கோவை உக்கடத்தின் கலரே மாறப்போகுது.. ரூ. 21.55 கோடியில் உருவாகும் பிரம்மாண்டம்

post-img
கோவை: கோவை மாவட்டம், உக்கடத்தில் ரூ. 21.55 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக, பேருந்து நிலையம் அமைப்பதற்கான மண் பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தொழில் நகரமாக விளங்கக் கூடிய கோவையில் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், மருத்துவம் என பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் கோவை மாவட்டத்துக்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர். கோவையில் மெட்ரோ ரயில் வசதி இல்லாததால், பொதுமக்களின் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்வதில் அரசுப் பேருந்துகள் முக்கியப் பங்காற்றுகின்றன. அந்த வகையில், கோவை காந்திபுரம், சாயிபாபா காலனி, உக்கடம், சிங்காநல்லூர், சூலூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் மூலமாக பொதுமக்கள் வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சென்று வருகின்றனர். உக்கடம் பேருந்து நிலையத்தை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, கேரள மாநில மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கும், பள்ஸ்டாண்டில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கும், பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், கேரள மாநிலம் பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. உக்கடம் பேருந்து நிலையத்துக்கு ஆயிரக்கணக்கிலான பொதுமக்கள் தினந்தோறும் சென்று வருவதால் இங்கு எப்போதும் கூட்ட நெரிசல் நிறைந்து காணப்பட்டு வந்தது. இதற்குத் தீர்வு காணும் வகையில் உக்கடம் ஆத்துப்பாலம் சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாநில நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி உக்கடம் பேருந்து நிலையத்துக்குள் வரும்படி கட்டப்பட்டுள்ளது. இதனால் பேருந்து நிலையத்தின் பயன்பாடு குறைந்துள்ளது. இதையடுத்து, பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் ரூ. 21.55 கோடி செலவில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படடு பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த ஏலம் திறக்கப்பட்டு இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. பேருந்து நிலையம் கட்டப்படவுள்ள இடத்தில் மண் பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பேருந்து நிலையம் உள்ள இடம் மற்றும் செல்வபுரம் பைபாஸ் சாலையில் உள்ள காலி இடத்தில் இரண்டு பகுதியில் இரு பேருந்து நிலையங்கள் அமையவுள்ளன. இதில், ஒரு பகுதியில் நகரப் பேருந்துகளும், மற்றொரு பேருந்து நிலையத்தில் வெளியூர் பேருந்துகளும் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளன. தற்போதுள்ள உக்கடம் பேருந்து நிலையத்தில் 30 ரேக்குகளும், புதிய பேருந்து நிலையத்தில் 28 ரேக்குகளும் பேருந்துகள் நிறுத்துவதற்காக அமைக்கப்படவுள்ளன. பேருந்துகளை எங்கு, எப்படி நிறுத்துவது என்பது குறித்து போக்குவரத்து, வட்டாரப் போக்குவரத்து காவலர்கள் ஆலோசனைக்குப் பின்னர் முடிவு செய்யப்படவுள்ளது. மேலும் இந்த இரு பேருந்துகளுக்கு இடையேயும் சாலையும், மேம்பாலமும் இருப்பதால் மக்கள் எப்படி சாலையைக் கடந்து செல்வார்கள் என்ற குழப்பமும் நிலவி வருகிறது. இந்த மேம்பாலத்துக்கிடையே நடைமேம்பாலமும் அமைப்பதற்கான நிலைமை உள்ளது. சுரங்கப் பாதை அமைக்க மாநகராட்சி சார்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. உக்கடம் பேருந்து நிலையம் அருகே சுரங்கப் பாதை அமைக்கலாம் என்றால் அந்த வழியாக பெரிய குளம் மற்றும் வாலாங்குளத்திற்கு இடையே நீர் செல்லும் வாய்க்கால்கள் இருப்பதால் சுரங்கப் பாதைக்கான குழி தோண்டினால் அதில் நீர் தேங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே, இந்த திட்டத்தை மேற்கொள்ளும் வகையில் மண்ணின் தன்மை , குளத்தின் நீர் மண்ணில் எந்த ஆழத்துக்கு வருகிறது போன்ற விவரங்களை அறிந்து கொள்வதற்காக மண் பரிசோதனை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த மண் ஆய்வு செய்யும் பணிக்குப் பிறகு பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நகரில் இயக்கப்பட்டு வரும் பேருந்துகளை நிறுத்த இடம் இல்லாததால் மேம்பாலத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு வருகிறது. எந்த பேருந்துகள் எங்கு நிற்கிறது என்று தெரியாமல் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். புதிய பேருந்து நிலையம் கட்டினால் மட்டுமே இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும் என்பதால் புதிய பேருந்து நிலையப் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post