லக்கி பாஸ்கர் பட பாணியில்! நிறுவனத்தில் ரூ 1.73 கோடி கையாடல் செய்த சென்னை சாந்தி! விசாரணையில் பகீர்!

post-img
சென்னை: சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் தலைமைக் கணக்காளராக பணிபுரிந்த பெண் ஒருவர் ரூ1.73 கோடி ரூபாயை கையாடல் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அந்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஸ்ரீராகவேந்திரா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் விஜய்குமார். இவர் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகாரை அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது: எங்கள் நிறுவனத்தில் தலைமை கணக்காளராக பணிபுரிந்தவர் சாந்தி. இவர் இரு ஆண்டுகளில் ரூ 1.73 கோடியை கையாடல் செய்திருப்பது ஆடிட்டிங் மூலம் கண்டுபிடித்தோம். இதை அறிந்து கொண்ட சாந்தி, கடந்த ஏப்ரல் மாதம் வேலையை ராஜினாமா செய்வதாக மெயிலில் கடிதம் அனுப்பிவிட்டு பணத்துடன் தலைமறைவாகிவிட்டார். அவரை கண்டுபிடித்துக் கொடுத்து பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருக்கிறார். இந்த நிலையில் புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், சாந்தியை ஒசூரில் வைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பகீர் தகவல்களை தெரிவித்துள்ளார். அதாவது துல்கர் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் படத்தை மிஞ்சும் அளவுக்கு இவருடைய மோசடி இருந்தது. 12 ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த சாந்தி மீது விஜய்குமார் நம்பிக்கை வைத்திருந்தாராம். இதனால் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பது, வங்கிக் கணக்குகளை நிர்வகிப்பது, பணத்தை கையாள்வது போன்ற பொறுப்புகளை அவரிடம் கொடுத்துள்ளார். வங்கியிலிருந்து வரும் ஓடிபிக்களை எல்லாம் தனது செல்போனுக்கு வரும் வகையிலஸ் சாந்தி மாற்றிக் கொண்டாராம். இந்த நிலையில் 600 ஊழியர்களின் வங்கிக் கணக்குடன் தூத்துக்குடியில் உள்ள 10 உறவினர்களின் வங்கிக் கணக்குகளையும் நைசாக நுழைத்தாராம். ஒவ்வொரு மாதமும் ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கில் ஊதியம் செலுத்து போது , தனது உறவினர்களுக்கும் ஊதியம் செலுத்தப்பட்டதாம். இப்படி உறவினர்களையும் தொழிலாளர்கள் போல் காட்டி 2 ஆண்டுகளில் ரூ 1.73 கோடி பணத்தை சுருட்டியுள்ளார். பிறகு உறவினர்களிடம் இருந்து பணத்தை வாங்கி, தனது மகன், மகள் வங்கிக் கணக்குகளில் வரவு வைத்துள்ளார். மொத்தமாக வரவு வைத்தால் சந்தேகம் எழும் என்பதால் சேர்ந்த பணத்தில் வீடு, நிலம் உள்ளிட்ட அசையா சொத்துகளை வாங்கி குவித்துள்ளார். அந்த வகையில் பெரம்பலூரில் இரு வீடும், அடையாறில் ஒன்றரை கோடியில் தனது தாயின் பெயருக்கு ஒரு வீடும் வாங்கியதாக தெரிகிறது. மேலும் தனது மகனையும் மகளையும் பிரபல தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் படிக்க வைத்ததும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. வங்கிக் கணக்கை ஒவ்வொரு மாதமும் அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் போது அதையே போலியாக தயாரித்து சமர்ப்பித்திருந்தாராம். இது நிறுவனத்தில் நடந்த ஆடிட்டிங்கில் தெரியவந்தது. இப்படி நிறுவன உரிமையாளரின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த சாந்திக்கு மாதம் ரூ 60 ஆயிரம் ஊதியமாக வழங்கப்பட்டதாம். அதுமட்டுமல்லாமல் அவருடைய குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் பள்ளிக் கட்டணமும் செலுத்தப்பட்டு வந்ததாம். இப்படிப்பட்ட சலுகைகள் கிடைத்தும் உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்தது போல் சாந்தி செய்த நம்பிக்கை துரோகம் பகீர் கிளப்புகிறது. லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் 1992 ஆம் ஆண்டு மும்பையில் நடப்பது போல் கதை களம் அமைந்துள்ளது. அதாவது வங்கியின் காசாளர் ஆக துல்கர் சல்மான் நடித்துள்ளார். அவருக்கு கடன் மேல் கடன் இருந்தாலும் நேர்மையாக தனது வாழ்க்கையை நடத்துகிறார். இந்த நிலையில்தான் கடன் தொல்லை தாளாமல் தனது நேர்மையை ஓரமாக வைத்துவிட்டு வங்கியை ஏமாற்றி பெரும் செல்வந்தன் ஆகிறார். இதனால் சாதா பாஸ்கர் லக்கி பாஸ்கர் ஆகிறார். அது போல் இந்த சாந்தியின் கதையும் உள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post