சிதான், அதில் பாஜக அங்கம் வகிக்கும் எனக் குறிப்பிடுகிறார். லண்டனில் இருந்து வந்தபிறகு அவர் அதிமுகவை சீண்டவே இல்லை. பாஜக அதிமுக மீண்டும் 2026ல் கூட்டணி வைக்கக்கூடும் என்பது உண்மைதானா? கிஷோர் கே சுவாமி: அதிமுக, 2023 செப்டம்பரிலேயே தீர்க்கமான முடிவை எடுத்தது. இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதே அது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் அதிமுகவுக்கு உவப்புடையதாக இல்லை. அண்ணாமலை, 'என் மண் என் மக்கள்' நடைபயணம் தொடங்கியபோது ஆர்பி உதயகுமார் அவ்வளவு பாராட்டிப் பேசினார். ஆனால், அடுத்த 5 நாட்களில் அண்ணாதுரை பற்றி தேவையில்லாத சர்ச்சைக் கருத்தைப் பேசுகிறார். ஏற்கனவே இருந்த சலசலப்பு அப்போது அதிகமானது. கட்சித் தொண்டர்கள் ஏற்காத ஓ.பன்னீர்செல்வத்தை, எடப்பாடி பழனிசாமிக்கு நிகராக எல்லா இடத்திலும் பாஜக முன்னிறுத்துவதையும் அதிமுகவினர் ரசிக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்த்து வைக்க முயற்சி செய்தது ஏன்? இரட்டை இலை ஒன்றாக இருக்க வேண்டும் எனச் சொல்வதற்கு பாஜக தலைவர் சி.டி.ரவி யார்? கட்சிக்குள் பாஜகவின் தலையீடுகள் அதிகரிப்பதை அதிமுகவில் யாருமே ரசிக்கவில்லை. தொடர்ந்து பாஜக அழுத்தம் கொடுத்ததன் காரணமாகவே கூட்டணி பிளவு முடிவை எடுத்தது அதிமுக. கேள்வி: பாஜகவுடன் கூட்டணி இருந்திருந்தால் அதிமுக அதிக சீட்களில் வென்றிருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கூறினாரே? கிஷோர் கே சுவாமி: அவர் சொல்ல வந்த விஷயம், இந்தக் கூட்டணி இருந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும், ஆனால், பாஜக தான் அந்தக் கூட்டணி முறிந்ததற்கு காரணம் என்பதுதான். அவர் பாஜக உடன் கூட்டணி வைக்கவேண்டும் என விருப்பம் தெரிவிக்கவில்லை. அமித் ஷா, கூட்டணி கதவுகள் திறந்திருக்கிறது என்றார். பிரதமர் மோடி இங்கு வந்தபோதும், எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வைக்க முயற்சி செய்தார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அண்ணாமலை விருப்பத்தினால் அல்ல, வேறு வழி இல்லாமல் தான் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்காமல் 2024 லோக்சபா தேர்தலைச் சந்தித்தது. இரட்டை இலைக்கு எதிராக நின்ற டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை பக்கத்தில் வைத்துக்கொண்டு எப்படி இனி அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடியும்? சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தான் பிரதானம். நாடாளுமன்றத் தேர்தலிலேயே பாஜகவை கழற்றிவிட்ட பிறகு சட்டமன்றத் தேர்தலில் ஏன் பாஜகவை தூக்கிச் சுமக்க வேண்டும்? பாஜகவுடன் சேர்ந்தால், அதிமுக சுமார் 10% வாக்குகளை இழந்து ஓட்டத்தை ஆரம்பிக்க வேண்டி இருக்கிறது. சிறுபான்மையினர் மட்டுமல்ல, இந்துக்கள் பெரும்பாலானோரே பாஜகவின் அரசியலை விரும்புவதில்லை. போராட்டம் நியாயமாக இருந்தாலும் ஒரு மத சாயம் பூசிக்கொண்டே செயல்படுகிறார்கள். அண்ணாமலை பச்சை வேட்டி கட்டிக் கொண்டதே அதற்கு உதாரணம்" எனத் தெரிவித்துள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post