ரயில் சக்கரங்களுக்கு இடையே அமர்ந்து 250 கிமீ தூரம் பயணித்த இளைஞர்? சாத்தியமா - ரயில்வே விளக்கம்

post-img
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் ஜபல்பூரில் எக்ஸ்பிரஸ் ரயிலின் சக்கரங்களுக்கு இடையே உள்ள ஆக்சிலில் அமர்ந்து 250 கிலோமீட்டர் தூரம் இளைஞர் பயணித்ததாக வீடியோ வெளியாகி உள்ளது. அதனை ரயில்வே நிர்வாகம் முற்றிலுமாக மறுத்துள்ளது. குறைந்த கட்டணத்தின் நீண்டதூரம் பயணம் செய்ய வேண்டுமானால் பொதுமக்களின் முதல் சாய்ஸ் ரயிலாக தான் இருக்கும். ரயிலிலேயே படுக்கை வசதி, உணவு வசதி, கழிவறை வசதி உள்ளதோடு, பஸ், விமானங்களை காட்டிலும் ரயில் பயணத்தை அதிகமானவர்கள் விரும்புகின்றனர். இருப்பினும் இப்போதும் ரயில் டிக்கெட் எடுக்க முடியாமல் பலரும் ரயிலின் பாத்ரூமில் அமர்ந்து பயணிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் ஒரு வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோ மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் எடுக்கப்பட்டுள்ளது. வீடியோவில் நின்ற ரயிலின் அடியில் சக்கரங்களுக்கு நடுவே உள்ள ஆக்சிலில் இளைஞர் ஒருவர் அமர்ந்து இருக்கிறார். அவரை பார்த்ததும் சிலர் வெளியே அழைக்கின்றனர். பயந்துபோய் வெளியே இளைஞர் வருகிறார். அவரிடம் விசாரணை நடக்கிறது. இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் பரவி வரும் சூழலில் அந்த இளைஞர் மத்திய பிரதேசத்தின் இடார்சியில் இருந்து ஜபால்பூர் வரை 250 கிலோமீட்டர் தொலைவுக்கு ரயிலின் அடிப்பகுதியில் அமர்ந்து பயணித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் அந்த இளைஞர் மனம் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை ரயில்வே அதிகாரிகள் அங்கிருந்து அனுப்பி வைத்ததாக தகவல்கள் பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் ஆச்சரியம் அடைகின்றனர். அதாவது ரயிலில் நின்றபடி 250 கிலோமீட்டர் பயணிப்பதே பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் நிலையில் இளைஞர் ஒருவர் ரயிலின் அடியில் சக்கரங்களுக்கு இடையே அமர்ந்து பயணித்து இருப்பதை ஆச்சரியமாக பார்க்கின்றனர். இதற்கிடையே தான் ரயில்வே சார்பில் இந்த தகவல் மறுக்கப்பட்டுள்ளது. அதாவது பயணியால் ஒருபோதும் 250 கிலோமீட்டர் தொலைவுக்கு ரயிலுக்கு அடியில் சக்கரங்களுக்கு இடையே அமர்ந்து பயணிக்க முடியாது. இது தவறான தகவல் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ரயில்வே வாரியத்தின் தகவல் மற்றும் பப்ளிசிட்டி பிரிவு செயல் இயக்குநர் திலிப் குமார் கூறுகையில், ‛‛ரயிலுக்கு அடியில் சக்கரங்களுக்கு நடுவே ஆக்சிலில் அமர்ந்து 250 கிலோமீட்டர் தூரம் இளைஞர் பயணித்து இருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது. அது அடிப்படை ஆதாரமற்றது. அந்த இளைஞர் ரயிலின் அடியில் மறைந்து தான் இருந்தார். நின்ற ரயிலில் அடியில் தான் அவர் ஏறி அமர்ந்துள்ளார். ரயில் நகரும்போது சக்கரங்களுக்கு இடையே அமர்ந்து யாராலும் பயணிக்க முடியாது. இருப்பினும் அப்படியான தகவலுடன் வீடியோ எடுத்தவர்கள் வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அதனை சில ஊடகங்கள் எந்த விசாரணையும் செய்யாமல் பதிவு செய்துவிட்டன. இதனால் இந்த தகவல் முழுக்க முழுக்க பொய்யானது'' என்று கூறியுள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post