புத்தாண்டு பரிசாக அகவிலைப்படி உயர்வு கிடைக்குமா? தமிழக முதல்வருக்கு பறந்த கோரிக்கை

post-img
சென்னை: புத்தாண்டு பரிசாக அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் தமிழக முதல்வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர், பணிமனை தொழிலாளர்கள், மேற்பார்வையாளர்கள், அலுவலக பணியாளர்கள் என சுமார் 1.50 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் 95 ஆயிரம் பேர் உள்ளனர். போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 6 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்ட நிலையில் 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டது. 2019 ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சியில் இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது. அதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அரசாணையை ரத்து செய்துவிட்டு, ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குமாறு 2022- ஆம் ஆண்டு உத்தரவிட்டார். இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்குச் சென்றபோதும், அந்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. 2015 முதல் இதுவரை பணப்பலன்களைப் பெறாமலேயே 15 ஆயிரம் ஓய்வூதியர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ஓய்வூதியர்களுக்குத் தர வேண்டிய ரூ.3,028 கோடி நிலுவையில் உள்ளது. பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணத்தை கொண்டு வந்துவிட்டு, அதை ஈடுகட்ட போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் பலன்களை நிறுத்துவது நியாயமா என போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், இந்த புத்தாண்டுக்காவது, தங்கள் மனதில் பால்வார்க்கும் அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும் என ஓய்வூதியர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழக முதல்வருக்கு, அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளனர். இது தொடர்பாக அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.கதிரேசன் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதத்தில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் ஆற்றொணா துயரும், அல்லலும், பொருளாதார நலிவு காரணமாக வறுமையின் வாட்டமும் குறித்து மீண்டும் கவனத்துக்கு கொண்டு வருகிறோம். அனைத்துக்கும் காரணமாக இருப்பது தொடர்ந்து மறுக்கப்படும் அகவிலைப்படி உயர்வு தான். எனவே, மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அதிகாரிகளை அழைத்து பேசி, தேர்தல் வாக்குறுதிப்படி அகவிலைப்படி உயர்வை புத்தாண்டு பரிசாக அறிவிக்க வேண்டும் என 95 ஆயிரம் ஓய்வூதியர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்" என்று வலியுறுத்தி உள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post