1 மில்லியன் டாலர் பரிசு.. சிந்துவெளி எழுத்து புதிரை விடுவித்தால்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

post-img
சென்னை: சிந்துவெளி பண்பாட்டின் எழுத்துமுறையை புரிந்துகொள்ள வழிவகை செய்தால், ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 8.5 கோடி) பரிசு வழங்கப்படும் என சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழா கருத்தரங்கின் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுப்பிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு இன்று மூன்று நாட்கள் சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் நடைபெறுகிறது. இந்தக் கருத்தரங்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மேலும், சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பினை உலகுக்கு அறிவித்த மேனாள் இந்தியத் தொல்லியல் துறையின் தலைமை இயக்குநர் சர் ஜான் ஹீபர்ட் மார்ஷல் திருவுருவச்சிலைக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின், "சிந்துவெளி வரிவடிவங்களும் தமிழ்நாட்டுக் குறியீடுகளும்: ஒரு வடிவியல் ஆய்வு" என்ற நூலினை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், "ஆரியமும் சமஸ்கிருதமும் தான் இந்தியாவின் மூலம் என்று கற்பனை வரலாறு கூறினர். சிந்துவெளியில் இருந்த காளைகள் திராவிடத்தின் சின்னம். சிந்துவெளி குறியீடுகளும் தமிழக அகழாய்வு குறியீடுகளும் அறுபது சதவீதம் ஒத்துப் போகின்றன. கீழடியை போன்ற பொருநை அருங்காட்சியகம் தொடர்பாக எட்டு இடங்களில் ஆய்வு நடைபெற்று வருகிறது. நமக்கான அடையாளத்தை நிலை நிறுத்த வேண்டும்." என்றார். மேலும், 3 முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டா முதல்வர் ஸ்டாலின். "ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சிந்துவெளி புதிருக்கான உரிய விடையைக் கண்டுபிடித்து சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக புரிந்து கொள்ள உதவும் வழிவகையை வெளிக்கொண்டுவரும் நபர்கள் மற்றும் அமைப்புக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்ற முதல் முத்தான அறிவிப்பை வெளியிடுகிறேன். சிந்துவெளி பண்பாடு குறித்த ஆராய்ச்சிகளை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினர் இணைந்து ரோஜா முத்தையா நூலகத்தின் சிந்துவெளி ஆராய்ச்சி நிலையம் மேற்கொள்ளும் வகையில் தலைசிறந்த தொல்லியல் அறிஞர்களுக்கு ஐராவதம் மகாதேவன் பெயரில் ஒரு ஆய்வறிக்கை அமைக்க 2 கோடி ரூபாய் வழங்கப்படும் என்பது இரண்டாவது அறிவிப்பு. தமிழ் பண்பாட்டின் தொன்மையை உலகே தெரிந்து கொள்ள வேண்டும் என ஓயாமல் உழைக்கும் தலைசிறந்த தொல்லியல் அறிஞர்கள் மட்டுமின்றி கல்வெட்டு ஆய்வாளர்கள் ஊக்கப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் இரண்டு அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் இது மூன்றாவது அறிவிப்பு. இந்த மூன்று அறிவிப்புகளும் இந்த துறையின் ஆய்வுகளுக்கு வேகத்தை ஊக்கத்தையும் கொடுக்கும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post