டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் தனது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங் இந்தியா பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த காலத்தில் அதை மீட்டவராக அறியப்படுகிறார். 1991-1996 வரையிலான பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான அரசாங்கத்தில் மன்மோகன் நிதியமைச்சராக பணியாற்றியிருந்தார். அப்போதுதான் அவர் இந்திய பொருளாதார கொள்கையை மாற்றி அமைக்கிறார். அவரது யோசனையும் திட்டமும் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் அளவில் உதவியதாக காங்கிரஸ் இன்றளவும் சிலாகித்து பேசுகிறது.
சமீப நாட்களாக உடல் நலக்கோளாறு காரணமாக சிரமங்களை எதிர்கொண்டு வந்த அவர், சற்று முன்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி இது குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “அவர் பிரதமராக இருந்தபோதும், நான் குஜராத் முதல்வராக இருந்தபோதும் நாங்கள் இருவரும் உரையாடியுள்ளோம். ஆளுகை தொடர்பான பல்வேறு விஷயங்களில் நாங்கள் விரிவான விவாதங்களை நடத்துவோம். அவருடைய ஞானமும், பணிவும் கவனிக்கதக்கதாக இருந்தது. இந்த துக்கமான நேரத்தில் அவரை பிரிந்துவாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கட்சியினருக்கு எனது இரங்கல். ஓம் சாந்தி.
இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான மன்மோகன் சிங்கின் இழப்புக்கு வருந்துகிறது. நிதியமைச்சர் உட்பட பல்வேறு அரசாங்க பொறுப்புகளில் பங்களிப்பு செலுத்திய அவர், நமது பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையை பதித்திருந்தார்” என்று மோடி கூறியுள்ளார்.
பாஜக தலைவர் ஜே.பி நட்டா மன்மோகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “மன்மோகன் சிங் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். கடினமான காலங்களில் இந்தியாவின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகித்திருந்தார் அவர். அவரது சேவை மற்றும் அறிவாற்றலுக்காக அவர் பரவலாக மதிக்கப்பட்டார். இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும், கட்சியின் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என்று கூறியுள்ளார்.
ராகுல் காந்தி இரங்கல்
“ஒரு சிறந்த வழிகாட்டியை, நல்ல ஆலோசகரை நான் இழந்துவிட்டேன். மன்மோகன் சிங் இந்தியாவை தனது மகத்தான அறிவாலும், நேர்மையாலும் வழிநடத்தினார். அவரது பொருளாதாரம் பற்றிய ஆழமான புரிதல் நம் தேசத்தை முன்னேற்றியது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மல்லிகார்ஜுன கார்கே இரங்கல்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார். “சந்தேகத்திற்கு இடமின்றி, வரலாறு உங்களை கனிவுடன் நினைவுகூரும். முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவால் இந்தியா தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு அரசியல்வாதியையும், உண்மையான ஒருமைப்பாட்டின் தலைவரையும், ஈடு இணையற்ற ஒரு பொருளாதார நிபுணரையும் இழந்துவிட்டது.” எனக் கூறியுயுள்ளார் கார்கே.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.