பெய்ஜிங்: உலகில் முதல் முறையாக அமெரிக்கா, ரஷ்யாவிடம் இல்லாத 6ம் தலைமுறை விமானத்தை சீனா தயாரித்து வானில் பறக்க விட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வரும் நிலையில் சீனாவின் இந்த செயல் மொத்த உலக நாடுகளையும் அலற வைத்துள்ளது. குறிப்பாக நம் நாடு விமான துறையில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
நம்மை பொறுத்தவரை ராணுவம், கடற்படை, விமானப்படையில் தலைசிறந்த நாடு என்றால் அமெரிக்காவை தான் சொல்வோம். ஏனென்றால் அமெரிக்கா என்பது கடந்த 1945ம் ஆண்டிலேயே விமானம் மூலம் அணுகுண்டு வீசி ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகியை அழித்துள்ளது. இதுதவிர இப்போது வரை உலகின் பல்வேறு நாடுகளின் போர்களில் அமெரிக்கா தனது விமானப்படை மூலம் வெற்றியை வசமாக்கி வருகிறது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் வியட்நாம் போர் முதல் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போர் வரை அமெரிக்கா தனது வான்படையால் எதிரிகளை கொன்று குவித்துள்ளது. இதனால் தான் அமெரிக்கா விமானப்படையில் சிறந்து விளங்குவதாக பலரும் நம்புகின்றனர். இதற்கு அடுத்தப்படியாக ரஷ்யா, அதன்பிறகு சீனா ஆகிய நாடுகளின் விமானப்படையும் அதிபயங்கரமாக உள்ளது.
இந்த அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 3 நாடுகளுமே 5ம் தலைமுறை விமானங்களை வைத்துள்ளன. அமெரிக்காவிடம் லாக்ஹிட் மார்ட்டின் எஃப் 22 ராப்டர் (Lockheed Martin F-22 Raptor) மற்றும் லாக்ஹுட் மார்ட்டின் எஃப் 35 லைட்னிங் II (Lockheed Martin F-35 Lightning II) ஆகிய 5ம் தலைமுறை விமானங்கள் உள்ளன. ரஷ்யாவிடம் மிக் 31 (MiG-31) மற்றும் சுகோய் சு-75 (Sukhoi Su-75) என்ற 5ம் தலைமுறை விமானங்கள் இருக்கின்றன. சீனாவை எடுத்து கொண்டால் செங்குடு ஜே -20 (Chengdu J-20) மற்றும் சென்யாங் ஜே-35 (Shenyang J-35) ரக 5ம் தலைமுறை விமானங்கள் உள்ளன.
இந்த நாடுகள் யாரிடமும் 6ம் தலைமுறை விமானங்கள் என்பது இல்லாமல் உள்ளது. இந்த விமானங்களை தயாரிப்பதற்கான பணிகளில் அந்தந்த நாடுகள் நீண்டகாலமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தான் தற்போது உலக நாடுகள் அனைத்துக்கும் சீனா அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. அதாவது உலகில் முதல் முறையாக 6ம் தலைமுறை விமானத்தை வானில் பறக்கவிட்டு சோதனை செய்துள்ளது சீனா.
அதாவது சீனாவில் போர் விமானங்கள் மற்றும் டிரோன்கள் தயாரிக்கும் செங்குடு விமான நிறுவனத்தின் விமான தளத்தின் மேற்பகுதியில் இந்த 6ம் தலைமுறை விமானம் பறந்து சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இதன்மூலம் மொத்த உலக நாடுகளுக்கும் சீனா அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. அதோடு விமான தொழில்நுட்பத்தில் அமெரிக்கா, ரஷ்யாவை தாண்டி முன்னணியில் இருப்பதை சீனா உலகிற்கு உணர்த்தி உள்ளது.
தற்போது வெளியாகி உள்ள இந்த வீடியோவில் மொத்தம் 3 விமானங்கள் பறக்கின்றன. அதாவது 6ம் தலைமுறை விமானம் வானில் பறக்க அதன் பின்னணியில் இருபுறமும் சீனாவின் 5ம் தலைமுறை விமானமான செங்குடு ஜே -20 பறந்து செல்கிறது. இருப்பினும் அந்த 6ம் தலைமுறையின் விமானத்துக்கு வைக்கப்பட்டுள்ள பெயர், அதில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றிய விபரங்கள் எதையும் சீனா இன்னும் வெளியிடவில்லை. அதனை ரகசியம் காத்து வருகிறது.
இருப்பினும் தற்போது வெளியான வீடியோவில் உள்ள விமானத்தை வைத்து விமானம் மற்றும் பாதுகாப்பு துறை வல்லுனர்கள் சீனாவின் 6ம் தலைமுறை விமானம் பற்றிய முக்கிய தகவல்களை கூறியுள்ளனர். அதாவது வீடியோவில் இருக்கும் சீனாவின் 6ம் தலைமுறை விமானத்தில் வால் பகுதி என்பது இல்லை. இதனால் அந்த விமானம் ஸ்டெல்த் (Stealth) போர் விமான வகையை சேர்ந்ததாக இருக்கலாம். அதோடு ஸ்டெல்த் வகை என்பதால் இந்த விமானம் ரேடார் மற்றும் பிற சென்சார்களிடம் சிக்காமல் எதிரி நாடுகளுக்குள் நுழைந்து அதிரடி தாக்குதலை நடத்தும் திறன் கொண்டதாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
இந்த விமானம் 5ம் தலைமுறை விமானத்தை விட அகலமாகவும் பெரிதாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானத்தின் உருவத்தை வைத்து பார்க்கும்போது மொத்தம் 3 இன்ஜின்கள் இருக்கலாம். 2 இன்ஜின்கள் விமானத்தின் கீழ் பகுதியிலும், ஒரு இன்ஜின் விமானத்தின் முன்புறம் இருக்க வாய்ப்புள்ளது. அதிக வேகத்தில் செல்லக்கூடிய திறன் கொண்டுள்ளது.
அதுமட்டுமின்றி அதிகப்படியான ஆயுதங்களை விமானத்தால் தாங்கி செல்ல முடியும். இதற்கு ஏற்றாற்போல் தான் விமானத்தின் முன்பகுதியில் 2 டயர்கள் உள்ளன. இதனால் இந்த விமானம் அடிப்படையிலேய அதிக எடையுடன் தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை உள்ளிட்ட பிற ஏவுகணைகளை இந்த விமானத்தால் தாங்கி சென்று ரேடாரில் சிக்காமல் எதிரி நாட்டில் தாக்க முடியும்.
அதோடு இந்த விமானம் அதிக உயரத்தில் அதாவது பூமியின் வளிமண்டலத்தை தாண்டி கூட பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கலாம், ஏஐ தொழில்நுட்ப பயன்பாடு, லேசர் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதவிர இந்த விமானத்தை பைலட் மூலமாகவும், தானியங்கி முறையிலும் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் இவை அனைத்தும் தற்போது வெளியான வீடியோவில் இடம்பெற்ற 6ம் தலைமுறை விமானத்தின் டிசைனை வைத்து யூகிக்கப்படும் தகவல்கள் தான். மற்றபடி சீனா அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. அதுபற்றிய விபரங்களை சீனா கூறிய பிறகு தான் இந்த விமானத்தின் முழுமையான தகவலை நம்மால் கூற முடியும். இருப்பினும் சீனாவின் இந்த 6ம் தலைமுறை விமானம் என்பது அமெரிக்காவை உண்மையில் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இருநாடுகள் இடையே மோதல் உள்ள நிலையில் சீனா, அமெரிக்காவை விட விமானப்படையில் ஒருபடி முன்னேறி சென்றுள்ளது.
அதேபோல் நம் நாட்டுக்கும், அண்டை நாடான சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. இதனால் சீனாவின் 6ம் தலைமுறை விமானம் என்பது நம் நாட்டுக்கும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. சீனா 6ம் தலைமுறை விமானத்தை தயாரித்துள்ள நிலையில் நம் நாட்டில் இன்னும் 5ம் தலைமுறை விமானம் கூட இல்லை. அதோடு ரேடாரில் சிக்காமல் செல்லும் வகையிலான ஸ்டெல்த் விமானங்கள் நம் நாட்டிடம் இல்லை.
அதாவது 5ம் தலைமுறை விமானமாக ஸ்டெல்த் ஏஎம்சிஏ (Advanced Medium Combat Aircraft) மல்டிரோல் போர் விமானம் தயாரிப்பதற்கு மத்திய அரசு சுமார் ரூ.15 ஆயிரம் கோடி திட்டத்தை வகுத்துள்ளது. அதற்கான டிசைன் உள்ளிட்ட பணிகள் இப்போது தான் தொடங்கி உள்ளது. ஆனால் சீனா 6வது தலைமுறை விமானத்தை தயாரித்து விட்டது. இது நம் நாட்டுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் சீனா தனது 6வது தலைமுறை விமானம் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா உள்பட அனைத்து நாடுகளையும் அலறவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.