கொடைக்கானல் குதிரை தாலி கிழங்கைப் பற்றி தெரியுமா? பரவும் மர்ம வீடியோவை நம்பலாமா? குவியும் சேட்டன்ஸ்

post-img
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோக்களை கண்டு மலை கிராமங்களுக்கு இளைஞர்கள் படையெடுத்து வருகின்றனர். குதிரை தாலி கிழங்கை முகர்ந்தால் சிறிது நேரம் மயக்கம் வருவது போல் இருக்கும் நிலையில், அது போதைப் பொருளா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மேல்மலை அருகே கவுஞ்சி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜு. சிறிது காலம் கவுஞ்சியிலேயே இருந்த நிலையில், பிறகு கேரள மாநிலம் எர்ணாகுளம் சென்று அங்குள்ள சித்த வைத்தியசாலை ஒன்றில் உதவியாளராக வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கு 16 வருடங்களாக பணிபுரிந்ததாகவும் , அதில் 10 வருடங்கள் சித்த வைத்தியம் குறித்த கற்றுக்கொண்டு அதன்பிறகு ஆறு வருடங்களாக பொதுமக்களுக்கு தானே சிகிச்சை அளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதனையடுத்து மருத்துவ குறிப்புகளை கற்றுக்கொண்டு கொடைக்கானலில் உள்ள தனது சொந்த ஊரான கவுஞ்சி கிராமத்திற்கு வந்துள்ளார். இங்கு தான் ஒரு சித்த வைத்தியர் என்றும், தன்னிடம் அனைத்து நோய்க்கும் மருந்து இருப்பதாக கூறிய நிலையில் பொதுமக்கள் இவரை யாரும் இவரை கண்டு கொள்ளவில்லை. மேலும் இவரது நடவடிக்கைகள் சற்று வித்தியாசமாக இருந்ததன் காரணமாக பொதுமக்கள் யாரும் இவரை கண்டு கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்து இவர் சமூக வலைதளங்கள் மூலம் சித்த வைத்தியம் செய்வதாக வீடியோக்கள் பல வெளியிட்டு இருந்தார். அதில் குறிப்பாக குதிரை தாலி என்ற ஒரு மூலிகை கிழங்கை கடந்த 14 வருடங்களுக்கு முன்பாக பெங்களூரில் இருந்து வாங்கி வந்து அதனை கவுஞ்சி கிராமத்தில் ஒரு இடத்தில் நட்டு வைத்து, அதன் மூலம் வளர்ந்த செடிகளை வைத்து தற்பொழுது சிகிச்சை அளித்து வருவதாக கூறுகிறார். குறிப்பாக இந்த குதிரை தாலி கிழங்குகளை சிறிதளவு எடுத்துக் கொண்டு அதனை ஒரு துணியில் சுற்றி அதை கற்களால் நசுக்கி அதன் கார தன்மையை மூக்கில் முகர்ந்து பார்க்க சொல்லுகிறார். அதன் பின்னர் இதனை சுவாசித்தவர்கள் சில நொடிகள் தன்னை மறந்து , ஒரு வித ரியாக்சன் செய்வதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்தான வீடியோவை இங்கு வந்து செல்லக்கூடியவர்கள் அவர்களது சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இதனை காணும் மற்ற சுற்றுலாப் பயணிகள் தினந்தோறும் குறிப்பாக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இவரை தேடி இந்த கிராமத்திற்கு வருகின்றனர். குறிப்பாக கேரளத்தில் இருந்து அதிக அளவில் இளைஞர்கள் மற்றும் வெளிநாட்டவரும் இவரை தேடி வருகின்றனர். மேலும் இவர் கொடுக்கக் கூடிய இந்த சிகிச்சை ஆனது எந்த வகையில் இருக்கக்கூடியது என்று அந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கே தெரியவில்லை. இது குறித்து இந்த பகுதி மக்களிடம் விசாரித்த பொழுது அவர் ஒரு போதை ஆசாமி என்றும், அவர் பேச்சும் செயலும் ஒரு மாதிரி தான் இருக்கும், ஆனால் அவரிடம் நாங்கள் ஏதும் கேட்டுக் கொள்வதில்லை. ஆனால் இவர் தினம் தோறும் பல்வேறு பகுதியிலிருந்து வரக்கூடிய சுற்றுலாப் பணிகள், பிரதான சாலை ஓரத்தில் இருக்கக்கூடிய சுற்றுச்சுவரில் அமர்ந்து அவரிடம் ஏதாவது பேசிக் கொண்டிருப்பார் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இருந்த போதும் இது குறித்து ராஜுவிடம் கேட்ட பொழுது தான் கேரளாவில் இருந்து இந்த வைத்தியத்தை கற்றுக் கொண்டதாகவும் தற்போது இருக்கக்கூடிய இளைஞர்கள் மது, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதை வஸ்துகளை அதிகம் பயன்படுத்தி தனது உடல்நிலை கெடுத்து வைத்துள்ளனர். இதனை சரி செய்வதற்காக இவ்வாறு குதிரை தாலி மூலம் சிகிச்சை அளிப்பதாகவும், இதனால் அவர்களுக்கு முழு பலன் கிடைக்கும், அனைத்தையும் மறந்து சில நொடிகள் தலையில் இருக்கக்கூடிய பாரங்கள் குறையும் அளவிற்கு இந்த மருந்து இருக்கும் என கூறுகிறார். மேலும் காட்டுப்பகுதியில் கிடைக்க கூடிய மூலிகை பொருட்களை கொண்டு மூலிகை காபி தயாரிப்பதாகவும், இதன் ஒரு கப்பின் விலை 400 ரூபாய்க்கு கொடுப்பதாகவும் அதனை உட்கொண்ட சிறிது நேரத்தில் அவர்கள் கால் பாதத்தின் வழியாக ஒரு டம்ளர் அளவிற்கு கெட்ட நீர் வெளியேற்றும் செய்யப்படுவதாக கூறுகிறார். இவர் செய்யக்கூடிய இந்த சிகிச்சைக்கு பல்வேறு பகுதியில் இருந்தும் தொடர்ந்து தொலைபேசியில் அழைத்து அவரிடம் முன்பதிவு செய்து வருவதாகவும் தெரிவித்தார். கடந்த புத்தாண்டு அன்று கூட 500 ரூபாய் வீதம் 2000கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்ததாகவும், ஆனால் இவர் நீங்கள் நேரில் வந்தால் மட்டும் போதும் என்றும் கூறுகிறார். மேலும் இந்த குதிரை தாலி சிகிச்சைக்கு குறிப்பிட்ட தொகை எதுவும் கேட்பதில்லை என்றும் அவரவர்கள் விரும்பக்கூடிய தொகையை கொடுப்பதால் அதனால் வாங்கிக் கொள்கிறேன் என்றும் கூறுகிறார். இவர் அளிக்கக்கூடிய இந்த சிகிச்சைக்கு கேரள மாநில முதல்வரே அழைப்பதாகவும், கேரளாவில் உள்ள அதிகாரிகள் அளிப்பதாகவும் இங்கிருந்து மதுரை மார்க்கமாக வாகனத்தில் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளாவுக்கு அழைத்துச் செல்கிறோம் வாருங்கள் என்று இவரை தொடர்ந்து பல்வேறு பகுதியிலிருந்து அழைப்பு விடுத்து வருவதாகவும் தெரிவிக்கிறார். என்னை பற்றிய முழு தகவல்களையும் ஆன்லைன் மற்றும் இன்ஸ்டாகிராமில் 'kuthirai thaali' 'Kodai horse'போன்ற பக்கத்தில் சென்று பாருங்கள் இதுவரை 83 லட்சம் பேருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளேன், தனக்கு தமிழகம் மட்டுமல்லாது கேரளா,ஆந்திர , கர்நாடக போன்ற வெளி மாநிலங்களில் fans பலரும் உள்ளனர் என்றார். எனது சிகிச்சை உண்மையாக இருப்பதால் மட்டுமே இதனை பேர் என்னை தேடி வருகின்றனர் என்கிறார். இவர் நம்மிடம் பேசி கொண்டிருந்த சில நிமிடங்களில் பரபரப்பாக காணப்பட்ட நிலையில் இவருக்கு அடிக்கடி தொலைபேசியில் இவர் அளிக்கும் சிகிச்சை குறித்து இவரிடம் இளைஞர்கள் சிலர் விபரம் கேட்டு போன் செய்து கொண்டே இருக்கின்றனர். தற்போது உலக அளவில் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் பல்வேறு மருத்துவத் துறையில் முன்னேறி கொண்டிருக்கும் நேரத்தில் இவர் கொடுக்கக்கூடிய இந்த குதிரை தாலி மருந்து குறித்து சில சந்தேகங்கள் எழ தான் செய்கிறது. குறிப்பாக கேரள இளைஞர்கள் கொடைக்கானல் அதிகம் தேடி வருவது கஞ்சா, போதை காளான், மது உள்ளிட்ட போதை வஸ்துகளுக்காகத்தான்.. மேலும் இதையெல்லாம் தாண்டி இந்த குதிரை தாலி புது விதமாக போதையாக இருக்கக்கூடும் என்பதால் கூட பலரும் இந்த நபரை தேடி வருகின்றனர். குறிப்பாக சமூக வலைதளங்களில் வெளியாக கூடிய இது போல வீடியோக்களை என்னவென்று தெரியாமல் இளைஞர்கள் இதனை தேடி அலையும் நிலைக்கு தள்ளப்படுகிறது. ஆனால் தற்சமயம் இவர் கொடுக்கக்கூடிய இந்த குதிரை தாலிக்காக ஏராளமானவர்கள் இங்கு வந்து செல்வது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கூறுகின்றனர் மருத்துவர்கள்.. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post