தமிழ், தமிழ்நாடு மீது வெறுப்பா? தமிழ்நாட்டை விட்டே ஆளுநர் ரவி வெளியேற வேண்டியது தானே? வன்னி அரசு

post-img
சென்னை: தாய்த் தமிழ் மீதும் தமிழ்நாடு மீதும் அவ்வளவு வெறுப்பாக இருந்தால் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை விட்டே வெளியேறிவிட வேண்டியதுதானே? என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து இந்த கேள்வியை வன்னி அரசு எழுப்பி உள்ளார். தமிழ்நாடு சட்டசபையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. இன்றைய கூட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். ஆளுநர் ரவிக்கு மரபுப்படி காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டசபை கூட்டம், மரபுப் படி தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவியோ திடீரென ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும் மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் அவர்களிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் அவர்கள் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தமது எக்ஸ் பக்கத்தில்,தேசிய கீதம் பாடப்படும் வரை பொறுமை காக்காமல், தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநர் புறக்கணித்து வெளியேறியது ஏன்? தாய்த்தமிழ் மீதும் தமிழ்நாடும் மீதும் அவ்வளவு வெறுப்பு இருந்தால், தமிழ்நாட்டை விட்டே வெளியேற வேண்டியது தானே? என கேள்வி எழுப்பியுள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post