சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து, மாணவி அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வெளியானது முதல் சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழு அமைத்தது வரை பல விஷயங்கள் நடந்துள்ளன.
இந்த வழக்கில் இதுவரை தெரிய வந்துள்ள தகவல்கள் என்ன? நீதிமன்ற விசாரணையின்போது என்ன நடந்தது? இதையொட்டி கடந்த சில தினங்களில் தமிழக அரசியலில் நடந்த சம்பவங்கள் யாவை?
சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் டிசம்பர் 23-ஆம் தேதியன்று மாணவி ஒருவர் இரவு உணவுக்குப் பிறகு, மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தங்களை அச்சுறுத்தியதாகவும் பிறகு தனது நண்பரை அங்கிருந்து விரட்டிவிட்டு, தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மறுநாள் காலையில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
மாணவி அளித்த புகாரின் பேரில், அந்த நேரத்தில் அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபரை மாணவி அடையாளம் காட்டினார்.
டிசம்பர் 25-ஆம் தேதியன்று கைது செய்யப்பட்ட அந்த நபர் 37 வயதான ஞானசேகரன் என்றும், அவர் நடைபாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்தது.
இதையடுத்து சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஞானசேகரன் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் எடுக்கப்பட்டார்.
பின்னர் டிசம்பர் 26-ஆம் தேதியன்று காலையில், மாணவி அளித்த புகார் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வெளியானது.
மாணவிக்கு நடந்த அசம்பாவிதங்கள் பற்றிய விரிவான தகவல்கள் மட்டுமின்றி, அவரது பெயர், அலைபேசி எண், படிக்கும் பாடப்பிரிவு, முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அதில் இடம் பெற்றிருந்தன.
சில தொலைக்காட்சி நிறுவனங்கள் அவரது தனிப்பட்ட விவரங்கள் தவிர்த்து, எந்தெந்தப் பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் அடங்கிய எஃப்.ஐ.ஆரை ஒளிபரப்பின.
ஆனால், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களின் பெயர், முகவரி, புகைப்படம் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வெளியிடக்கூடாது என்று சட்டங்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து தமிழக அரசியல் களத்தில் இந்த விஷயம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
எஃப்.ஐ.ஆர் வெளியானது தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேசிய மகளிர் ஆணையத்திற்குக் கடிதம் ஒன்றை எழுதினார்.
அதற்குப் பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "பாதிக்கப்பட்ட பெண்ணை முடக்க வேண்டுமென்று அரசு முயலவில்லை. அவர் மிகவும் துணிச்சலோடு முன்வந்து, அரசு மீது நம்பிக்கை வைத்துப் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது," என்றார்.
''எஃப்.ஐ.ஆர் வெளியானதற்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம், அது வெளியானது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது" என்று சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.
இதற்கிடையே, காவல்துறையின் அலட்சியம் மட்டுமே இதற்குக் காரணம் என்று சமூக செயற்பாட்டாளர்கள் விமர்சித்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டு தமிழ்நாடு காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் டிசம்பர் 28-ஆம் தேதியன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதோடு, உண்மை கண்டறியும் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
மாணவிக்கு நேர்ந்த சம்பவத்தைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் புதன்கிழமையன்று பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தினர். 'மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை' எனக் கூறி அவர்கள் முழக்கம் எழுப்பினர்.
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் பிரகாஷ் வெளியிட்ட விளக்கத்தில், பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் எப்போதும் பணியில் உள்ளதாகவும், கண்காணிப்பு கேமராக்கள் இருந்தபோதும் விருப்பத்தகாத சம்பவம் நடந்துள்ளதாகவும் கூறினார்.
அதோடு, "இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் வகையில் பல்கலைக்கழக அளவில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது" எனக் குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஞானசேகரன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்டதாக கூறப்படும் பழைய புகைப்படம் ஒன்று வைரலானது.
அதுகுறித்து டிசம்பர் 26ஆம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைதான ஞானசேகரன் திமுகவில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லை" என்று தெரிவித்தார்.
மேலும், ஞானசேகரன் திமுக நிர்வாகி என்று பரப்பப்படும் தகவல் பொய்யானது எனக் கூறிய அவர், "பொதுவாக மக்கள் அமைச்சர்களைச் சந்திப்பதைத் தடுக்க முடியாது. துணை முதல்வர், அமைச்சர்கள் ஆகியோருடன் மக்கள் நின்று புகைப்படம் எடுப்பது சகஜம்தான்," என்று விளக்கமளித்தார்.
அதோடு, "தமிழ்நாடு முதல்வருக்கோ, திமுக அரசுக்கோ இந்த வழக்கை மறைப்பதற்கான அவசியம் இல்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவியின் வழக்கு பொள்ளாச்சி பாலியல் வழக்கைப் போல் இல்லை, தவறு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடும்," என்றும் கூறினார்.
இந்நிலையில் டிசம்பர் 28 அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்த அண்ணாமலை, "மாணவியை பாலியல் தாக்குதல் செய்த திமுக நிர்வாகி ஞானசேகரன் அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் வெகு சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, குற்றம் சாட்டப்பட்ட நபர் "திமுகவை சேர்ந்தவர் என்பதை மறைக்க, இன்னும் எத்தனை நாட்களுக்குப் பொய் சொல்லி ஏமாற்றலாம் என்று திமுக அரசு நினைக்கிறது?" என்றும் விமர்சித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக டிசம்பர் 26-ஆம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் அருண், "ஒரு குற்றவாளி எந்தக் கட்சியில் இருந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை. அந்த நபர் மீது நடவடிக்கை எடுப்போம்" என்று உறுதியளித்தார்.
அப்போது சமூக ஊடகங்களில் எஃப்.ஐ.ஆர் வெளியானது பற்றி பதிலளித்த அவர், இத்தகைய வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை வெளியாகக்கூடாது என்றும் அது தவறும் என்றும் தெரிவித்தார்.
அது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய காவல் ஆணையர், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அதேவேளையில், "எஃப்.ஐ.ஆர் இணையத்தில் பதிவேற்றப்பட்டதும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தகவல்கள் லாக் ஆவதில் தாமதமாகி இருக்கலாம். அந்த நேரத்தில் இதைப் பதிவிறக்கம் செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டிருப்பார்கள்" என்று விளக்கினார்.
குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் குறித்துப் பேசிய ஆணையர், "இதுவரை நடைபெற்ற புலன் விசாரணையில் ஞானசேகரன் என்ற ஒருவர் மட்டுமே குற்றவாளி எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஞானசேகரன் மீது ஏற்கெனவே திருட்டு உள்பட 20 வழக்குகள் உள்ளன. 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர்மீது எந்த வழக்கும் பதிவாகவில்லை. இதுபோல வேறு யார் பாதிக்கப்பட்டிருந்தாலும் தைரியமாக புகாரளிக்க முன்வர வேண்டும்," என்றார்.
கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் தமிழக தலைநகரின் முக்கிய இடங்களில் ஒன்று. அங்கு இத்தகைய சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்துப் பேசிய மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், "இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க பல்கலைக்கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும்" என்று உறுதியளித்தார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய அண்ணாமலை, இதை வன்மையாகக் கண்டித்ததோடு சாட்டையடி போராட்டத்தையும் மேற்கொண்டார்.
டிசம்பர் 26ஆம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்" என்று கூறினார்.
மேலும், டிசம்பர் 27 அன்று காலை 10 மணியளவில் கோயம்புத்தூரில் தனது வீட்டின் முன்பாக, அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் சில முறை அடித்துக்கொண்டார். அப்போது அங்கிருந்த பாஜக தொண்டர்கள் திமுகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
தனது சாட்டையடி போராட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை தான் கையில் எடுத்துள்ள போராட்டம் வருங்காலத்தில் மிகவும் தீவிரமாகும் என்றார்.
"அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருக்கிறது. கல்வியின் தரம் சரியத் தொடங்கியுள்ளது. பொருளாதாரம் பின்தங்க ஆரம்பித்துள்ளது. தமிழ்நாட்டில் பெண்கள் மீதான குற்றச்செயல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இன்று இந்தப் போராட்டத்தைத் வேள்வியாகக் கையில் எடுத்துள்ளோம்" என்றார்.
அதோடு 48 நாட்கள் விரதம் இருக்கவுள்ளதாகக் கூறியதோடு, திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணியப் போவதில்லை என்றும் சூளுரைத்தார்.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி அதிமுக வழக்கறிஞர் வரலட்சுமி, பாஜக வழக்கறிஞர் மோகன்தாஸ் ஆகியோர் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. டிசம்பர் 27ஆம் தேதி மாலை நடந்த விசாரணையின்போது, "வழக்கு விசாரணையில் இருக்கும்போதே காவல் ஆணையர் எப்படி கைதானவர்தான் குற்றவாளி என்ற முடிவுக்கு வந்தார்?" என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
அதோடு பாதிக்கப்பட்ட மாணவியைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், "பெண்கள் ஆண்களுடன் பேசக்கூடாது, மாணவி அங்கு சென்றிருக்ககூடாது என்று கூறக் கூடாது. காதல் என்பது பெண்களின் தனிப்பட்ட சுதந்திரம்," எனக் கூறினர். எஃப்.ஐ.ஆர் வெளியானது குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மறுநாள்(டிசம்பர் 28) விசாரணையின்போது, எஃப்.ஐ.ஆர் வெளியானது குறித்து விளக்கமளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெளியாகிவிட்டதாக விளக்கமளித்தார். அதேவேளையில், இந்த விவகாரத்தில் 14 பேர் மீது விசாரணை நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சர்ச்சையான காவல் ஆணையரின் செய்தியாளர் சந்திப்பு குறித்து விளக்கமளித்த அரசு தலைமை வழக்கறிஞர், இந்த வழக்கில் காவல்துறை யாரையும் பாதுகாக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தவே காவல் ஆணையர் செய்தியாளர்களைச் சந்தித்ததாக தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளது. 189 ஏக்கர் பரப்பிலான வளாகத்தில் 8 வழிகள் உள்ளன. வளாகத்தில் 988 கேமராக்கள் உள்ளன. அதில் 849 செயல்படுகின்றன. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருகிறது," என்று தெரிவித்தார்.
இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மணி, "குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர் செல்வாக்கு நிறைந்த அரசியல் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்" என்றார்.
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், "ஒரு நிகழ்வில் நம்முடன் ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொள்வதை வைத்து முடிவுக்கு வரக்கூடாது. இது பொருந்தாத வாதம்" எனக் கண்டித்து, குற்றச் சம்பவம் குறித்து மட்டும் பேசுமாறு கூறினர்.
இறுதியாக, மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு மூன்று பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதோடு, மாணவிக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்குமாறு மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கிண்டியில் சுமார் 180 ஏக்கர் பரப்பளவில் அண்ணா பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இதன் வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி, ஏ.சி. டெக், ஸ்கூல் ஆஃப் ஆர்கிடெக்சர் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் 13,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். வளாகத்தில் மூன்று விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
உயர்தர தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கல்வியை வழங்குவதன் மூலம் தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை வடிவமைப்பதில் அண்ணா பல்கலைக்கழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
கடந்த 1978இல் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம், மாநிலத்தின் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்குப் பங்களிக்கும் திறமையான நிபுணர்களை உருவாக்கும் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது.
ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான வலுவான அடித்தளத்துடன், பரந்த அளவிலான இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் திட்டங்களை அண்ணா பல்கலைக்கழகம் வழங்குகிறது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.