சட்டசபைக்கு “மாஸ்க்” அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள்! அதில் இருக்கும் வாசகத்தைப் பாருங்க!

post-img
சென்னை: "டங்ஸ்டன் தடுப்போம்.. மேலூரைக் காப்போம்" என்ற வாசகம் பொறித்த முகக்கவசங்களை அணிந்து இன்று சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர் அதிமுக எம்.எல்.ஏக்கள். தமிழக சட்டப்பேரவையின் 3வது நாள் கூட்டத்தொடருக்கு இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து கறுப்புச் சட்டையுடன் வந்துள்ளனர். டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை அடக்குமுறைகளால் ஒடுக்க முயல்வதாக தமிழக அரசைக் கண்டிக்கும் வகையில் "டங்ஸ்டன் தடுப்போம் மேலூர் காப்போம்" என்ற வாசகம் பொறித்த மாஸ்க் அணிந்து சட்டப்பேரவையில் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும், கடந்த 2 நாட்களாக, "யார் அந்த சார்?" என்ற வாசகத்துடன் கூடிய பேட்ச்களை அணிந்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர். இன்றும் அதேபோல, பேட்ச் அணிந்து வந்துள்ளனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்த நிலையில், அது தொடர்பாக குரல் எழுப்பி அப்படியான பேட்ச் அணிந்து வருகை தந்துள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி சுற்று வட்டார பகுதியில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏல அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து அங்கு பெரியளவில் போராட்டம் வெடித்தது. மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும், மதுரை மேலூர் பகுதியை தமிழ் பண்பாட்டு மண்டலமாக, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் விவசாய சங்க பிரதிநிதிகளும் வலியுறுத்தி நேற்று பேரணி நடத்தினர். மதுரையில் நடந்த டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்ட 5 ஆயிரம் விவசாயிகள் மற்றும் பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதி கட்டுப்பாடுகளை மீறி நடைபயண பேரணி மேற்கொண்டதாக, மதுரை தல்லாகுளம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாஸ்க் அணிந்து வந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி, உடல் நலக் குறைவு காரணமாக இன்று சட்டசபைக்கு வராத நிலையில், மற்ற எம்.எல்.ஏக்கள், கறுப்புச் சட்டையுடன் மாஸ்க் அணிந்து வந்துள்ளனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post