பாஜகவின் சனாதன சதி.. பின்வாசல் வழியாக வரும் ஆர்எஸ்எஸ்! ஸ்டாலினுக்கு திருமா விடுத்த கோரிக்கை!

post-img
சென்னை: இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முழுமையாக ஆளுநருக்கு வழங்கியும்; துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் நியமனத்துக்கான தகுதிகளைத் தளர்த்தியும் உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அதனை எதிர்த்து சனாதன சதியை முறியடிக்க வேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," பல்கலைக்கழக மானிய குழு (UGC) இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் நியமனம், பட்டப் படிப்புகள் உள்ளிட்டவை குறித்து புதிய விதிகளை வெளியிட்டு இருக்கிறது. இந்த விதிகள் மாநில உரிமைகளைப் பறிப்பவையாகவும் மனுவின் கோட்பாட்டை நடைமுறைப் படுத்துபவையாகவும் உள்ளன. இவற்றை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முழுமையாக ஆளுநருக்கு வழங்கியும்; துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் நியமனத்துக்கான தகுதிகளைத் தளர்த்தியும் உள்ளனர். அரசமைப்புச் சட்டத்தின் பொதுப்பட்டியலில் உள்ள கல்வி குறித்து மாநிலங்களைக் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக ஒன்றிய அரசு அறிவித்திருப்பது இந்தியக் கூட்டாட்சி தத்துவத்துக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கும் எதிரானதாகும். மாநிலப் பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றும் தனி சட்டத்தின் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. அந்தச் சட்டங்களுக்குப் புறம்பாகவும் இவ்விதிகள் உள்ளன. துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் முதலானவர்களை நியமனம் செய்வதற்குத் தற்போதுள்ள கல்வித் தகுதிகளைத் தளர்த்தியதன் மூலம், முறையான கல்வித் தகுதி இல்லாதவர்களையும் நியமனம் செய்வதற்கு புதிய விதிகள் வழிவகுக்கின்றன. நிர்வாகத் திறன், தலைமைத்துவம் ஆகியவற்றுக்குப் புதிய விதிகள் முன்னுரிமை அளிக்கின்றன. இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்கப் பரிவார அமைப்புகளைச் சார்ந்தவர்களைக் கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புக்குக் கொண்டு வருவதற்கு ஒன்றிய பாஜக அரசு திட்டமிடுவது தெரிகிறது. ஏற்கனவே "லேட்டரல் என்ட்ரி" என்ற பெயரில் ஒன்றிய அரசில் அதிகாரம் மிக்க செயலாளர் பதவிகளில் ஆர்.எஸ்.எஸ் காரர்களைப் பின்வாசல் வழியாக பாஜக அரசு நியமனம் செய்துள்ளது. இப்போது உயர் கல்வியை முழுமையாக சனாதனமயமாக்குவதற்கு பாஜக அரசு முயற்சிக்கிறது. பாஜக அரசின் தேசிய கல்விக் கொள்கையின் காரணமாக ஆரம்பப் பள்ளியில் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டு ஒரு கோடிக்கு மேல் குறைந்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் உள்ளார்ந்த நோக்கமே பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சமூக மக்களைக் கல்வி கற்க விடாமல் தடுத்து அவர்களைப் படிப்பறிவில்லாதவர்களாக ஆக்குவது தான் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறோம். அதை மெய்ப்பிக்கும் வகையில் மாணவர் சேர்க்கையில் ஏற்பட்டிருக்கிற இந்த மிகப்பெரிய சரிவு அமைந்துள்ளது . தற்போது உயர் கல்வியிலிருந்தும் பெரும்பான்மை மக்களை வெளியேற்றுவதற்கு பாஜக அரசு இந்த விதிகளைக் கொண்டு வருகிறது. பட்டப் படிப்பில் எந்த ஆண்டில் வேண்டுமானாலும் படிப்பை நிறுத்தி வெளியேறலாம் அதற்கேற்ப சான்றிதழ்கள் அளிக்கப்படும் என்ற தேசிய கல்விக் கொள்கையின் ஏற்பாடு பெரும்பான்மை மக்களைப் பட்டப்படிப்பு படிக்க விடாமல் முறை சார்ந்த கல்வியில் இருந்து அவர்களை வெளியே அனுப்புவதற்கான சதித்திட்டம் ஆகும். தேசியக் கல்விக் கொள்கை என்பதே சனாதன செயல்திட்டமாக இருப்பதை கருத்தில் கொண்டுதான் தமிழ்நாடு முதலமைச்சர் அந்தக் கொள்கையை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று அறிவித்திருக்கிறார். ஏற்கனவே பள்ளிக் கல்விக்காக தமிழ்நாடு அரசுக்குக் கொடுக்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு கொடுக்க மறுத்து வருகிறது. இப்போது தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் பட்டப் படிப்புகளை செல்லாமல் ஆக்குவதற்குத் திட்டம் தீட்டுகிறது. ஒன்றிய பாஜக அரசின் இந்த புதிய விதிகளால் தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களில் பயிலும் இலட்சக்கணக்கான மாணவர்களின் பட்டங்கள் மதிப்பை இழக்க நேரிடும். அவர்கள் வேலை வாய்ப்பைப் பெற முடியாத நிலை உருவாகும். இது உயர்கல்வியில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டின் மீது தொடுக்கப்பட்டிருக்கிற சனாதனப் போராகும் . ஒன்றிய பாஜக அரசு வெளியிட்டிருக்கும் வெகுமக்களுக்கு விரோதமான பல்கலைக்கழக மான்யக்குழுவின் புதிய விதிகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்துகிறோம். மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் இதுகுறித்து கலந்தாய்வு செய்து தேசிய அளவில் இதனை எதிர்த்து சனாதன சதியை முறியடிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்" என கூறியுள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post