புதுசு கண்ணா புதுசு.. நடிகர் விஜய் கட்சி அறிவிப்பு முதல் ஆளுநர் சந்திப்பு வரை.. எல்லாமே தினுசுதான்!

post-img
சென்னை: நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என கட்சியை அறிவித்தது முதல் இன்றைய ஆளுநர் ஆர்.என்.ரவியுடனான சந்திப்பு வரை தமிழ்நாட்டு அரசியல் களத்தில் அனைத்தையும் வழக்கத்துக்கு மாறாகவே மேற்கொண்டு வருவதும் பேசு பொருளாகி இருக்கிறது. பொதுவாக ஆளுநரை சந்தித்து மனு தரும் அனைத்து அரசியல் தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் தரும் மரபை கைவிட்டு பத்திரிகை செய்தி மூலம் விளக்கம் தந்துள்ளார் நடிகர் விஜய். தமிழ்நாட்டு அரசியல் களத்தில் ஒரு கட்சியை தொடங்குவது, கொள்கைகளை அறிவிப்பது என்பது உள்ளிட்ட அனைத்தும் ஒரு பார்முலா படி அல்லது மரபுப்படியாகவே நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில்தான் என்றில்லை அரசியல் களங்களில் பொதுவாக சில நடைமுறைகள் உலகம் முழுவதும் இருந்து வருகிறது. ஆனால் நடிகர் விஜய் தமது அரசியல் நடவடிக்கைகள் அனைத்திலும் இந்த மரபுகளை கைவிட்டு அரசியல் களத்தில் பயணித்துக் கொண்டே இருக்கிறார். சமூக வலைதளத்தில் கட்சி பெயர் அறிவிப்பு பொதுவாக, ஒரு மாநாட்டை நடத்தி அதில் கட்சி பெயர், கொடி, கொள்கைகளை அறிமுகம் செய்வது வழக்கம். ஆனால் நடிகர் விஜய் தமது கட்சியினர் பெயர் தமிழக வெற்றி கழகம் என முதலில் சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டார். இந்த பெயரில் வெற்றிக் கழகம் என வர வேண்டும் என்கிற விமர்சனங்கள் வந்த நிலையில் அடுத்ததாக கட்சிப் பெயரையும் மாற்றி சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டார். தேர்தலில் போட்டியிடவில்லை நடிகர் விஜய் அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்தை அறிவித்த போதே, லோக்சபா தேர்தல் நெருங்கியிருந்தது. ஆனால் அரசியல் கட்சி தொடங்கிவிட்ட நடிகர் விஜய்- லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டோம்; 2026 சட்டசபை தேர்தலில்தான் களமிறங்குவோம் என அறிவித்தார். கொடி அறிமுகமும் சர்ச்சையும் இதனையடுத்து நடிகர் விஜய் கட்சி கொடியை நிர்வாகிகள் கூட்டத்தில் அறிமுகம் செய்தார். இந்த கட்சி கொடிக்கான விளக்கத்தை மாநாட்டில் விளக்குகிறேன் என்றார். அப்போது கட்சி கொடியில் இடம் பெற்றிருந்த யானை உருவங்கள் குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன. முதலாவது மாநாடு இதன் பின்ன தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநாடு விக்கிரவாண்டி அருகே நடைபெற்றது. பொதுவாக மாநாடு என்றால் கருத்தரங்கம், கவியரங்கம்.. பல்வேறு தலைப்புகளில் பல்வேறு கட்சி நிர்வாகிகள் உரை, புதிய நிர்வாகிகள் அறிமுகம் என்கிற வகையில் இருக்கும். திமுகவின் மாநாடுகள் 2 நாட்கள், 3 நாட்கள் நடைபெற்ற வரலாறும் உண்டு. அதிமுகவும் அதே பார்முலாவில் மாநாடு நடத்தியிருக்கிறது. வித்தியாசமாக மாநாடு நடத்திய விஜய் ஆனால் நடிகர் விஜய் தலைமை வகித்த மாநாடு மேற்படி பார்முலா அல்லது மரபுகளுடன் இருக்காமல் மாறுபட்டதாகவே இருந்தது. நடிகர் விஜய், தவெகவின் சில நிர்வாகிகள் மட்டும் மேடையில் அமர்ந்திருக்க, நடிகர் விஜய் மட்டுமே முழக்கமிட்டார். நடிகர் விஜய் கட்சியின் கொள்கை, கோட்பாடு என்பதை பற்றி எல்லாம் விரிவாக பேசினார். அப்போதும் கூட விஜய் கட்சி மாநாட்டுக்காக வந்தவர்களுக்கு ஏன் இரங்கல் தெரிவிக்கவில்லை என்கிற சர்ச்சை வெடிக்க 2 நாட்கள் கழித்து அறிக்கை மூலம் இரங்கல் தெரிவித்திருந்தார் விஜய். அறிவித்த கொள்கைகளுக்கு விளக்கம் பின்னர் பனையூர் அலுவலகத்தில் தவெகவின் செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டு மாநாட்டில் விஜய் பேசிய பேச்சு, அறிவித்த கொள்கைகளுக்கு விளக்கம் தரும் வகையில் அதாவது தவெகவின் கொள்கைகள் என்ன என்பதை ஒரு வடிவத்துக்கு கொண்டு வரும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதுவும் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வீட்டுக்கே வரவழைத்து வெள்ள நிவாரணம் இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பொதுவாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் அப்பகுதிகளுக்கு அரசியல் தலைவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்குவர்; ஆனால் நடிகர் விஜய் இதிலும் மாறுபட்டவராக பனையூர் வீட்டுக்கே பாதிக்கப்பட்டவர்களை வரவழைத்து வெள்ள நிவாரணம் வழங்கினார். இதுவும் பேசுபொருளானது. ஆளுநருடன் சந்திப்பும் செய்தியாளர் சந்திப்பு தவிர்ப்பும் இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பலாத்கார விவகாரம் பெரும் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இதில் தமது பங்குக்கு கண்ட அறிக்கை வெளியிட்டார். பின்னர் கைப்படி கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து திடீரென தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு கொடுத்தார். பொதுவாக ஆளுநர்களை எந்த மாநில அரசியல் தலைவர்கள் சந்தித்தாலும் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் தருவது அரசியல் மரபுதான். ஆனாலும் இங்கேயும் நடிகர் விஜய், ஆளுநர் மாளிகையில் காத்திருந்த செய்தியாளர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு மட்டும் சென்றார். செய்தியாளர்களிடம் எதுவும் பேசவில்லை. இதன் பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் என்ன மனு கொடுக்கப்பட்டது என ஒரு பத்திரிகை செய்திக் குறிப்பு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. இப்படி கட்சி பெயர் அறிவிப்பு முதல் ஆளுநர் சந்திப்பு வரை மரபுகளுக்கு அப்பால் நடிகர் விஜய் எனும் அரசியல் தலைவர் செயல்படுவதுதான் பேசுபொருளாகவே இருந்தும் வருகிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post