தாயை இழந்த கோவை குட்டி யானையை எந்த யானை கூட்டமும் ஏற்கவில்லை – முதுமலைக்கு அனுப்பப்பட்ட சோகம்

post-img
கோவை: கோவை மாவட்டத்துக்கும், யானைக்கும் எப்போதுமே நெருங்கிய பந்தம் உள்ளது. துடியலூர் வரப்பாளையம் அருகே கடந்த வாரம் ஒரு பெண் யானை உயிரிழந்தது. அதன் அருகிலேயே பிறந்து சில நாட்களே ஆன குட்டி யானை தவித்தது. அந்த குட்டியை வேறு யானை கூட்டத்துடன் சேர்ப்பதற்கு வனத்துறையினர் ஒரு வாரமாக முயற்சி செய்தனர். ஆனால் மற்ற எந்த கூட்டமும் அந்த குட்டியை ஏற்றுக் கொள்ளவில்லை. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருப்பதால் பொதுவாகவே யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். இது யானைகளின் வலசை காலம். அதனால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் உள்ள யானைகள் ஆங்காங்கே வலசையில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக காட்டை ஒட்டிய கிராமங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கோவை தடாகம் சுற்று வட்டாரப் பகுதிகளில் மட்டுமே 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. வலசை காலம் என்பதால் கேரளாவில் இருந்து கோவைக்கு அதிகளவு யானைகள் வந்துள்ளன. இரவு நேரத்தில் யானைகள் கூட்டம் கூட்டமாக ஊருக்குள்ளும், விவசாய நிலத்திலும் சேதம் ஏற்படுத்தி வருகின்றன. வனத்துறையினர் தொடர்ந்து யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். துடியலூர் பன்னிமடை அருகே வரப்பாளையம் பகுதியில் கடந்த 24 ஆம் தேதி ஒரு பெண் யானை அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்தது. நஞ்சுண்டாபுரம் கிராமத்தில் 9 யானைகள் கொண்ட கூட்டம் புகுந்திருந்தது. அதை விரட்ட செல்லும்போதுதான் வனத்துறையினருக்கு இந்தத் தகவல் தெரியவந்தது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்த பெண் யானை அருகிலேயே பிறந்து சில நாட்களே ஆன ஒரு குட்டிபெண் யானை சுற்றித் திரிந்தது. அம்மாவை விட்டு பிரிய முடியாமல், காட்டுக்கும் செல்லத் தெரியாமல் குட்டி யானை தவித்தது. அந்தக் குட்டி யானையை மீட்ட வனத்துறையினர் தாய் யானை இருந்த கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். வனத்துறையினர் தொடர்ந்து நடத்திய கண்காணிப்பில் அந்தப் பகுதியில் மொத்தம் மூன்று யானை கூட்டங்கள் இருந்தது தெரிய வந்தது. குட்டி யானையை அந்த ஒவ்வொரு கூட்டத்துடனும் சேர்க்க வனத்துறையினர் முயற்சி செய்தனர். இதற்காக டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் இருந்து அனுபவம் வாய்ந்த பாகன்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த மூன்று யானைக் கூட்டங்களுமே இந்த குட்டியை தங்கள் குடும்பத்தில் சேர்க்க மறுத்துவிட்டன. இருப்பினும் வனத்துறை கடந்த 7 நாட்களாக குட்டி யானையை பாதுகாப்பான இடத்தில் பராமரித்து, அதை தொடர்ந்து பல்வேறு யானை கூட்டங்களுடன் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். முடிவில் வனத்துறையினரின் முயற்சிகள் தோல்வியடைந்தன. இதையடுத்து வனத்துறையினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து தலைமை வன உயிரின காப்பாளர் உத்தரவின் அடிப்படையில் குட்டி யானையை நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி வனத்துறையினர் குட்டி யானையை இன்று கோவையில் இருந்து முதுமலைக்கு கொண்டு சென்றனர். வனத்துறைக்கு சொந்தமான ஜீப்பில் குட்டி யானை அனுப்பி வைக்கப்பட்டது. வனக் கால்நடை மருத்துவர்கள் ஆலோசனைப்படி குட்டி யானைக்கு பால் மற்றும் இளநீர் உணவாக கொடுக்கப்பட்டு வருகிறது. முதுமலை யானைகள் காப்பகத்தில் அந்த குட்டி யானை பாகன்களால் பராமரிக்கப்படும் எனவும் வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post