தமிழ்நாட்டில் இரண்டு மடங்கு அதிகரித்த ரேபிஸ் நோய் மரணங்கள் - என்ன காரணம்?

post-img
தமிழ்நாட்டில் ரேபிஸ் நோய் பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படுவது கடந்த ஓராண்டில் ஏறக்குறைய இரு மடங்காக அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத் துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாய் கடித்த பிறகு ரேபிஸ் தடுப்பூசி போடுவதில் அலட்சியம் காட்டுவதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகக் கூறுகின்றனர் மருத்துவர்கள். தடுப்பு மருந்து முறையாகக் கிடைப்பதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார் அமைச்சர் மா.சுப்ரமணியன். ரேபிஸ் நோய் பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்? மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் பதில் என்ன? தமிழ்நாட்டில் வெறிநாய்க் கடியால் ஏற்படும் ரேபிஸ் நோய் (rabies) பாதிப்பு தொடர்பாக பிபிசி தமிழுக்கு பொது சுகாதாரத் துறை வழங்கிய புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டில் 40 பேர் ரேபிஸ் நோயால் இறந்துள்ளனர். அந்தத் தரவுகளின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 40 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 40 பேரும் இறந்துவிட்டதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் நாய்க்கடியால் கடந்த ஆண்டு 4,79,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டில் (2023) 4,41,804 பேர் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். 2023ஆம் ஆண்டில் 22 பேர் ரேபிஸ் நோயால் இறந்துள்ளனர். ஆனால், 2022ஆம் ஆண்டில் 8,83,213 பேரை நாய்கள் கடித்துள்ளன. இதுவே, கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகபட்ச எண்ணிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இதில் 28 பேர் ரேபிஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டில் 8,19,779 பேர் நாய்க்கடிக்கு சிகிச்சை எடுத்துள்ளனர். இவர்களில் 19 பேர் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு இறந்துள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டு நிலவரத்தைப் பார்த்தால் 7,14,447 பேர் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் 20 பேர் ரேபிஸ் பாதிப்பால் மரணித்துள்ளனர். "ஒரு லட்சம் பேரை நாய்கள் கடித்தால், அதில் ஒன்று அல்லது இருவருக்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்படும். ஆனால், கடந்த ஆண்டு பதிவான நாய்க் கடிகளின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது" என்கிறார் மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் காசி. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மாநிலம் முழுவதும் தெருநாய்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டது. அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கிறது. ஆனாலும் நாய்க்கடிக்கு ஆண்டுதோறும் 4 லட்சம் பேருக்கும் மேல் சிகிச்சை பெறுகின்றனர்" என்றார். சென்னை நகரில் கடந்த ஆண்டு 25 ஆயிரம் பேருக்கும் மேல் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். ஆனால், ரேபிஸ் பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை என பொது சுகாதாரத்துறை கூறியுள்ளது. இதற்கு உதாரணமாக சில சம்பவங்கள் முன்வைக்கப்படுகின்றன. சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் கடந்த ஆண்டு மே மாதம் ராட்வெய்லர் நாய்கள் கடித்ததில் சிறுமி ஒருவர் படுகாயம் அடைந்தார். அந்த நாய்களை வளர்த்ததாக புகழேந்தி என்பவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 289, 336 (பிறர் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன் பிறகு நாய்க்கடி சம்பவங்களால் குழந்தைகளும் பெரியவர்களும் பாதிக்கப்படுவது அதிகரித்ததால் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நாய்களைக் கணக்கெடுக்கும் பணி நடந்தது. இந்த ஆய்வின் முடிவில் சென்னையில் 1.8 லட்சத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்தது. இவற்றில் 30 சதவீத நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டு இருப்பதாக மாநகராட்சியின் ஆய்வறிக்கை தெரிவித்தது. இதையடுத்து நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த கருத்தடை செய்யும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஆண்டு மட்டும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்துள்ளதாக, சென்னை மாநகராட்சியின் கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின்படி கருத்தடை, தடுப்பூசி ஆகியவையே அனுமதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. இதைக் குறிப்பிட்டு பிபிசி தமிழிடம் பேசிய பொது சுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநர் குழந்தைசாமி, "தெருநாய்களுக்குத் தடுப்பூசி போடுவது சாத்தியமில்லாத ஒன்று. ஆறு மாதத்துக்கு ஒருமுறை மீண்டும் அவற்றைத் தேடிக் கண்டுபிடித்து தடுப்பூசி போட வேண்டும் என்பதுதான் காரணம்" என்றார் "நாய்களுக்குக் கருத்தடை செய்த பின்னர் அவற்றுக்கென தனியாக காப்பகங்களை ஏற்படுத்துவதுதான் நிரந்தரத் தீர்வாக அமையும்" எனவும் அவர் கூறுகிறார். அதேநேரம், வளர்ப்பு நாய்களால் ரேபிஸ் பாதிப்பு அதிகம் பரவுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். "வளர்ப்பு நாய்கள் கடிக்கும்போது, ரேபிஸ் வராது என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது. வளர்ப்பு நாயாக இருந்தாலும் அது நாய்தான். வளர்ப்பு நாயிடம் கடிபட்டாலும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்" எனக் கூறுகிறார் மருத்துவர் காசி. தடுப்பூசி போடப்பட்ட நாயை ரேபிஸ் வந்த வேறொரு நாய் கடிக்கும்போது அதன் உடலில் வைரஸ் தங்கியிருக்கும் எனவும் அவர் குறிப்பிடுகிறார். அரசின் பொது சுகாதாரத்துறை தரவுகளின்படி, ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றில் பதிவான நாய்க்கடி தரவுகள் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் பத்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை நாய்கள் கடிப்பது அதிகரித்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன. அதுவே 81 வயதுக்கு மேற்பட்டோரை நாய்கள் தாக்குவது குறைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 2000க்கும் குறைவாகவே சிகிச்சை விவரங்கள் பதிவாகியுள்ளன. "நாய்க்கடிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் மருந்து பற்றாக்குறை ஏற்படுகிறது. மருந்து கையிருப்பில் இருப்பதை அரசு உறுதி செய்துள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது" என்கிறார் மருத்துவர் காசி. "மருந்து இருப்பில் இல்லாவிட்டால் வேறு இடத்துக்கு நோயாளியை அனுப்புகின்றனர். அதை ஏற்று வேறோர் இடத்துக்குச் சென்று ஊசி போடாமல் தவிர்ப்பவர்கள் கணிசமாக உள்ளனர். இதற்கு அவர்களின் பணிச்சூழல் உள்படப் பல்வேறு காரணங்கள் உள்ளன" எனவும் அவர் கூறுகிறார். நாய்க்கடிக்கு தடுப்பூசி போடுவதை மூன்று வகையாகப் பிரித்துள்ளதாகக் கூறுகிறார் பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநர் குழந்தைசாமி. அதன்படி, லேசான கீறல் அல்லது நாயின் எச்சில் அல்லது பல் படுதல் ஆகியவை முதல் பிரிவு, காயம் ஏற்படுவது இரண்டாவது பிரிவு, கொடுங்காயம் ஏற்படுவது மூன்றாவது பிரிவு என சுகாதாரத்துறை பிரித்து வைத்துள்ளது. இவற்றில் எது நடந்தாலும் ஊசி போட வேண்டும் என்று பொதுசுகாதாரத் துறை அறிவுறுத்தி இருப்பதாகக் கூறுகிறார் குழந்தைசாமி. "நாய், எலி, பூனை, குரங்கு உள்பட எந்த விலங்கு கடித்தாலும் கடிபட்ட இடத்தில் ஓடும் நீரில் சோப் போட்டுக் கழுவ வேண்டும். தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும்" எனக் கூறுகிறார் குழந்தைசாமி. நாய்க்கடிக்கு ரேபிஸ் தடுப்பூசி (ARV) மற்றும் இம்யுனோகுளோபுலின் (Immunoglobulin) ஆகிய மருந்துகள் மிகப் பாதுகாப்பானவை எனக் கூறும் அவர், "கை, கால் ஆகியவற்றில் கொடுங்காயம் ஏற்பட்டால் மட்டுமே இம்யுனோகுளோபுலின் ஊசி போடப்படுகிறது" என்றார். இம்யுனோகுளோபலின் என்ற மருந்து சந்தையில் சுமார் நாற்பதாயிரம் ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. "விலை அதிகமாக இருந்தாலும் 30 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனைகளில் விலையில்லாமல் இந்த மருந்து செலுத்தப்படுகிறது" என்கிறார் குழந்தைசாமி. தொடர்ந்து பேசிய அவர், "ஊசியைப் போட்டுக் கொண்டால் ரேபிஸ் பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். ரேபிஸ் வந்துவிட்டால் உயிர் இழப்பைத் தவிர வேறு வழியில்லை" எனவும் அவர் கூறுகிறார். நாய் கடித்த நாளை பூஜ்ஜிய நாளாகக் குறிப்பிட்டு அரசு மருத்துவமனைகளில் முதல் ஊசி செலுத்தப்படுவதாகக் கூறும் குழந்தைசாமி, "மூன்றாவது நாள், ஏழாவது நாள், 28வது நாள் எனக் கணக்கிட்டு ஊசி செலுத்தப்படுகிறது. தாமதமாகச் சென்று ஊசி போடுவதால் பலன் இல்லை" என்றும் அவர் தெரிவித்தார். "நாய் கடித்த பிறகு பத்து நாளில் இருந்து மூன்று மாதங்கள் கழித்துக்கூட ரேபிஸ் பாதிப்பு வரலாம்" எனக் கூறும் குழந்தைசாமி, நாய் கடித்த பிறகு மருத்துவமனைக்குச் செல்வதில் ஏற்படும் தாமதம், வளர்ப்பு நாய் குறித்த அலட்சியம் ஆகியவை ரேபிஸ் பாதிப்பு ஏற்படக் காரணமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். ரேபிஸ் நோய் இறப்பு அதிகரித்துள்ளது குறித்து தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் பிபிசி தமிழ் பேசியது. "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் நாய்க்கடிக்கு மருந்துகள் இல்லை. அரசு மருத்துவமனைகளில் மட்டுமே மருந்து கிடைத்து வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து 8,713 துணை சுகாதார நிலையங்களிலும் 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்க்கடி மற்றும் பாம்புக் கடி மருந்துகளை இருப்பில் வைத்தோம். அதனால் மருந்து பற்றாக்குறை இல்லை" எனக் கூறினார். நாய்க்கடி எண்ணிக்கை அதிகரிப்பது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர், "அனைத்து இடங்களிலும் மருந்து முறையாகக் கிடைக்கிறது. சிகிச்சைக்கு வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அது வெளியில் தெரிகிறது" என்கிறார். ஆனால், "முன்பெல்லாம் கிராமங்களில் நாய், பாம்பு கடித்து யாராவது இறந்தால் அது வெளியில் வராது" எனவும் அவர் குறிப்பிட்டார். நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், "விலங்குகள் வதை தடைச் சட்டத்தின்படி எந்த விலங்குகளையும் கொல்லக் கூடாது. அதனால் கருத்தடை மட்டும் மேற்கொள்ளப்படுகிறது" எனக் கூறினார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post