சென்னை: மகாராஷ்டிராவில் ரூ.13000 சம்பளத்திற்கு அரசு அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர் ரூ.21 கோடி பணத்தை கையாடல் செய்து, அதில் தனது காதலிக்கு பிஎம்டபிள்யூ கார், 4BHK வீடு என வாங்கிக் கொடுத்து போலீசில் சிக்கியுள்ளார். லஞ்சத்தால் ஊழலால் கோடீஸ்வரன் ஆகும் அரசு ஊழியர்களுக்கு இந்த சம்பவம் பெரிய பாடமாக இருக்கும்.. என்ன நடந்தது ஏன் இது பாடமாக இருக்க போகிறது என்பதை பார்ப்போம்.
நாம் பார்க்க போவது லக்கி பாஸ்கர் அல்ல..லக்கி பாஸ்கராக நினைத்து லாடங்கட்டப்படும் பாஸ்கர் ஆகியுள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள அரசு விளையாட்டு வளாகத்தில் ரூ.13,000 மாத சம்பளத்திற்கு பணிபுரியும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஹர்ஷல் குமார் க்ஷிர்சாகர் . இவர் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள பிரிவு விளையாட்டு வளாகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்ற வந்தார். இவர் 13000 மட்டுமே சம்பளம் வாங்கி வந்த நிலையில், ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இவருக்கு திடீர் பணக்காரன் ஆக வேண்டும் என்று ஆசை பிறந்துள்ளது. அதாவது லக்கி பாஸ்கர் படம் பாணியில் பணக்காரன் ஆக ஆசைப்பட்டுள்ளார்.
இதற்காக அவர் அரசு வங்கி கணக்கில் பணத்தை திருட முடிவு செய்தார். கோடிக்கணக்கில் பணத்தை திருட திட்டமிட்டார். இதன்படி மகாராஷ்டிரா ஹர்ஷல் விளையாட்டு வளாகத்தின் பழைய லெட்டர்ஹெட்டைப் பயன்படுத்தி வங்கிக்கு மெயில் அனுப்பினார். அந்த மெயிலில் விளையாட்டு வளாகத்தின் கணக்குடன் இணைக்கப்பட்ட இமெயில் முகவரியை மாற்றுமாறு கோரிக்கை வைத்தார். விளையாட்டு வளாகத்தின் கணக்கைப் போன்ற முகவரியுடன் புதிய இமெயிலை உருவாக்கினார். அதில் ஒரே ஒரு எழுத்துக்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன. இந்த மின்னஞ்சல் முகவரியை விளையாட்டு வளாகத்தின் வங்கிக் கணக்குடன் இணைத்தார். அப்போது தான் ஒடிபி மற்றும் பண பரிவர்த்தனைகளுக்குத் தேவையான பிற தகவல்களை பெற முடியும் என்பதால் இப்படி செய்தார்
அடுத்ததாக கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் ஹர்ஷல் மாநில விளையாட்டு வளாகக் குழுவின் வங்கிக் கணக்கில் இண்டர்நெட் பேங்கிங் வசதியை செயல்படுத்தினார். அதன்பின்னர் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் டிசம்பர் 7ம் தேதி வரை 13 வங்கிக் கணக்குகளில் ரூ.21.6 கோடி வரை பணம் பரிமாற்றம் செய்துள்ளார். எல்லாமே தகவலுமே இவரால் மட்டுமே பார்க்க முடியும் என்பதால், அரசுக்கோ உயர் அதிகாரிகளுக்கோ என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை..
அரசு ஊழியர் ஹர்ஷல் திருடிய 21 கோடி பணத்தில், ரூ.1.2 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரும், ரூ.1.3 கோடி மதிப்புள்ள எஸ்யூவி காரும், ரூ.32 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ பைக்கும் வாங்கியிருக்கிறார். அதேபோல் ஹர்ஷல் தனது காதலிக்கு சத்ரபதி சம்பாஜிநகர் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள 4 BHK பிளாட் ஒன்றை பரிசாக வாங்கி கொடுத்துள்ளார். மேலும் தன்னுடைய காதலிக்கு வைரம் பதித்த ஒரு ஜோடி கண்ணாடியையும் ஆர்டர் செய்திருந்தார். இப்படி ரூ.21 கோடியில் ஆடம்பரமாக வாழ்ந்த வந்தார்.
ஹர்ஷல் திடீரென பணக்காரன் ஆனதால், அவருடன் பணிபுரிந்த சக பணியாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதன்படி விளையாட்டுத் துறை அதிகாரி ஒருவர் கண்காணித்தார். அப்போது தான் புதிதாக வங்கிக் கணக்கு ஒன்றை திறந்து அரசு நிதியை தனது அக்கவுண்டில் வரவுவைத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஹர்ஷல் மற்றும் அவரது உறவினர்களை போலீசார் கைது செய்தனர். இன்னும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். சொகுசு வாகனங்கள், வீட்டினை போலீசார் பறித்துள்ளனர். லக்கி பாஸ்கர் போல் கோடீஸ்வரன் ஆன அரசு ஊழியர் இப்போது லாக்கப்பில் சிக்கியுள்ளார்.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், என்னதான் லஞ்சம் வாங்கி பணம் சேர்த்தாலும், ஊழல் செய்து பணம் சேர்த்தாலும் ஹர்ஷல் போல் ஒரு நாள் நிச்சயம் மாட்டி எல்லாவற்றையும் இழக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே ஊழல் செய்தோ அல்லது மோசடி செய்தோ பெரிய கோடீஸ்வரன் ஆக ஆசைப்படாதீர்கள்.. அதுநிலைக்காது என்று கூறியுள்ளனர். லக்கி பாஸ்கர் ஆக ஆசைப்படும் அரசு ஊழியர்களுக்கு இவரது முடிவு பெரிய பாடம் என்றும் நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.