வெளிநபர்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது.. கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசிடம் இருந்து பறந்த உத்தரவு!

post-img
சென்னை: பல்கலைக்கழக வளாகங்களில் வெளி நபர்களுக்கு அனுமதி கிடையாது என தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். பல்கலைக்கழக வளாகங்களுக்குள் வரும் மாணவர்கள் கட்டாயம் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் எனவும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மிக கவனமாக இருக்க வேண்டும் எனவும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உயர்கல்வித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவியை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக எடுத்து மிரட்டிதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், புகார் அளிப்பதற்கு காவல் நிலையத்திற்கு மக்கள் வருவதற்கே பயப்படும் நிலைதான் தற்போது உள்ளது. அரசு அதிகாரிகள் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு விசாரணை செய்யும் என உத்தரவிட்டனர். மேலும், மாணவி புகார் தொடர்பான FIR பொதுவெளியில் கசிந்ததற்காக பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் அரசு இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த தொகையை குற்றத்தில் தொடர்புடையவர்களிடம்( காவல்துறை அதிகாரிகள் உட்பட) வசூலிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை. சென்னை காவல் ஆணையர் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது. அதோடு, பாதிக்கப்பட்ட மாணவியிடம் இருந்து கல்வி கட்டணம், விடுதிக் கட்டணம் என ஏதும் அண்ணா பல்கலைக்கழகம் வசூலிக்கக் கூடாது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளில் பதிவு செய்யப்படும் எப்ஐஆர் வெளியாகாமல் இருப்பதை காவல்துறை ஆணையர் உறுதிபடுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். சென்னை அண்ணா நகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது தமிழக அரசு. தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், கல்வி நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உயர் கல்வித்துறை செயலாளர் கோபால் தலைமையில் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், பாதுகாப்பு விவகாரத்தில் குளறுபடி ஏற்பட்டால் ஏற்றுக்கொள்ள முடியாது கல்வி நிறுவனங்களுக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களுக்குள் வந்து செல்லும் வெளிநபர்கள், பணியாளர்கள் குறித்த பதிவு செய்து கட்டாயம் பராமரிக்க வேண்டும். வேலை நிமித்தமாக வரக்கூடிய எலக்ட்ரீசியன்கள், பிளம்பர்கள் உள்ளிட்டோரின் விவரங்களை தவறாமல் பதிவு செய்ய வேண்டும். பாதுகாப்பு விவகாரத்தில் குளறுபடி ஏற்பட்டால் ஏற்க முடியாது. பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களை பாதுகாப்பிற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் புகார்கள் எழுந்தால் கடுமையான, விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்கல்வித் துறை செயலாளர் நடத்திய ஆலோசனைக்கு பின் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post