தமிழ்நாட்டில் குழந்தை மணம் 55% அதிகரிப்பு: முதல் 10 இடங்களில் 6 மேற்கு மாவட்டங்கள் - என்ன காரணம்?

post-img
தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 55 சதவீதம் அளவுக்கு குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளதாக, ஆர்.டி.ஐ தகவல் வெளியாகியுள்ளது. சாதிக்குள் திருமணம், மதக் கட்டுப்பாடுகள் போன்றவற்றால் மேற்கு மண்டலத்தில் இவை அதிகரித்துள்ளதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர். திருமணம் நடந்த பிறகு பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு வரும் போது பலர் கைதாவதாக கூறுகிறார் தமிழ்நாடு சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன். தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்கள் அதிகரிப்பது ஏன்? இதன் பின்னணியில் என்ன நடக்கிறது? "குழந்தைத் திருமணங்களை வன்முறையாக சமூகம் கருதவில்லை" - சமீபத்திய ஆய்வு சொல்வது என்ன? தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் தடுக்கப்பட்ட 7000 குழந்தைத் திருமணங்கள் - நீடிக்கும் சவால்கள் தமிழ்நாட்டில் இந்த 7 மாவட்டங்களில் குழந்தை திருமணத்தை தடுக்கவே முடியாதது ஏன்? ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தாலுகாவுக்கு உட்பட்ட மங்கலக்குடியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சம்பவம் இது. இக்கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு திருமணம் நடக்க உள்ளதாக, திருவாடனை தாசில்தார் கார்த்திகேயனுக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்துக்குச் சென்ற தாசில்தார் கார்த்திகேயன், சிறுமியை மீட்டு ராமநாதபுரம் குழந்தைகள் நலக்குழுவினரிடம் ஒப்படைத்தார். சிறுமியின் குடும்பத்தினரை எச்சரித்த சமூகநலத்துறை அதிகாரிகள், சிறுமியின் சகோதரியிடம் அவரை ஒப்படைத்தனர். இந்த சம்பவம் நடந்த ஓரிரு நாட்களில் ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடக்க இருந்துள்ளது. அங்கு சென்ற சமூகநலத்துறை அலுவலர் மெர்ஸி, சிறுமியை மீட்டார். அவர் படிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தபின்னர், அவரின் சகோதரரிடம் சிறுமி ஒப்படைக்கப்பட்டார். ராமநாதபுரத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையில் குழந்தைத் திருமணம் தொடர்பாக 95 புகார்கள் மாவட்ட சமூகநலத் துறைக்கு வந்துள்ளன. இதில், 75 திருமணங்கள் நடந்துவிட்டதாகவும் 25 திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாகவும் ஆர்.டி.ஐ கேள்வி ஒன்றுக்கு சமூகநலத்துறை பதில் அளித்துள்ளது. இது சிறிய உதாரணம் தான். ராமநாதபுரம் மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் 2024 ஆம் ஆண்டில் மட்டும் 55.6 சதவீதம் அளவுக்கு குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளதாக ஆர்.டி.ஐ தகவல் கூறுகிறது. இதுதொடர்பான விவரங்களை 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தியாளர் சுபாஷினி விஜயகுமார், சமூகநலத்துறையிடம் இருந்து பெற்றுள்ளார். 2022 ஜனவரி முதல் 2024 நவம்பர் வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற குழந்தைத் திருமணம் தொடர்பான விவரங்களை சுபாஷினி கேட்டிருந்தார். அதன்படி, கடந்த 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 1,054 குழந்தைத் திருமணங்களும், 2024 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் 1,640 திருமணங்களும் நடந்துள்ளன. "கடந்த மூன்று வருடங்களில் குழந்தை திருமணங்களை தடுக்க வேண்டிய பொறுப்பை கொண்டுள்ள சமூக நலத்துறையிடம் இருந்து இந்தத் தகவல்கள் பெறப்பட்டன" எனக் கூறுகிறார் சுபாஷினி விஜயகுமார். "பல சம்பவங்களில் அந்தப் பெண் கர்ப்பமாகி அரசு ஆரம்ப சுகாதார மையத்துக்கு வரும்போது தான் தெரிய வருகிறது. இதை களத்தில் வேலை பார்க்கும் தன்னார்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்" என்கிறார் அவர். ஆனால், அதற்கு முன்னதாகவே தகவல் கிடைப்பதற்கான கட்டமைப்புகளை அரசு வலுப்படுத்தி, விரைந்து நடவடிக்கை எடுப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதை அவர்கள் முன்வைப்பதாகவும் அவர் கூறுகிறார். குழந்தைத் திருமணங்கள் அதிகளவில் நடக்கும் மாவட்டங்களில் முதல் 10 மாவட்டங்களில் ஆறு இடங்களை மேற்கு மாவட்டங்கள் பிடித்துள்ளன. அதன்படி 2023-ஆம் ஆண்டு ஈரோட்டில் 150 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன. அதுவே கோவையில் 90, நாமக்கல்லில் 74, திருப்பூரில் 66, தருமபுரியில் 58, சேலத்தில் 51 எனப் பதிவாகியுள்ளன. 2024 ஜனவரி முதல் நவம்பர் வரையில் கோவையில் குழந்தைத் திருமணம் தொடர்பாக 125 புகார்கள் சமூகநலத்துறைக்கு வந்துள்ளன. அதில் 35 திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நடந்து முடிந்துவிட்ட 90 திருமணங்கள் தொடர்பாக 90 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதே காலகட்டத்தில் ஈரோட்டில் 186 புகார்களில் 36 திருமணங்கள் தடுக்கப்பட்டதாக ஆர்.டி.ஐ தகவல் கூறுகிறது. தருமபுரி, திண்டுக்கல், கடலூர்ஆகிய மாவட்டங்களில் முறையே 157, 165, 131 என்ற எண்ணிக்கையில் புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதனைச் சுட்டிக் காட்டி பிபிசி தமிழிடம் பேசிய குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர் தேவநேயன் அரசு, "மேற்கு மண்டலங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகரிப்பதற்கு சில காரணங்கள் உள்ளன. சாதி ரீதியான அமைப்புகளின் செயல்பாடுகள், காதல் திருமணம் குறித்த அச்சம் ஆகியவை பிரதான காரணங்களாக உள்ளன" எனக் கூறுகிறார். ஒவ்வொரு பகுதியில் இதுபோன்ற குழந்தை திருமணங்கள் நடைபெறுவதற்கான காரணங்களான சாதி உள்ளிட்ட சமூக பொருளாதார காரணங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறுகிறார் சுபாஷினி. "உயர்கல்வியில் மாணவியர் எண்ணிக்கையை அதிகரிக்க புதுமைப்பெண் போன்ற திட்டங்கள் தமிழ்நாட்டில் இருந்தும் ஏன் இவ்வாறு நடக்கிறது என்பது அதிர்ச்சியூட்டுகிறது" எனவும் அவர் கூறுகிறார். தொடர்ந்து பேசிய அவர், "பள்ளி இடைநிற்றல்தான் பல நேரங்களில் குழந்தைத் திருமணத்துக்கு காரணமாக அமைகிறது. மாணவி பள்ளிக்கு வராவிட்டால் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். கல்வித்துறை, சமூக நலத்துறை, காவல்துறை என அரசுத் துறைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம்" எனக் கூறுகிறார். "குழந்தைத் திருமணங்களைக் கட்டுப்படுத்துவதற்கு தனியாக அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை" எனக் கூறும் தேவநேயன் அரசு, "மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தான் இதைக் கட்டுப்படுத்தும் அதிகாரியாக இருக்கிறார். அவருக்கு வேறு பணிகளும் உள்ளன" என்கிறார். கடந்த 2 ஆண்டுகளில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்திருப்பதை உறுதிப்படுத்தும் ஆர்.டி.ஐ தகவல் மற்றும் ஆர்வலர்களின் கருத்துகளை முன்னிறுத்தி தமிழ்நாடு சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். "18 வயது நிறைவடையாத நபர்களுக்கு நடத்தப்படும் திருமணங்கள் அனைத்தும் குழந்தைத் திருமணங்கள் தான். கொரோனா காலத்தில் இருந்தே பள்ளிக்கல்வியை முடிப்பதற்கு முன்பு நடக்கும் சிறுவயது திருமணங்கள் அதிகரித்துள்ளன. இந்த விவகாரத்தில் போக்சோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மகளிர் உதவி எண் 181, அவசர உதவி எண் 100 ஆகியவற்றுக்குத் தகவல் வந்தால் உடனே சென்று குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்துகிறோம்" என அவர் கூறினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் அதிகாரமளித்தல் என்ற குழுவை அரசு நியமித்துள்ளதாகக் கூறும் கீதா ஜீவன், "ஆண்கள், பெண்கள் என எட்டு பேர் அந்த குழுவில் உள்ளனர். இவர்களின் வேலை விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான்" என்கிறார். திருமணம் நடந்து பிரசவத்துக்காக சம்பந்தப்பட்ட சிறுமி மருத்துவமனைக்குச் செல்லும் போது சமூக நலத்துறைக்குத் தகவல் வருவதாகக் கூறும் கீதா ஜீவன், "அப்போது திருமணம் செய்த நபரைக் கைது செய்கிறோம். பெண்ணையும் காப்பகத்தில் தங்க வைக்கிறோம்" என்கிறார். "குழந்தைத் திருமணங்களைத தடுப்பதற்கு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை, கல்வித்துறையுடன் இணைந்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்" என்கிறார் கீதா ஜீவன். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post