நைய்பிடாவ்: நம் அண்டை நாடான மியான்மரில் நடக்கும் ராணுவ ஆட்சி மற்றும் வங்கதேசத்தில் நடக்கும் இடைக்கால அரசை தீவிரமாக எதிர்த்து வரும் அரக்கன் ஆர்மி எதிர்த்து வரும் நிலையில் நம் நாட்டுக்கு பக்கத்தில் புதிதாக இன்னொரு நாடு உருவாகிறதா? என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களாக நாம் அதிகம் கேள்விப்பட்டு வரும் ஒரு வார்த்தை அரக்கன் ஆர்மி. மியான்மரை மையப்படுத்தி செயல்பட்டு வரும் இந்த அரக்கன் ஆர்மி வங்கதேசத்தின் சில பகுதிகளை கைப்பற்றி விட்டதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகின.
இதன் அடுத்தக்கட்டமாக தற்போது இன்னொரு திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அரக்கன் ஆர்மி சுயாட்சி நடத்தும் வகையில் தனிநாடாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாம். இது நடக்கும் பட்சத்தில் நம் நாட்டின் அருகே புதிய நாடு உருவாகும்.
அதாவது நம் அண்டை நாடுகளில் ஒன்று மியான்மர். இங்கு கடந்த 2020ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் ஆங் சான் சூச்சி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது. இதன்மூலம் தான் ஆங் சான் சூச்சி வென்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு ராணுவ புரட்சி வெடித்தது.
கடந்த 2021ம் ஆண்டில் ஆங் சான் சூச்சி வீட்டு காவலில் வைக்கப்பட்டார். தற்போது மியான்மரில் ராணுவம் தான் ஆட்சி செய்து வருகிறது. இதனை Junta அரசு என்கின்றனர். ஜுண்டா அரசு என்பது மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சிக்கு பதில் ராணுவம் ஆட்சி புரிவதை குறிக்கும். இந்த ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கிளர்ச்சி படைகள் பல உருவாகி உள்ளன. அதில் ஒன்று தான் இந்த அரக்கன் ஆர்மி.
அதாவது அரக்கன் ஆர்மி என்பது ஒரு கிளர்ச்சி படையாகும். இந்த அரக்கன் ஆர்மி மியான்மரில் உள்ள யூஎல்ஏ எனும் யுனைடெட் லீக் ஆஃப் அரக்கன் (United League Of Arakan) அரசியல் கட்சியின் ஒரு பகுதியாக ராணுவ பிரிவு போல் செயல்பட்டு வருகிறது. இவர்கள் மியான்மர் நாட்டில் வசிக்கும் புத்த மக்களின் உரிமையை நிலைநாட்டுவதை நோக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக மியான்மரின் மேற்கு பகுதியில் உள்ள ராக்கைன் மாநிலத்தில் பிராந்திய சுயாட்சியை (Autonomous Region)கொண்டு வரும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது.
இதன் உள்அர்த்தம் என்னவென்று பார்த்தால் மியான்மரின் ஒருபகுதியாக ராக்கைன் மாநிலம் இருந்தாலும் அதன் செயல்பாடு என்பது தனித்தே இருக்கும். அதேபோல் ராக்கைன் மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு ஏற்ப சில முக்கிய முடிவுகளை மாற்றி கொள்ளும் அதிகாரம் கொண்டது. இதன்மூலம் ராக்கைன் மாநிலத்தை தனி நாடு போன்று கட்டமைக்கும் முயற்சியில் அரக்கன் ஆர்மி உள்ளது.
அதோடு மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி தான் நடக்கிறது. இதனால் ராணுவத்துக்கு எதிராக இந்த அரக்கன் ஆர்மி செயல்பட்டு வருகிறது. ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு பகுதிகளை தன்வசப்படுத்தியபடி அரக்கன் ஆர்மி முன்னேறி வருகிறது. அந்த வகையில் தற்போது ரக்கைன் மாநிலத்தின் பெரும்பான்மையான பகுதி அரக்கன் ஆர்மி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்த மாநிலம் என்பது மியான்மர் - வங்கதேசத்தின் எல்லையில் தான் அமைந்துள்ளது.
இதுதான் தற்போது இந்தியா, வங்கதேசம் உள்பட பல உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு வரை அமைதியாக இருந்த அரக்கன் ஆர்மி அதன்பிறகு ராணுவ புரட்சிக்கு எதிராக தீவிரமாக செயல்பட தொடங்கியது. குறிப்பாக கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மியான்மர் ராணுவத்துக்கு எதிராக உள்நாட்டு போரில் ஈடுபட்டு ரக்கைன் மாவட்டத்தை முழுவதுமாக தன்வசப்படுத்தி உள்ளது. இதில் பல்வேறு முக்கிய நகரங்கள், ராணுவ தளங்களும் அடங்கும். இந்த வாரத்தில் கூட ராணுவத்தின் மேற்கு கட்டுப்பாட்டு இடத்தை அரக்கன் ஆர்மி கைப்பற்றியது. இதன்மூலம் ஒரேயாண்டில் 2 முக்கிய ராணுவ கட்டுப்பாட்டு மையங்களை அரக்கன் ஆர்மி அபகரித்துள்ளது.
இந்த அரக்கன் ஆர்மி மற்றும் அதன் அரசியல் கட்சியான யூஎல்ஏ எனும் யுனைடெட் லீக் ஆஃப் அரக்கன் ஆகியவற்றின் முக்கிய நோக்கமே ரக்கைனை மையப்படுத்தி சுயாட்சி செய்யும் வகையில் தனி பிராந்தியத்தை உருவாக்குவது தான். அங்குள்ள புத்த மதத்தை சேர்ந்த மக்கள் மற்றும் முஸ்லிம்களை இணைத்து தனி சாம்ராஜ்யத்தை உருவாக்க திட்டமிட்டு வருகின்றனர். தற்போது ரக்கைன் மாநிலத்தை பெருமளவில் அரக்கன் ஆர்மி கைப்பற்றி உள்ளதால் விரைவில் அது மியான்மரின் subnational administrative division of a country ஆக உருவாகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரக்கன் ஆர்மியின் கட்டுப்பாட்டில் உள்ள ராக்கைன் மாநிலத்தை எடுத்து கொண்டால் அங்கு புத்த மதம் மற்றும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தான் அதிகம் வசித்தனர். ஆனால் கடந்த 2017 ல் மியான்மர் ராணுவம் ராக்கைன் மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக அடக்குமுறையை மேற்கொண்டது. இதனால் சுமார் 7.50 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அண்டை நாடான வங்கதேசத்துக்கு அகதிகளாக சென்றனர். இவர்கள் தற்போது வரை நாடு திரும்பவில்லை.
இந்நிலையில் தான் ராக்கைன் மாநிலத்தில் முஸ்லிம்களையும் (ரோஹிங்கியா) மக்களையும் சேர்த்து தனிநாட்டை உருவாக்க அரக்கன் ஆர்மி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. ஏனென்றால் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும், அரக்கன் ஆர்மிக்கும் கூட ஆகாத நிலை தான் உள்ளது. அதாவது கடந்த 2017 ல் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது மியான்மர் ராணுவம் அடக்குமுறையை கையாள்வதற்கு முன்பு அரக்கன் ஆர்மி, ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய வரலாறுகள் உண்டு. இதனால் அரக்கன் ஆர்மியை நம்பி ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்தில் இருந்து ராக்கைன் மாநிலத்துக்கு வருவார்களா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.