துணைவேந்தர் நியமனம்- யுஜிசியின் புதிய விதிகள்- காவிக் கூடாரமாக்கும் சதி-வேல்முருகன் எச்சரிக்கை

post-img
சென்னை: நாட்டின் பல்கலைக்கழகங்களை காவிக்கூடாரமாக மாற்ற மோடி தலைமையிலான அரசு முயன்று வருகிறது. அதாவது, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என யுஜிசி புதிய விதிகளை வெளியிட்டிருக்கிறது; இது பல்கலைக் கழகங்களை காவிக் கூடாரமாக்கும் சதித் திட்டம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை: பாசிச மோடி அரசின் ஒன்பதரை ஆண்டு கால ஆட்சியில் காவல்துறை, இராணுவம், நீதிமன்றம், கல்வி, மருத்துவம் போன்ற எல்லாத் துறைகளிலும் நிறுவனங்களிலும் காவி பாசிஸ்டுகள் ஊடுருவி வருகிறார்கள். அதில் முக்கியமாக நாட்டிற்கான தலைவர்களையும், பத்திரிகையாளர்களையும், அதிகாரிகளையும், பேராசிரியர்களையும் உருவாக்கும் பல்கலைக்கழகங்களை பாசிஸ்டுகள் கைப்பற்றும் அபாயகரமான போக்கு உருவாகியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் கொண்டவர்களை துணைவேந்தர்களாக, பேராசிரியர்களாக, சிண்டிகேட் மற்றும் செனட் உறுப்பினர்களாக நியமிப்பதன் மூலமும், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களை பாசிஸ்டுகள் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துக்கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.வை தோற்கடித்தாலும் தனது கங்காணிகளான ஆளுநர்களை வைத்து அரசு அதிகாரத்தை அவர்கள்தான் கைக்குள் வைத்துள்ளார்கள். அதன்மூலம் மாநில அரசுகளை சுயேட்சையாக இயங்க முடியாமல் முடக்க நினைக்கிறார்கள். அந்த வகையில், இந்திய ஒன்றியத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை காவிக்கூடாரமாக மாற்ற மோடி தலைமையிலான அரசு முயன்று வருகிறது. அதாவது, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என யுஜிசி புதிய விதிகளை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, ஆளுநர் பரிந்துரைப்பவரே தலைவராகவும், யுஜிசி பரிந்துரைப்பவர் உறுப்பினராகவும் இருப்பார்கள். பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவரே மற்றொரு உறுப்பினராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யுஜிசியின் புதிய விதிகளின் படி, பல்கலைக்கழக வேந்தர் நியமனத்தில் ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்குவது மற்றும் கல்வியாளர்கள் அல்லாதவர்கள் இந்தப் பதவிகளை வகிக்க அனுமதிப்பது உள்ளிட்டவைகள், கூட்டாட்சி மற்றும் மாநில உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும். ஒன்றிய பாஜக அரசின் இந்த எதேச்சதிகார நடவடிக்கை, அதிகாரத்தை மையப்படுத்தவும், ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் மதிப்பைக் குறைக்கவும் முற்படுகிறது. மேலும், பல்கலைக்கழக நிர்வாகத்திலும், மாணவர்கள் மத்தியிலும் ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்டுகளை ஊடுருவவிடுவதன் மூலம் புராணக் குப்பைகளை கல்வியில் புகுத்துவது, பாடப்புத்தகங்களில் உண்மையான வரலாற்றை திரிப்பது, புதிய கல்வி கொள்கை போன்ற கல்வியை கார்ப்பரேட்மயமாக்கும் கொள்கைகளை அமல்படுத்துவது, பாசிச மோடி அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒழித்துக்கட்டுவது போன்ற சூழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தவே இந்த புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கைகளில் அதிகாரம் இருக்கின்ற போது, அதனைப் பறித்து ஆர்.எஸ்.எஸ்--சின் அடியாட்கள் ஆளுநர்களிடம் அதிகாரத்தை ஒப்படைக்கும் சூழ்ச்சியே! ஒட்டுமொத்தமாக இந்திய ஒன்றியத்தில் உள்ள பல்கலைக்கழங்களை காவிக்கூடாரமாக்கும் நடவடிக்கையே! எனவே, பாசிச மோடி அரசின் சதித்திட்டங்களை உள்ளடக்கிய யுஜிசியின் அறிவிப்பு அரசியலமைப்பு சட்டத்துக்கு ஏதிரானது. இந்த அறிவிப்பை யுஜிசி திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால், ஒட்டு மொத்த ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டங்களை முன்னெடுக்கும் என எச்சரிக்கை விடுக்கிறேன். இது ஒருபுறமிருக்க, தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தையும், அதன் மரபுகளையும் மதிக்காத ஆளுநர் ரவி, போட்டி அரசை நடத்த முயல்வது கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு சட்டமன்றத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி அவமதிப்பது இது முதன் முறையல்ல. ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் அலுவலகம் போன்று பயன்படுத்துவதும், திருவள்ளுவர், வள்ளலார் போன்ற வரலாற்று ஆளுமைகளுக்கு காவிச் சாயம் பூசுவதும், தன்னுடைய அரசியல் சட்டக் கடமைகளாக செய்து வருகிறார். எனவே, ஆளுநராக இருக்க தகுதியற்ற ஆர்.என்.ரவியை, தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றவும், ஆளுநர் பதவியை முற்றிலும் முழுவதுமாக ஒழித்துக்கட்டவும், ஜனநாயக சக்திகள் ஒன்று திரள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post