பட்டா.. பஞ்சமி நிலம், கட்டட வரன்முறை! திருவண்ணாமலையில் இவ்ளோ சிக்கலா? தமிழக அரசுக்கு பெயிரா கோரிக்கை

post-img
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் நிரந்தரமாக பஞ்சமி நிலங்களின் பட்டியலை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிட்டு, அதன் அடிப்படையில் பதிவு செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பஞ்சமி நிலங்கள் சம்பந்தமான தடையின்மை சான்று கேட்டு விண்ணப்பித்தால், 30 நாட்களுக்குள் தீர்வு கிடைக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு பெயிரா கோரிக்கை விடுத்துள்ளது. அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா திருவண்ணாமலையில் நடைபெற்றது. கூட்டமைப்பின் தேசிய தலைவர் டாக்டர் ஹென்றி இம்மாநாட்டில் சிறப்புரையாற்றிய நிலையில், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி, சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்பி, சட்டமன்ற உறுப்பினர் கிரி, உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றிருந்தனர். இம்மாநாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கென சில பிரத்யேக கோரிக்கைகள் தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டன. அதில் ஒருசில கோரிக்கைகள் இவைகள்தான்: - திருவண்ணாமலையில் மேலும் 100 சதுர கிலோமீட்டர் பரப்பளவு சுற்றளவுக்கு வீட்டுவசதித்துறை ஒருங்கிணைந்த முழுமை திட்டத்தின் எல்லையை (MASTER PLAN) விரிவுபடுத்தி ஆகச்சிறந்த அடிப்படை கட்டமைப்புகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - 13.64 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட திருவண்ணாமலை மாநகராட்சியில் பொதுமக்கள் பெருமளவில் வசிக்கும் மிக அடர்த்தியான பகுதியை கண்டறிந்து அதனை TNCDBR-2019, விதி எண் 30 ( 1 ) இன் கீழ் (CBA) தொடர் கட்டிட பகுதியாக அறிவித்து, உடனடியாக நடைமுறைப்படுத்திட தாங்கள் வழிவகை செய்ய வேண்டும் - திருவண்ணாமலையில் நிலம் விலை அதிகம் என்பதால், அனுமதியற்ற கட்டடங்கள் இங்கு அதிகம் உருவாகி வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து, திருவண்ணாமலை மாநகரத்தில் உள்ள மலைகள் மற்றும் கோயில்களின் எல்லையில் இருந்து 100 மீட்டர் சுற்றளவிற்கு இந்த விதிகளை அமல்படுத்தி, மற்ற பகுதிகளுக்கு இந்த விதிகளை தளர்த்தி கீழ் தளம், தரைதளம் மற்றும் மூன்று தளங்களுக்கு 12 மீட்டர் உயரம் வரை அனுமதி கிடைக்கும் வகையிலும், இந்த மாநகரத்தில் ஏற்கனவே அனுமதியற்ற வகையில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை "கட்டட வரன்முறை சட்டத்தின் கீழ்" அனுமதி பெறும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் - திருவண்ணாமலை இணை சார்பதிவாளர் 2 அலுவலகத்தில் வருடம் ஒன்றுக்கு 20,000 முதல் 30,000 வரை ஆவணங்கள் பதிவு செய்யப்படுவதினால் மேற்படி சார்பதிவாளர் அலுவலகத்தினை இரண்டாக பிரித்து திருவண்ணாமலை இணை சார்பதிவாளர் அலுவலகம் 3 என ஒரு புதிய அலுவலத்தினை வேங்கிக்கால் கிராமத்தில் ஏற்படுத்திட தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருவண்ணாமலை இணை சார்பதிவாளர் 2 அலுவலகத்தில் நிரந்தரமாக சார்பதிவாளர் அலுவலர்கள் இல்லாமல், ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு புதிய சார்பதிவாளர் அலுவலர் பொறுப்பு நிலையில் பணிபுரிந்து வருவதால், வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களும், கைக்குழந்தையுடன் உள்ள பெண்களும் மற்றும் ஊனமுற்றவர்களும் பதிவுக்கு வரும் போது ஒரு நாள் முழுவதும் காத்திருக்கும் நிலை உள்ளதால், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருவண்ணாமலை மாவட்டத்தில் (DC) பஞ்சமி நிலங்கள் அதிகம் உள்ளது. நிரந்தரமாக பஞ்சமி நிலங்களின் பட்டியலை அனைத்து பொதுமக்களும் அறியும் வண்ணம் வெளிப்படைத்தன்மையுடன் வெளியிட்டு அதன் அடிப்படையில் பதிவு செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒருவேளை பஞ்சமி நிலங்களை பட்டியல் சாதியினர் அல்லாமல் வேறு சாதியினர் பெயரில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் வாங்கப்பட்டிருந்தால், அது குறித்து தடையின்மை சான்று பெறுவதற்கோ அல்லது மீண்டும் பட்டியல் சாதியினர் பெயரில் பதிவு செய்வதற்கோ தாங்கள் வழிவகை செய்ய வேண்டும் - திருவண்ணாமலை மாவட்ட வருவாய்த் துறையில் கோட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் போன்றவர்களிடத்தில் மேற்கண்ட பஞ்சமி நிலங்கள் சம்பந்தமான தடையின்மை சான்று கேட்டு விண்ணப்பித்தாலோ, வேறு வருவாய்த்துறை சம்பந்தமான சேவைகளை பெறுவதற்கு விண்ணப்பித்தாலோ ஆண்டு கணக்கில் முடிவு எடுக்காமல் கிடப்பில் போடாமல், பொதுமக்கள் விண்ணப்பிக்கின்ற அனைத்து விண்ணப்பங்களின் மீதும் அதிகபட்சம் 30 நாட்களுக்குள் தீர்வு கிடைக்கும் வகையில் வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - பொதுமக்களுக்கு நிபந்தனையுடன் இலவச பட்டாக்கள் வழங்கப்படுகிறது. இதன் நிபந்தனை காலம் 30 ஆண்டுகள் என்பதால், நிபந்தனையுடன் இலவச இடங்களை ஒதுக்கீடு பெற்ற பொதுமக்கள் அவர்களின் அவசர தேவைக்கு அதனை விற்பனை செய்ய இயலவில்லை. ஆகவே இந்த 30 ஆண்டுகள் என்கிற நிபந்தனை காலத்தை தளர்த்தி, பன்னிரண்டு ஆண்டு காலம் நிபந்தனை காலம் என மாற்றம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அரசுக்கு விடுக்கப்பட்டுள்ளன. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post