பிரபல உதயம் தியேட்டர் நிரந்தரமாக மூடல்.. ரசிகர்கள் அதிர்ச்சி! அடுத்து அங்கு என்ன வருகிறது தெரியுமா

post-img
சென்னை: பாராகான், சன், மெலடி, சாந்தி, பிரார்த்தனா டிரைவ்-இன், ஸ்ரீனிவாசா, ஜெயந்தி, வெலிங்டன் மற்றும் ஆனந்த் என நகர் முழுக்க இருந்த பல முக்கிய தியேட்டர்கள் கடந்த 20 ஆண்டுகளில் மூடப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இப்போது நகரின் பிரதான இடத்தில் அமைந்திருந்த உதயம் தியேட்டரும் இணைந்துள்ளது. உதயம் தியேட்டர் மூடப்பட்டுள்ள நிலையில், அங்கு அடுத்து என்ன அமையப் போகிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம். என்ன தான் ஓடிடி தளங்கள் வந்துவிட்டாலும் பெரிய திரையில் தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவமே தனி. இதன் காரணமாகவே பெரிய நட்சத்திரங்கள் படங்கள் ரிலீஸ் ஆகும் போது தியேட்டர்கள் ஹவுஸ் புல் ஆகிறது. உதயம் தியேட்டர்: இருப்பினும், முன்பு போல இப்போது மக்கள் தியேட்டருக்கு செல்ல ஆர்வம் காட்டுவதில்லை என்பது உண்மை தான். இதனால் பெரிய மல்டிபிளக்ஸ் செயின்களை தவிர மற்ற தியேட்டர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறது. இதனால் கடந்த 20 ஆண்டுகளில் சென்னையில் பல முக்கிய தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. அந்த லிஸ்டில் இப்போது அசோக் பில்லர் அருகே அமைந்துள்ள உதயம் தியேட்டரும் இணைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பே இது குறித்த தகவல் வெளியான நிலையில், உதயம் தியேட்டர் மூடப்படுவது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அசோக் நகரில் உள்ள உதயம் தியேட்டர் 1983ம் ஆண்டு மே 27ம் தேதி திறக்கப்பட்டது. சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா ரசிகர்கள் விரும்பி செல்லும் தியேட்டர்களில் ஒன்றாக உதயம் தியேட்டர் இருந்துள்ளது. மேலும், நகரின் முதல் மல்டிபிளக்ஸாக உதயம் இருக்கிறது. உங்கு உதயம், மினி உதயம், சூரியன் மற்றும் சந்திரன் திரையரங்குகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. மூடப்பட்ட தியேட்டர்: ரஜினிகாந்த்தின் 'சிவப்பு சூரியன்’ முதல் கமல்ஹாசனின் 'சாட்டை’ வரை பல மெகா ஹிட் படங்கள் இங்கு ஓடியுள்ளன. இப்படிப் பல ஹிட் படங்களைத் திரையிட்ட உதயம் தியேட்டர் கடந்த டிசம்பர் 8 முதலே மூடப்பட்டுள்ளது. கடைசியாக அங்கு புஷ்பா 2 திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் திரைப்பட போஸ்டர்கள், திரளாகத் திரண்டு வந்த மக்கள் கூட்டம் எனப் பரபரப்பாகக் காணப்பட்ட உதயம் தியேட்டர் இப்போது ஆள் நடமாட்டமே இல்லாமல் அமைதியாகக் காணப்படுகிறது. ஓரிரு ஊழியர்கள் மட்டுமே இப்போது அங்கே இருக்கிறார்கள். என்ன பிரச்சினை: தொடர்ந்து இதுபோன்ற பெரிய தியேட்டர்கள் மூடப்பட்டு வரும் வருவது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், "பெரிய தியேட்டர்களை நடத்த ஆகும் செலவு ரொம்பவே அதிகம். 500 முதல் 700 பேர் இருக்கும் ஒரு தியேட்டரை நடத்த உங்களுக்கு மாதம் குறைந்தது ரூ. 4 லட்சம் வரை செலவாகும். அதில் மின்சார கட்டணம் தான் அதிகம். சென்னை போன்ற நகரங்களில் இவ்வளவு செலவில் ஒரு தியேட்டரை நடத்துவது ரொம்பவே கஷ்டம். அதேநேரம் சிறு சீட்டிங் கொண்ட மல்டிபிளக்ஸ்கள் இதில் தப்பிவிடும். அதில் 200 முதல் 300 சீட்கள் மட்டுமே இருக்கும் என்பதால் அதில் பெரியளவில் செலவாகாது. ஒரு ஸ்கிரீனில் ஓடும் படம் சுமாராக போனாலும் கூட மற்றொரு ஸ்க்ரீனில் வரும் வருவாயைக் கொண்டு சமாளிக்கலாம். ஆனால், சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டருக்கு அப்படி இல்லை. செலவுகளைச் சமாளிப்பதே ரொம்ப கடினம்" என்றார். என்ன ஆகும்: மேலும், சென்னையின் நகர்ப் பகுதிகளில் இப்போது ரியல் எஸ்டேட் தேவை உச்சத்தில் இருக்கிறது. இதனால் இதுபோன்ற இடங்கள் அப்படியே குடியிருப்பு கட்டிடங்களாக மாற்றப்படுகிறது. ஏற்கனவே, சாந்தி தியேட்டர், அபிராமி உள்ளிட்ட தியேட்டர்கள் குடியிருப்புகளாக மாற்றப்பட்டுள்ளன. உதயம் தியேட்டர் இருக்கும் இடத்தில் அடுத்து என்ன அமையப் போகிறது என்பது குறித்து முறையான அறிவிப்பு வரவில்லை என்ற போதிலும், பெரும்பாலும் குடியிருப்பு வளாகமே வரும் எனச் சொல்லப்படுகிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post