பருவமழைக் காலத்தின் ஓர் அதிகாலை வேளை அது. வேளச்சேரி ரயில் நிலையத்திற்குப் பின்புறத்திலுள்ள குடியிருப்புப் பகுதியைச் சுற்றியுள்ள அமைதியும் பசுமையும் நிறைந்த சாலை.
நான்கு அடி எடுத்து வைப்பதற்குள் நான்கைந்து நத்தைகளைப் பார்த்துவிடலாம். சாலையோரத்தில் முளைத்திருந்த காக்காமூக்கு, வெள்ளெருக்கு, எருக்கு ஆகிய செடிகளில் கிளைக்கு ஏழெட்டு நத்தைகளைப் பார்க்கலாம்.
அவற்றின் பெயர் கிழக்கு ஆப்பிரிக்க நத்தை (Giant East African Snail).
இந்தியாவில் விவசாயிகளுக்கு எதிரியாகக் கருதப்படுகின்ற இந்த நத்தை இனம், ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. ஓர் ஆண்டுக்கு அதிகபட்சமாக 500 முட்டைகளுக்கு மேல் இடக்கூடிய இந்த நத்தையினம் இந்தியாவுக்குள் வந்தது எப்படி?
இதனால் ஏற்படும் அபாயங்கள் என்ன? இவற்றைக் கட்டுப்படுத்துவது இன்னும் சவாலாகவே இருப்பது ஏன்?
தென்னிந்தியாவில் காணப்படும் பிற நத்தைகளைவிட அளவில் பெரிதாக வளரக்கூடிய இவை கிழக்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை. பிரிட்டிஷ் மெல்லுடலி ஆய்வாளரான வில்லியம் ஹென்றி பென்சன், 19ஆம் நூற்றாண்டில் இரண்டு கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகளை இந்தியாவுக்கு கொண்டு வந்தார் என்கிறது ஓர் ஆய்வு.
மொரிஷியஸில் இருந்து அவர் கொண்டு வந்த அந்த ஒரு ஜோடி நத்தைகளை, திரும்பிச் செல்லும்போது, தனது நண்பரும் அண்டை வீட்டில் வாழ்ந்தவருமான ஒருவரிடம் கொடுத்துச் சென்றார். அந்த நபர், தன்னிடம் கொடுக்கப்பட்ட நத்தைகளை கொல்கத்தாவில் இருந்த தனது வீட்டுத் தோட்டத்தில் திறந்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து, கொல்கத்தாவில் இந்த நத்தை இனம் பல்கிப் பெருகிவிட்டதாக 1858இல் பென்சன் பதிவு செய்துள்ளார்.
இப்படித்தான் இந்தியாவுக்குள் இந்த நத்தைகளின் பெருக்கம் தொடங்கியது. அதற்குப் பிறகு, வரலாற்றில் அதிகமாக ஆய்வு செய்யப்பட்ட நத்தை இனங்களில் இதுவும் ஒன்று.
இவை இந்தியா முழுக்கப் பரவியதில் மனிதர்களுக்குப் பெரும் பங்கு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. உதாரணத்திற்கு, பென்சன் விட்டுச் சென்ற நத்தைகள் கொல்கத்தாவில் இனப்பெருக்கம் செய்து பல்கிப் பெருகின.
கொல்கத்தாவில் இருந்து, 1960களில் செல்லப் பிராணியாக வளர்க்கும் ஆசையில் கொல்லர் ஒருவர் அதை பிகாரில் உள்ள தனது ஊருக்குக் கொண்டு சென்றார். பிறகு அவை பிகாரின் அண்டை மாநிலங்களுக்கும் பரவின. அதேபோல், விவசாயி ஒருவர் அவற்றைப் பிடித்து ஆந்திர பிரதேசத்தின் அரக்குப் பள்ளத்தாக்கில் அவருக்குச் சொந்தமாக இருந்த ஒரு தோட்டத்தில் 1996ஆம் ஆண்டு கொண்டு வந்து விட்டார்.
இப்படியாக நாடு முழுவதும் பரவிய கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகள், 20ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் பயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இது சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு அமைப்பின், உலகளவில் ஆபத்தான 100 ஆக்கிரமிப்பு உயிரினங்களின் பட்டியலிலும் உள்ளது.
பிற நத்தை இனங்களைப் போலவே, இவையும் இருபாலுயிரி பிரிவைச் சேர்ந்தவைதான். அதாவது, ஒரே நத்தையில் ஆண், பெண் இரு பாலுக்குமான இனப்பெருக்க உறுப்புகளும் இருக்கும்.
இதன்மூலம் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் இரண்டு நத்தைகளுமே கரு உருவாக விந்தணுக்களைக் கொடுப்பதோடு, விந்தணுக்களைப் பெற்றுத் தங்களது முட்டையில் கருவை உருவாக்கவும் செய்கின்றன. இத்தகைய உயிரினங்களை இருபாலுயிரி என்று அறிவியலாளர்கள் அழைக்கின்றனர்.
ஆனால், இது ஏன் ஆக்கிரமிப்பு உயிரினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது? அதைப் புரிந்துகொள்ள நாம் முதலில் ஆக்கிரமிப்பு உயிரினம் என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட சூழலியல் அமைப்புக்குத் தொடர்பில்லாத ஓர் உயிரினம், அங்கு ஊடுருவி வேகமாகப் பரவி, அந்தப் பகுதியுடன் இயற்கைத் தொடர்பைக் கொண்டிருக்கும் பிற உயிரினங்களின் இருப்புக்கே அச்சுறுத்தலாக மாறும்போது, அந்த உயிரினம் ஆக்கிரமிப்பு உயிரினமாகக் கருதப்படுகிறது.
கப்பல் போக்குவரத்து, வணிகம், அலங்காரம், வளர்ப்பு போன்ற காரணங்களுக்காகக் கொண்டுவரப்படுவது எனப் பல்வேறு காரணங்களால் ஒரு புதிய வாழ்விடத்திற்குள் நுழையும் உயிரினங்கள் அல்லது தாவரங்கள் இவ்வாறு ஆக்கிரமிப்பு உயிரினமாக மாறலாம்.
கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகளைப் பொறுத்தவரை, பென்சன் இந்தியாவுக்கு கொண்டு வந்த ஒரு ஜோடி நத்தைகள், இந்திய நிலப்பரப்பை அவை ஆக்கிரமிக்கத் தொடக்கப் புள்ளியாக அமைந்தன.
இந்த நத்தைகள், உள்ளூர் நத்தை இனங்களைவிட மிக வேகமாகவும் அதிகமாகவும் இனப்பெருக்கம் செய்வதால், அவற்றைவிட அதிவிரைவாகப் பரவி வாழ்விடங்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.
ஒரு கிழக்கு ஆப்பிரிக்க நத்தை, ஓர் ஆண்டில் 5 முதல் 6 முட்டைத் தொகுப்புகளை இடுகின்றன. ஒரு தொகுப்பில் 150 முட்டைகள் வரை இருக்கும். இதன்படி, ஓர் ஆண்டில் அவை சுமார் 500 முட்டைகள் வரை இடுவதாகக் கூறுகிறார் பெங்களூருவில் உள்ள அசோகா சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அறக்கட்டளையைச் சேர்ந்த மூத்த ஆய்வாளரும் மெல்லுடலிகள் வல்லுநருமான என்.ஏ.அரவிந்த்.
அதோடு உணவுச் சங்கிலியில், ஒவ்வோர் உயிரினத்திற்கும் அவற்றை உண்ணக்கூடிய வேட்டையாடி உயிரினம் இருக்கும். ஆனால், "இந்த நத்தைகளுக்கு இந்திய நிலப்பரப்பில் வேட்டையாடி எதுவும் இல்லாததும் இவை பெருகி சூழலியல் சமநிலையைக் குலைக்கக் காரணமாக அமைகின்றன" என்கிறார் அவர்.
இந்த நத்தைகள் விவசாயத்திற்குப் பெரும் எதிரியாக இருப்பதாகக் கூறுகிறார் அரவிந்த்.
"கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகள் எதை வேண்டுமானாலும் சாப்பிடும். புதர்கள், செடிகள் என இயற்கையில் வளர்ந்திருக்கும் தாவரங்களில் தொடங்கி, வாழை, பாகற்காய், வெண்டைக்காய், தக்காளி, உருளைக் கிழங்கு, பசலைக் கீரை, கொத்தமல்லி எனப் பல்வகை பயிர்ச் செடிகள் உள்பட அனைத்தையுமே சாப்பிடும்."
தாவரங்கள் மட்டுமின்றி இறந்த உயிரினங்களையும் அவை சாப்பிடுவதாகக் கூறினார் அரவிந்த்.
இந்த நத்தை இனம், "அளவில் சுமார் 15 செ.மீ வரைக்கும் வளரக்கூடியவை."
கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பரில், மதுரை மாவட்டத்திலுள்ள பரவை என்ற பகுதியில் வாழைத் தோட்டங்களில் பெருந்திரளாகப் பரவிய இந்தக் கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகளால் பெருமளவிலான வாழை உற்பத்தி அழிக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் இவை கடந்த சில ஆண்டுகளாகவே விவசாயிகள் மத்தியில் முக்கியப் பிரச்னையாக இருந்து வருகிறது.
தக்காளி, வெண்டைக்காய், பாகற்காய் போன்ற செடிகளின் மீது பரவி முற்றிலுமாக அழித்துவிடுவதால், பெருமளவிலான பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இந்த நத்தைகளால் அதிகளவில் பாதிக்கப்படுவது சிறு, குறு விவசாயிகளே என்கிறார் முனைவர் அரவிந்த்.
"ஐம்பது ஏக்கர், நூறு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளைவிட, ஒன்றிரண்டு ஏக்கர் வைத்துள்ள விவசாயிகளே இதனால் அதிக இழப்புகளைச் சந்திக்கிறார்கள்.
ஏனெனில், பெருவிவசாயிகளால் ஒரு ஏக்கர் வாழை உற்பத்தியில் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட முடியும். ஆனால், அந்த ஒரு ஏக்கர் மட்டுமே இருக்கும் விவசாயிக்கு, தனது மொத்த உற்பத்தியுமே வீணாகும்போது இழப்பின் வீரியம் பெரிதாக இருக்கும்," என்கிறார் அவர்.
இவற்றின் வாழ்வியல் குறித்து விளக்கிய முனைவர் அரவிந்த், குளிர்ச்சியான பருவநிலையும் ஈரப்பதமும் அதிகமாக இருக்கும்போது மட்டுமே இவை நிலத்தின் மேல்புறத்தில் நடமாடுவதாகக் கூறினார். அதுதவிர அனைத்து நேரங்களிலும் நிலத்திற்கு அடியிலேயே அவை வாழ்கின்றன.
இவை அளவில் பெரிதாகவும் எண்ணிக்கையில் அதீதமாகப் பெருகியும் வருவதால், ஒரு குறிப்பிட்ட நிலத்தில் பூர்வீகமாக வாழும் மற்ற நத்தை இனங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறுகிறார் அரவிந்த்.
அதோடு இந்த நத்தைகள் மிகத் தீவிரமாகச் சாப்பிடுகின்றன. பொதுவாக, ஒரு நிலத்தில் வாழும் உயிரினங்களுக்கும் அங்குள்ள தாவரங்களுக்கும் இடையே ஓர் இயற்கை உறவு காணப்படும். அவை ஒன்றிணைந்து பன்னெடுங்காலமாக வாழ்ந்து வருவதால், ஓர் ஒத்திசைவு காணப்படும்.
ஆனால், புதிதாக ஊடுருவும் கிழக்கு ஆப்பிரிக்க நத்தையைப் போன்ற உயிரினங்களுக்கும் அவற்றுக்கும் இடையே எந்தவித ஒத்திசைவும் இருக்காது.
அதனால், இவற்றின் வேகத்திற்கும் பசிக்கும் உள்ளூர்த் தாவரங்கள் மற்றும் உயிரினங்களால் ஈடுகொடுக்க இயலாது. இதன் விளைவாக, மற்ற நத்தைகளுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படும், அது சில நேரங்களில் இன அழிப்புக்குக்கூட வித்திடும் என்கிறார் அரவிந்த்.
இந்த நத்தைகளின் வாழ்வியலைப் புரிந்துகொள்வதற்காக, அவற்றின் நடத்தைகளைக் கண்காணித்துள்ளேன். பெரும்பாலும், மாலை அந்தி சாயும் நேரத்தில் இருந்து காலையில் அதிகபட்சமாக 7 மணி வரை அவற்றின் நடமாட்டத்தைக் காண முடியும்.
இலைகள், பழங்கள், விதைகள் என அவை பாரபட்சமின்றிச் சாப்பிடுவதைக் கண்டுள்ளேன். ஒருமுறை எருக்கஞ்செடியின் அடித்தண்டு முதல் நுனிப்பகுதி வரை நிறைந்திருந்த நத்தைகளை எண்ணிப் பார்த்தபோது கிட்டத்தட்ட 30 நத்தைகள் இருந்தன.
இவை மழைக்காலங்களில் ஈரப்பதம் நிறைந்து காணப்படும்போது அதிகம் தென்படும். பிற காலங்களில் வெப்பத்தைத் தவிர்ப்பதற்காக நிலத்தடியில் சென்றுவிடுகின்றன.
மழைக்காலங்களில்கூட இரவு நேரங்களில் வெளியே நடமாடும் இவை, பகலில் நிலத்தடியில் குளிர்ச்சி மற்றும் ஈரப்பதம் தேடிச் சென்றுவிடுவதாகக் கூறுகிறார் அரவிந்த்.
இந்த நத்தைகளின் தாயகமாகக் கருதப்படும் புருண்டி, எத்தியோப்பியா, மொரிஷியஸ், கென்யா, தான்சானியா போன்ற கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இவற்றை வேட்டையாடிச் சாப்பிடக்கூடிய நத்தைகள், பறவைகள், தட்டைப்புழுக்கள் (Flatworms) இருக்கின்றன.
''ஆனால், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இவற்றைச் சாப்பிடக்கூடிய வேட்டையாடிகளே இல்லை. இதனால் அவை பல்கிப் பெருகுகின்றன.
உதாரணமாக இந்திய நிலப்பரப்பை எடுத்துக்கொண்டால், இங்குள்ள தாவரங்கள், உயிரினங்கள் அனைத்துக்கும் இடையே இயற்கையாகவே ஓர் உறவு உருவாகியிருக்கும். இதற்கிடையே ஊடுருவும் உயிரினத்திற்கும் அதற்கும் தொடர்பிருக்காது.
இந்திய நிலப்பரப்பில் வாழும் உயிரினங்கள் எதுவும் அவற்றைச் சாப்பிட விரும்பவில்லை. சொல்லப்போனால், இந்த நத்தைகளை அவை ஓர் உணவாகவே கருதவில்லை. இது இவற்றுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்திவிட்டது." என்கிறார் அரவிந்த்
"ஆக உணவுக்குப் பஞ்சமில்லை, வாழ்விடத்திற்குக் குறைவில்லை, அபாயங்கள் ஏதுமில்லை. இத்தகைய சொர்க்கபுரியைப் போன்றதொரு சூழலில் எந்தவோர் உயிரினமும் சூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அளவுக்குப் பெருகவே செய்யும். அதுதான் கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகள் விஷயத்திலும் நடந்துள்ளது.'' என்கிறார் அவர்.
ஹவாய் தீவிலும் ஆஸ்திரேலியாவிலும் இவற்றை அழிப்பதற்காக, ரோஸி வுல்ஃப் நத்தை என்ற வேட்டையாடி நத்தையை அறிமுகம் செய்தனர்.
ஆனால், "அவை கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகளை மட்டுமின்றி உள்ளூர் நத்தைகளையும் சாப்பிடத் தொடங்கியதால் பல எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டன," என்கிறார் அரவிந்த்.
கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகளின் பரவலைத் தடுக்க முனைவர் அரவிந்த் ஒரு திட்டத்தை முன்வைக்கிறார்.
"பீருடன் வெந்நிலா எசென்ஸ் கலந்து அல்லது அழுகிய வாழைப்பழங்களை ஈரத்துணியில் சுற்றி வைத்துவிட வேண்டும். மாலை வேளையில் சீரான இடைவெளியில் வெவ்வேறு இடங்களில் வைத்துவிட்டு, அடுத்த நாள் காலையில் சென்று பார்த்தால், நத்தைகள் அதை நோக்கிப் படையெடுத்து இருப்பதைக் காண முடியும்," என்கிறார் அவர்.
அப்படிக் கூடும் நத்தைகளில் உள்ளூர் நத்தைகளும் இருக்க வாய்ப்புண்டு. அவற்றைக் கவனமாகப் பிரித்து எடுத்துவிட்டு, ஆப்பிரிக்க நத்தைகளை உப்புநீரில் போட்டால் அவை இறந்துவிடும்.
ஆனால், இந்தச் செயல்முறையை அனுதினமும் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் அரவிந்த். "மொத்தமாக ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் ஆப்பிரிக்க நத்தைகளே இல்லை என உறுதியாகத் தெரியும் வரை இதைச் செய்ய வேண்டும்."
அவரது கூற்றுப்படி, ஒருவேளை இரண்டு நத்தைகள் இதிலிருந்து தப்பித்தாலும், அவை மீண்டும் பல்கிப் பெருகிவிடும். ஏனெனில், "இப்போது நாடு முழுக்க சூழலியல் சமநிலையைச் சீர்குலைக்கும் இந்த உயிரினம், ஆரம்பத்தில் இந்திய நிலப்பரப்பிற்குள் வந்தபோது அவற்றின் எண்ணிக்கை வெறும் இரண்டுதானே."
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.