செளமியாவுக்கு சீட்டு கொடுத்தது ஏன்? இது பக்கா நாடகம்! காடுவெட்டி மருமகன் சவுக்கடி

post-img
சென்னை: பாமகவில் மூத்த தலைவர்கள் பலர் இருக்கும்போது அன்புமணி கட்சிக்குள் வந்தவுடனேயே மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்ட போது இதே விமர்சனத்தை ஏன் வைக்கவில்லை என்று காடுவெட்டி மருகன் கேள்வி எழுப்பி இருக்கிறார். மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நேற்றைக்கு நடைபெற்ற பாமக புத்தாண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் யாரும் எதிர்பாராத விதமாக அன்புமணிக்கும் அவரது தந்தைக்கும் இடையே மோதல் உருவானது. தனது பேரன் முகுந்தனுக்கு இளைஞர் சங்கத் தலைவர் பதவியை ராமதாஸ் வழங்கியதை அடுத்து மேடையிலேயே தனது கண்டனத்தைப் பதியவைத்தார் அன்புமணி. “கட்சிக்குள் வந்து 4 மாதங்கள்தான் ஆகிறது. அவருக்கு என்ன அனுபவம் இருக்கிறது? அவருக்கு ஏன் உடனடியாக பதவி தரவேண்டும். ஒரு குடும்பத்திற்குள்ளாகவே பதவியை தரவேண்டுமா?” என்று மேடையிலேயே விமர்சித்தார். மேலும் பனையூரில் தான் தனியாக அலுவலகம் போட்டுள்ளதாகப் பேசிய அன்புமணி, அவரை தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்ணையும் அறிவித்தார். அதனையடுத்து பாமகவுக்குள் சலசலப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸை கட்சியின் மூத்த தலைவர்களுடன் சென்று அன்புமணி சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர்கள் அங்கே குவிந்ததால், “5 லட்சம் பேரை வைத்து மாநாடு நடத்தினோம். அப்போது ஒரு ஊடகமும் வரவில்லை. கவரேஜ் கொடுக்கவில்லை. இதே கவரேஜை அப்போதும் கொடுத்திருக்கலாம்” என்று ஊடகங்களை விமர்சித்தார்.ஆகவே கடந்த இரண்டு நாட்களாகவே ஊடகங்களில் பாமக மோதல் பற்றிய விவாதங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் காடுவெட்டி குருவின் மருமகன் மனோஜ், இந்தச் சண்டை அப்பட்டமான நாடகம் என்று பேசி இருக்கிறார். அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், “கட்சிக்கு வந்து 3 மாதங்கள்தான் ஆகிறது என்று அன்புமணி இன்று சொல்வதைப் போல அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்த போது சொல்லி இருந்தால், நான் பெருமையாக நினைத்து இருப்பேன். ராமதாஸ் இந்தக் கட்சிக்கான சிறைக்குச் சென்றவர். அதேபோல் ஜி.கே.மணி, தீரன் போன்றவர்கள் கட்சிக்காகச் சிறைக்குச் சென்றவர்கள். அன்புமணி அப்படி எந்தத் தியாகத்தையும் செய்யவில்லை. அன்புமணிக்கு பொதுக்குழுவுக்கு வருவதற்கு முன்னால் முகுந்தனுக்குப் பதவி தரப்போகிறார் என்பது தெரியாதா? அதை வீட்டில் விவாதிக்காமலா ராமதாஸ் மேடையில் அறிவித்தார்? இது பக்கா நாடகம்? ராமதாஸ் மகளின் கணவர் பரசுராமனின் மூன்றாவது மகன் முகுந்தன். அன்புமணியின் மருமகனின் தம்பி. ஒருவேளை இவரது மருமகனுக்குப் பதவிக் கொடுக்கவில்லை என எதிர்க்கிறாரா அன்புமணி? இன்று குடும்பத்திற்குள் ஏன் பதவி கொடுக்க வேண்டும் என்று கேட்பவர், தனது மனைவியைச் சீட்டுக் கொடுத்து எம்பி தேர்தலில் ஏன் நிற்கவைத்தார்? ஒரு சம்பந்திக்கு எம்பி சீட் கொடுத்தார். இன்னொரு சம்பந்திக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்தார். பாண்டிச்சேரியில் தன்ராஜுக்கு எம்பி சீட் கொடுத்தாரா? அவர் யார்? அவரும் அன்புமணி குடும்பம்தானே? அன்றைக்கு அன்புமணிக்கு எம்பி சீட் கொடுக்கும்போது காடுவெட்டி குரு மூலம் கட்சிக்குள் அவரை ராமதாஸ் கொண்டுவந்தார். அன்றைக்கு அன்புமணி தேர்தலில் நின்று எம்பி ஆகவில்லை. ராஜ்யசபா மூலம் அமைச்சரானார். அன்று கட்சிக்காக உயிர்த் தியாகம் செய்த குடும்பத்தினருக்கு பதவி கொடுங்கள் என அன்புமணி ஏன் சொல்லவில்லை. கடந்த மூன்று மாதங்களாகவே அப்பாவுக்கும் மகனுக்கும் ஒத்துவரவில்லை என்ற நாடகமாடி வருகிறார்கள். ராமதாஸ்தான் நான் உருவாக்கிய கட்சி. பிடிக்காதவர்கள் வெளியே போகலாம் என்று சொல்லிவிட்டார் இல்லையா? இவர் வெளியே போகவேண்டியதுதானே? அன்புமணி கட்சியை விட்டு வெளியேறினால் அவருடைய நிழல்கூட பின்னால் வராது. இந்தக் கட்சியை ராமதாஸ் மட்டும் உருவாக்கவில்லை. பலரது உயிர்த் தியாகத்தால் கட்சி உருவான. அன்று வென்று மஞ்சள் பையுடன் வந்தவர்கள் இன்று ஆடி காரில் போகிறார்கள். இந்த வசதி எப்படி வந்தது?” என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post