சென்னை அருகே காரில் தங்கத்தைவிட விலை மதிக்க முடியாத பொருள்.. ஆவடி அருகே சினிமா பாணியில் சேசிங்

post-img
சென்னை: திருவள்ளூர் வழியாக சொகுசு காரில் மர்ம நபர்கள் யானை தந்தத்தை கடத்தி செல்வதாக நேற்று மதியம் திருவள்ளுர் வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக வனத்துறை அதிகாரிகள், திருவள்ளூர் முக்கிய சாலைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது திருநின்றவூரில் சொகுசு காரில் கடத்தி சென்ற ரூ.1 கோடி மதிப்பிலான யானை தந்தங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். அத்துடன் தப்பி ஓட முயன்ற இளைஞரை மடக்கி பிடித்தனர். விலங்கு இனங்களில் மிகப்பெரிய உயிரினமான யானை பார்க்க மட்டும் பிரம்மாண்டமானவை இல்லை.. அவை செய்யும் ஒவ்வொரு செயலும் பிரம்மிக்கத்தக்கவை ஆகும். யானை ஒன்று இருந்தால் அங்கு மிகப்பெரிய காடே உருவாகிவிடும். காடுகளை உருவாக்குவதில் யானைகள் தான் முக்கிய பங்குவகிக்கின்றன. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்று போற்றப்படுகிறது. யானைக்கு உள்ள தந்தங்கள் விலை மதிக்க முடியாதவை ஆகும்.யானை தந்தத்தை கோடிகள் கொடுத்து வாங்கி வைத்துக் கொள்ள பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் விரும்புகிறார்கள். யானை தந்தங்கள் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களின் கலாச்சாரத்தின் அடையாளமாக இருக்கிறது. யானை தந்தங்கள் மிக குறைவாக வருவதால் அதனை எவ்வளவு கோடி கொடுத்தும் வாங்க உலக கடத்தல் தாதாக்கள் தயாராக இருக்கிறார்கள்.. தங்கத்தை விடவும் விலை மதிக்க முடியாதவையாக யானை தந்தங்கள் இருக்கிறது. பணக்காரர்கள் தங்கள் வீடுகளில் என்ன விலை கொடுத்தாவது வாங்கி வைத்துக்கொள்ள விரும்பும் ஆடம்பர கலாச்சார பொருளாக இருப்பதே விலை மதிக்க முடியாததற்கு காரணமாக உள்ளது. உலகம் முழுவதும் யானைகள் வேட்டையாடப்படுவது தொடர்கிறது. இந்தியாவிலும் அவ்வப்போது யானைகள் வேட்டையாடப்படுவது நடக்கிறது. யானைகள் வேட்டையாடப்படுவது மட்டுமின்றி, அதன் தந்தங்களை விற்பதும், வாங்குவதும் இந்தியாவில் பெரிய குற்றம் ஆகும். இந்நிலையில் திருவள்ளூர் வழியாக சொகுசு காரில் மர்ம நபர்கள் யானை தந்தத்தை கடத்தி செல்வதாக திருவள்ளுர் வனத்துறை அதிகாரிகளுக்கு டிசம்பர் 31ம் தேதி மதியம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவள்ளுர் வனத்துறை அதிகாரிகள் உடனடியாக திருவள்ளூர் முக்கிய சாலைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது திருவள்ளூர் ஜே.என்.சாலை வழியாக சொகுசு கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. சந்தேகம் அடைந்த வனத்துறை அதிகாரிகள் வாகனத்தில் அந்த காரை பின்தொடர்ந்தார்கள். வனத்துறையினர் பின்தொடர்வதை அறிந்து சொகுசு காரில் சென்றவர்கள் நிற்காமல் மணவாளநகர் வழியாக பூந்தமல்லி நோக்கி அதிவேகத்தில் சென்றுள்ளார்கள். அந்த சொகுசு காரில் தான் யானை தந்தத்தை மர்ம நபர்கள் கடத்தி செல்லப்படுவதை வனத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவற்றை விடாமல் பின்தொடர்ந்து துரத்தி சென்றனர். யானை தந்தத்தை கடத்தி சென்ற நபர்கள் கொரட்டூர்-புதுச்சத்திரம் அருகே கூவம் ஆற்று பாலத்தில் திரும்பி திருநின்றவூர் நோக்கி சென்றனர். திருநின்றவூர் கோமதிபுரம் அரசு பள்ளி அருகே குறுகிய சாலை வழியாக சென்ற அந்த சொகுசு கார் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த வாகனங்களை இடித்து தள்ளியபடி சென்றது. தொடந்து காரில் தப்பி செல்ல முடியாது என எண்ணி காரில் தந்தத்தை கடத்தி சென்ற 3 பேர் காரில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். வனத்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு தப்பி ஓடிய ஒருவரை மடக்கி பிடித்தனர். மற்ற இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். காரில் சோதனை செய்தபோது அதில் 4 கிலோ எடையுள்ள 3 யானை தந்தங்கள் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் யானை தந்தங்களை கடத்தி சென்றது காஞ்சிபுரம் மாவட்டம் இஞ்சமங்கலம் பகுதியை சேர்ந்த உதயகுமார் (வயது 26) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் யானை தந்தங்கள் மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்தார்கள். கைதான உதயகுமாரிடம், யானை தந்தம் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? கடத்தலில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது? யாருக்கு விற்பனை செய்ய கொண்டு செல்லப்பட்டது? தப்பி ஓடியவர்கள் யார்? என வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்,.. கைப்பற்றப்பட்ட 3 யானை தந்தத்தின் மதிப்பு சுமார் ரூ.1 கோடி இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post