1912 டிசம்பர் 23-ஆம் தேதி வைஸ்ராயும், கவர்னர் ஜெனரலுமான லார்ட் சார்ல்ஸ் ஹார்டிங் மற்றும் அவரது மனைவி வினிஃப்ரெட் ஆகியோர் பிரிட்டிஷ் இந்தியாவின் புதிய தலைநகரான டெல்லியில் ஆரவாரத்துடன் நுழைந்தனர்.
டெல்லி ரயில் நிலையத்தில் இந்தியாவின் பல்வேறு சமஸ்தானங்களின் ஆட்சியாளர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்ட வைஸ்ராய், செங்கோட்டை நோக்கி ஊர்வலமாக யானை மீது சென்றார்.
இந்த ஊர்வலத்தின்போது அவருக்கு திடீரென ஒருவித பதற்றம் ஏற்பட்டது.
இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் தனது மனைவி வினிஃப்ரெட்டிடம், "நான் மிகவும் மோசமாக உணர்கிறேன், ஏதோ பயங்கரமான ஒன்று நடக்கப் போகிறது என்று நினைக்கிறேன்," என்று கூறியதாக அவரது நினைவுக் குறிப்பான 'மை இந்தியன் இயர்ஸ்' வெளிப்படுத்துகிறது.
"நீங்கள் சோர்வாக இருக்கிறீர்கள். உங்களுக்கு எப்போதும் ஆரவாரம் பிடிக்காது," என்று வினிஃப்ரெட் பதிலளித்தார்.
ஜோசப் மெக்வெயிட் 'Fugitive of Empire' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இது இந்தியப் புரட்சியாளர் ராஸ் பிஹாரி போஸின் வாழ்க்கை வரலாறு.
"கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் ஊர்வலம் ஸ்டேஷனுக்கும் கோட்டைக்கும் இடையே பாதி தூரம் சென்றது. சாலையோரங்களிலும், அருகிலுள்ள கட்டடங்களின் ஜன்னல்களுக்கு வெளியேயும் மக்கள் கூட்டம் திரண்டது. மிகவும் அதிகமான சத்தம் இருந்தது," என்று அவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
"வைஸ்ராய் மற்றும் அவரது மனைவியை ஏற்றிச் சென்ற யானை பஞ்சாப் நேஷனல் வங்கி கட்டடத்தின் முன் சென்றபோது திடீரென ஹோதாவின் (யானை சவாரி மேடை) பின்புறத்தில் ஏதோ விழும் சத்தம் கேட்டது."
"ஒரு கணம் கழித்து ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது. வெடிப்பின் சத்தம் மைல்களுக்கு அப்பாலும் கேட்டது."
வைஸ்ராயின் மனைவி வினிஃப்ரெட் முன்னோக்கி விழுந்தார். ஆனால் காயம் ஏற்படவில்லை.
வைஸ்ராய் ஹார்டிங் காயம் அடைந்ததை முதலில் உணரவில்லை. ஆனால் பின்னர் யாரோ தன் முதுகில் பலமாக அடித்தது போலவும், கொதிக்கும் நீரை ஊற்றியது போலவும் உணர்ந்தார்.
ஹார்டிங்கின் முதுகில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. கழுத்தின் வலது பக்கத்தில் நான்கு காயங்களும், வலது இடுப்பில் ஒரு காயமும் ஏற்பட்டது. ஹோதாவின் வெள்ளித் தகடு காரணமாக ஹார்டிங் அபாயகரமான காயங்களிலிருந்து தப்பினார்.
வெடிப்பின் உக்கிரத்தால் வைஸ்ராயின் ஹெல்மெட் உடைந்துவிட்டது என்றும், ஹெல்மெட் இல்லாதிருந்தால் அவர் இந்த வெடிப்பில் நிச்சயம் உயிரிழந்திருப்பார் என்றும் ஜோசப் மெக்வெயிட் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
இந்த குண்டுவெடிப்பில் வைஸ்ராயின் ஒரு பணியாளர் கொல்லப்பட்டார், இன்னொருவருடைய செவிப்பறை கிழிந்தது. இது தவிர வெடிகுண்டு துண்டுகளால் குறைந்தது 20 பேர் காயமடைந்தனர். இந்த அணிவகுப்பைக் காண சாலையில் அமர்ந்திருந்த 16 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
யானைக்கும், அதன் பாகனுக்கும் பெரிய அளவில் பாதிப்பு இருக்கவில்லை. ஆனால் பயந்துபோன யானை மண்டியிட மறுத்தது. காயம்பட்ட வைஸ்ராய் ஹார்டிங்கை யானையிலிருந்து கீழே இறக்குவதற்கு ஒரு மரக்கூடையை பயன்படுத்த வேண்டியிருந்தது.
இதையடுத்து தொடங்கப்பட்ட விசாரணையின் பொறுப்பு டேவிட் பெட்ரியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு பஞ்சாப் நேஷனல் வங்கி கட்டடத்தில் இருந்து வீசப்பட்டது என்று முதற்கட்ட விசாரணையில் புலனாய்வாளர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டது.
வங்காளத்தில் முந்தைய இரண்டு தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டது போன்றே வெடிகுண்டு இருந்தது என்பது சம்பவ இடத்தை ஆய்வு செய்ததில் தெரியவந்தது.
உள்ளூர் போலீசார் வங்கிக்கு வருபவர்களை விசாரிக்கத் தொடங்கினர் என்று ஜோசப் மெக்வெய்ட் குறிப்பிடுகிறார்.
''பெண்களை சோதனையிட' செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸில் இருந்து பெண் செவிலியர்கள் அழைத்து வரப்பட்ட்டனர். சம்பவ இடத்தில் ஆண்கள் பெண்களைப் போல் உடையணிந்து தப்பிச்செல்வதை தடுக்கவே இந்த நடவடிக்கை. தாக்குதல் குறித்து மற்ற நகரங்களுக்கு தந்தி அனுப்பப்பட்டது.''
நகருக்கு வெளியே செல்லும் அனைவரையும் விசாரிக்க டெல்லியின் ரயில் நிலையம் சுற்றி வளைக்கப்பட்டது. ஒற்றர்கள் நகரம் முழுவதும் பரவினர்.
தாக்குதலுக்கு முன்னும் பின்னுமான நாள்களில் அருகிலுள்ள தபால் நிலையங்களில் இருந்து அனுப்பப்பட்ட அல்லது பெறப்பட்ட ஆயிரக்கணக்கான தந்திகளை புலனாய்வாளர்கள் மதிப்பாய்வு செய்தனர்.
அலிகர், லக்னெள, பனாரஸ், பெஷாவர், சிம்லா, ஹைதராபாத், இந்தூர், மீரட், கராச்சி மற்றும் பாரசீக வளைகுடாவில் உள்ள அபாதான் போன்ற நகரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தனித்தனி விசாரணைகள், கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் கைதுகளை காவல்துறை நடத்தியது.
இருப்பினும் அந்த சதிதிட்டம் என்ன என்பது வெளிவரவில்லை.
விசாரணையை வழிநடத்திய டேவிட் பெட்ரி நம்பிக்கை இழக்கத் தொடங்கினார். அப்போது திடீரென முக்கிய தடயம் கிடைத்தது.
1913 மே 17, சனிக்கிழமை இரவு 8:30 மணிக்கு, ஜிம்கானா நூலக ஊழியர் ராம் பத்ரத் கடைசி டெலிவரியுடன் புறப்பட்டார். அவர் கையில் நூலக செயலர் மேஜர் சதர்லேண்டிற்கான புத்தக பார்சல் இருந்தது.
"லாரன்ஸ் கார்டன்ஸ் மைதானத்தில் உள்ள தனது லாட்ஜுக்கு செல்லும் வழியில், ஐரோப்பிய அதிகாரிகளின் திறந்தவெளி பாருக்கு மாற்றுப்பாதையில் செல்ல பத்ரத் முடிவு செய்தார்," என்று மெக்வெய்ட் எழுதுகிறார்.
லாகூரின் லாரன்ஸ் கார்டனின் பெயர் இப்போது 'பாக்-இ-ஜின்னா' ஆகிவிட்டது.
லாரன்ஸ் அண்ட் மாண்ட்கோமரி ஹாலைக் கடந்ததும் சாலையில் கிடந்த ஒரு பாக்கெட்டை அவர் மிதித்தார். அதில் வெடிபொருள் இருந்தது. அது வெடித்தது.
இதன் காரணமாக பத்ரத்தின் கால் உடனடியாக எரிந்தது. அவரது வயிற்றில் இரண்டு நீண்ட ஆணிகள் துளைத்தன. இது தவிர சில கண்ணாடித் துண்டுகளும் அவரது உடலில் புகுந்தன.
சாலையில் பள்ளம் ஏற்படும் அளவுக்கு வெடிப்பு அவ்வளவு வலுவானதாக இல்லை. வெடிகுண்டு வெடித்த இடத்தில் இருந்து 30 அடி தூரத்தில் ஆணிகள், கண்ணாடி மற்றும் பிற குப்பைகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
வெடிவிபத்தில் பத்ரத் சாலையிலேயே இறந்துவிட்டார். இந்த நேரத்தில் நகரில் மழை பெய்து கொண்டிருந்தது.
இதற்கு முன் பல தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு போலவே இது இருந்தது என்பது சம்பவம் நடந்த இடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது. மிக முக்கியமாக வைஸ்ராய் ஹார்டிங்கை தாக்க இதே போன்ற வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டன.
சம்பவ இடத்தில் இருந்த பெரும்பாலான ஆதாரங்களை மழை அழித்துவிட்டது. ஆனால் அந்த வெடிப்பு பத்ரத்தின் வலது காலில் பிக்ரிக் அமிலத்தின் சிறிய மஞ்சள் கோடுகளை விட்டுச் சென்றது. அவரது இடது காலின் தோலில் ஆர்சனிக் என்ற பொருளை லாகூர் சிவில் சர்ஜன் கண்டுபிடித்தார்.
வைஸ்ராயை தாக்குவதற்கு இதே போன்ற பொருள் பயன்படுத்தப்பட்டது.
லாகூர் குண்டுவெடிப்புக்கான காரணத்தைத் தேடிவந்த புலனாய்வாளர் டேவிட் பெட்ரி, அசாமின் முன்னாள் உதவி ஆணையர் லாரன்ஸ் கார்டன் அந்த நேரத்தில் திறந்தவெளி பாரில் இருந்ததை உணர்ந்தார்.
பஞ்சாபை அடைவதற்கு முன்பு லாரன்ஸ் கார்டன் மீது மார்ச் 27 அன்று மௌல்வி பஜாரில் (சில்ஹெட்) அவரது இல்லத்தில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் குறித்த நேரத்திற்கு முன்பே வெடிகுண்டு வெடித்தது.
கிழக்கு மற்றும் மேற்கு வங்கம், வட இந்தியா மற்றும் பஞ்சாப் முழுவதிலும் உள்ள பல்வேறு புரட்சியாளர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருப்பதாகவும், ஒருவேளை ஒரே நபர் அல்லது குழு வெவ்வேறு தாக்குதல்களுக்கு வெடிகுண்டுகளை வழங்குவதாகவும் டேவிட் பெட்ரி முடிவு செய்தார்.
பின்னர் ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் கல்கத்தாவில் (தற்போது கொல்கத்தா) ஒரு கட்டடத்தை சோதனை செய்து நான்கு பேரை கைது செய்தனர். வெடிகுண்டு தயாரிப்பு பொருட்கள், காலனித்துவ எதிர்ப்பு இலக்கியம் உள்ளிட்ட பல ஆதாரங்களை போலீசார் அங்கிருந்து கண்டுபிடித்தனர்.
முக்கியமான விஷயம் என்னவென்றால் சமீபத்தில் லாகூர், டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் விநியோகம் செய்யப்பட்ட புத்தகங்களும் கைப்பற்றப்பட்ட இலக்கியங்களில் இருந்தன.
பிப்ரவரி 16 அன்று டெல்லியில் பல இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்த டேவிட் பெட்ரி உள்ளூர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த சோதனையில் அமீர் சந்த் என்ற நபரின் வீடும் அடங்கும்.
அமீர்சந்தின் வீட்டில் இருந்து புரட்சிகர இலக்கியக் களஞ்சியம், பஞ்சில் சுற்றப்பட்ட வெடிகுண்டுகள், பிக்ரிக் அமிலம் மற்றும் 'சஹாப்களை' கொல்லும் திட்டத்தை விவரிக்கும் ஆவணங்களை போலீசார் கண்டுபிடித்தனர்.
ஆனால் அமீர் சந்தின் வீட்டில் தங்கியிருந்த ராஸ் பிஹாரி போஸ் என்ற நபர் அடையாளம் காணப்பட்டதுதான் இந்த சோதனையின் மிகப்பெரிய சாதனை.
புரட்சிகர நடவடிக்கையின் இரண்டு முக்கிய மையங்களான டெல்லி மற்றும் லாகூர் ஆகியவற்றை இணைக்கும் முக்கிய இணைப்பாக போஸ் செயல்பட்டார் என்பதை ஆவணங்கள் வெளிப்படுத்தின.
அவத் பிஹாரி என்ற நபருக்கு எழுதப்பட்ட கடிதத்தையும் போலீசார் கண்டுபிடித்தனர். இந்த கடிதத்தை லாகூரைச் சேர்ந்த மாணவர் தீனாநாத் தனக்கு அனுப்பியதாக அவத் பிஹாரி பின்னர் ஒப்புக்கொண்டார்.
உள்ளூர் அதிகாரிகள் அவரை உடனடியாக கைது செய்தனர். ராஸ் பிஹாரி போஸ் வங்கத்தின் புரட்சியாளர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், டெல்லி மற்றும் லாகூரில் வெடிகுண்டுகளை வழங்கியவர் போஸ்தான் என்றும் தீனாநாத் கூறினார்.
அவத் பிஹாரியுடன் இருந்த பசந்த் குமார் விஷ்வாஸ் என்ற வங்க இளைஞர் லாகூர் குண்டுவெடிப்புக்குக் காரணமானவர் என்பதும், அவரை தன்னுடன் சேர்த்துக் கொண்டது போஸ்தான் என்பதும் தெளிவானது.
ஜனவரி மாத இறுதியில் வைஸ்ராய் ஹார்டிங் உடல்நலம் தேறுவதற்காக டேராடூனுக்குச் சென்றார்.
அங்கு தான் ஒரு வீட்டைக் கடந்து சென்றதாகவும், அங்கிருந்த பல இந்தியர்கள் தன்னை அன்புடன் வரவேற்றனர் எனவும் அவர் தனது நினைவுக் குறிப்புகளில் எழுதியுள்ளார்.
வைஸ்ராய் ஹார்டிங் ஆர்வத்துடன் கேட்டார் - 'இவர்கள் யார்?'
வைஸ்ராயின் தாக்குதலை கண்டித்து இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த ஒரு பெங்காலியும் வரவேற்றவர்களில் இருப்பதாக அவரிடம் கூறப்பட்டது. அவர் வேறு யாருமல்ல ராஸ் பிஹாரி போஸ் தான் என்பது பின்னர் தெரியவந்தது.
பசந்த் குமார் பிஸ்வாஸ் 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி வங்கத்தின் நாடியாவில் தனது தந்தையின் இறுதிச் சடங்குகளைச் செய்யச் சென்றபோது கைது செய்யப்பட்டார். லாகூரில் உள்ள லாரன்ஸ் கார்டனில் வெடிகுண்டு வீசியதான குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டது.
டெல்லி-லாகூர் சதி வழக்கு விசாரணை 1914 மே 23 ஆம் தேதி டெல்லியில் தொடங்கியது. விசாரணையில் அமீர் சந்த், அவத் பிஹாரி, பால்முகுந்த் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பசந்த் குமார் பிஸ்வாஸுக்கு முதலில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் மேல்முறையீட்டிற்குப் பிறகு அவருக்கும் மரண தண்டனையும் வழங்கப்பட்டது.
சரண் தாஸுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. புரட்சியாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காகவும் அவர்களுக்காக பணம் வசூலித்ததற்காகவும் சரண்தாஸ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டார். முதல் உலகப் போருக்குப் பிறகு அவரது ஆயுள் தண்டனை ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையாக குறைக்கப்பட்டது.
லாலா ஹனுமந்த் சஹாய்க்கு அந்தமான் தீவுகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் போஸ் தப்பிச்சென்றுவிட்டார். மேலும் அவர் இந்தியாவில் மிகவும் தேடப்படும் நபராக ஆனார்.
ராஸ் பிஹாரி போஸ் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கைதாவதை தவிர்த்துவிட்டு 1915 இல் ஜப்பான் சென்றார் என்று நூருல் ஹுதா 'Alipore Bomb case' என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.
அவரது தோழர்கள் தூக்கிலிடப்பட்ட பிறகு ராஸ் பிஹாரி போஸ் தலைமறைவானார். அவர் பனாரஸ் அருகே வசிக்கத் தொடங்கினார். இந்த நேரத்தில் அவர் தனது சகாவான சசீந்திர நாத் சான்யாலின் உதவியுடன் ஆங்கிலேயருக்கு எதிராக நாடு தழுவிய ஆயுதப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.
பனாரஸில் வி.கே.பிங்ளே கைது செய்யப்பட்டது மற்றும் பிரிட்டிஷ் நடவடிக்கைக்குப் பிறகு ராஸ் பிஹாரி போஸ் ஜப்பான் சென்றார்.
முதல் உலகப் போரின் போது ஜப்பான், கிரேட் பிரிட்டனின் நட்பு நாடாக இருந்தது. போஸை மீண்டும் பிரிட்டிஷ் இந்தியாவுக்கு அனுப்ப ஜப்பான் தயாராக இருந்தது. இருப்பினும் ஜப்பானிய சமூகத்தின் சில பிரிவுகள் அவரது நோக்கத்திற்கு ஆதரவாக இருந்தன.
நாடுகடத்தப்படும் அச்சம் காரணமாக ராஸ் பிஹாரி போஸ் மூன்று ஆண்டுகளில் தனது அடையாளத்தையும் வசிக்கும் இடத்தையும் பலமுறை மாற்றினார். அங்கு அவர் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. அவர் 1923 இல் ஜப்பானிய குடியுரிமை பெற்றார்.
லாலா ஹனுமந்த் சஹாய், அந்தமானின் காலா பானியில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால் லாகூரில் கடுமையான சிறைத்தண்டனை அனுபவித்த பிறகு மேல்முறையீட்டில் அவர் மன்னிக்கப்பட்டார் என்று டெல்லியின் வரலாறு பற்றி பல கட்டுரைகளை எழுதிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஆர்.வி. ஸ்மித் குறிப்பிடுகிறார்.
'ரெவெல்யூஷனரீஸ் ஆஃப் சாந்தினி சௌக்' என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையில் ஆர்.வி. ஸ்மித், லாலா ஹனுமந்த் சஹாயுடனான தனது கடைசி சந்திப்பு 1965 இல் நடந்தது என்று எழுதுகிறார்.
"அது குளிர்காலம். அவர் கம்பளி போர்வையை போர்த்தியடி கேரட் ஹல்வாவை சாப்பிட்டுக்கொண்டிருந்தார். ஆனால் மிகவும் பலவீனமாக இருந்தார்," என்று ஸ்மித் எழுதியுள்ளார்.
அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை கழித்த சாந்தினி சௌக்கில் உள்ள அறை, வைஸ்ராய் லார்ட் ஹார்டிங்கை படுகொலை செய்வதாக உறுதிமொழி எடுத்த புரட்சியாளர்களின் மறைவிடமாக இருந்தது.
லாலாஜி தனது அறைக்கு அருகில் உள்ள பால்கனியை சுட்டிக்காட்டி, 'தனது தாய் மற்றும் சித்தி உட்பட தனது எல்லா குடும்பப் பெண்களும் வைஸ்ராயின் ஊர்வலத்தை அங்கிருந்து பார்த்துக் கொண்டிருந்ததாகவும் வெடிகுண்டு வெடித்ததும் அனைவரும் உள்ளே ஓடினர்' என்றும் கூறினார்.
போலீஸ் சோதனையின் போது தான் கட்டிலின் கீழ் அமர்ந்து கிச்சடி சாப்பிட்டு கொண்டிருந்ததாகவும், கிச்சடி சாப்பிடும் போது தன் அடையாளத்தை மறைக்க தன் அம்மாவின் புடவையை தலையில் சுற்றிக்கொண்டிருந்தாகவும் அவர் கூறினார்.
எஞ்சியிருந்த 'சதிகாரர்கள்' பஞ்சாப் நேஷனல் வங்கிக் கட்டடத்தில் ஒளிந்து கொண்டனர்.
வெடிகுண்டை யார் வீசினார்கள் என்பது குறித்து முரண்பட்ட கருத்துகள் இருப்பதாகவும், அந்த பதிவுகளில் போஸ் மற்றும் பிஸ்வாஸ் இருவரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஜோசப் மெக்வெய்ட் தனது 'Fugitive of Empire' புத்தகத்தில் எழுதியுள்ளார்.
ஹார்டிங் மீது குண்டை வீசியது போஸ் தான் என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால் பிஸ்வாஸ் பெண் வேடமிட்டு வெடிகுண்டை வீசியதாக சிலர் கருதுகின்றனர்.
ஆனால் உண்மையில் குண்டை வீசியவரின் பெயரை தான் இறக்கும் வரை லாலா ஹனுமந்த் சஹாய் வெளியிடவில்லை என்று ஸ்மித் எழுதுகிறார்.
'இந்த ரகசியம் என்னுடன் கல்லறைக்குச் செல்லும்' என்று ஹனுமந்த் சஹாய் கூறிவந்தார்.
தனது வாழ்நாள் முழுவதும் தனது வார்த்தைகளில் அவர் உறுதியாக இருந்தார்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.