உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாததால் மூவர் பலி? ராமநாதபுரம் மருத்துவமனை தீ விபத்தால் சோகம்

post-img
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக மருத்துவமனையில் புகை பரவியதால் நோயாளிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். அந்த நேரத்தில் விபத்தில் சிக்கிய மூன்று பேர் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனர். இருப்பினும், தீ விபத்தால் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாத நிலையில், அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. ராமநாதபுரம் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இங்கு தான் சிகிச்சை பெறுவார்கள். இந்த மருத்துவமனையில் நேற்றிரவு திடீரென மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனை முழுவதும் புகை பரவிய நிலையில், நோயாளிகள் வெளியே செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர். அந்த நேரத்தில் வாகன விபத்தில் சிக்கிய 3 பேர் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனர். இருப்பினும், தீ விபத்து காரணமாகச் சிகிச்சை பெற முடியாமல் போனதில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய கட்டடத்தில் மின் கசிவு ஏற்பட்டதால் 2வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பாக முதல் தளத்துக்கு அழைத்து வரப்பட்டனர். மேலும், வளாகம் முழுவதும் இருளில் மூழ்கியதாலும் புகை காரணமாகவும் நோயாளிகள் சிரமப்பட்டனர். நல்வாய்ப்பாக இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யாரும் உயிரிழக்கவில்லை.. அதேநேரம் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிகளை மீட்கும் பணி நடந்து கொண்டிருந்தது. இந்தச் சூழலில் தான் வாகன விபத்தில் காயமடைந்தோர் அங்குச் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனர். அதாவது நேற்றிரவு அவசர சிகிச்சைக்காக, ராமநாதபுரம் அடுத்த மரைக்காயர் பட்டினத்தில் இருந்து நோயாளியை ஏற்றி வந்த 108 ஆம்புலன்ஸ் வாலாந்தரவை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ராமநாதபுரம் அடுத்த வழுதூரில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கில், பெட்ரோல் நிரப்பி விட்டு வெளியே வந்த லாரியும் அந்த ஆம்புலன்ஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதியது. அதில் ஆம்புலன்ஸில் வந்த மூன்று பேர் படுகாயம் அடைந்தார்கள். இதையடுத்து விபத்தில் காயமடைந்தோர் மீட்கப்பட்டு மற்றொரு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். இருப்பினும் இங்கு தீ விபத்து காரணமாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டுப் புகை மூட்டம் சூழ்ந்து நோயாளிகளை இடமாற்றம் செய்யும் பணிகள் நடந்து வந்தது. இதனால் விபத்தில் சிக்கியவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க முடியாத சூழல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த மூன்று பேரும் உரிய நேரத்தில் சிகிச்சை வழங்க முடியாமல் போனதால் அவர் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.150 கோடி செலவில் அதி நவீன கட்டிடங்கள் கட்டப்பட்டுக் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. இங்குச் சர்வதேச தரத்திற்கு நிகராக இன்றைய நவீன கட்டமைப்புகளும், மருத்துவ உபகரணங்களும் முதலுதவி மையங்களும் உள்ளதாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், மின்கசிவு காரணமாக நேற்று தீ விபத்து ஏற்பட்டது பேசுபொருள் ஆகியுள்ளது. வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post