பிரியங்கா காந்தி எம்பியின் கன்னங்கள் போல சாலைகளை அமைப்பேன்.. டெல்லி பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு!

post-img
டெல்லி: காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கன்னங்களைப் போல டெல்லி சாலைகளை அமைத்து தருவேன் என சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான முன்னாள் எம்பி ரமேஷ் பிதுரி பேசியிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.ரமேஷ் பிதுரியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிட ஆளும் ஆத்மி, காங்கிரஸ், பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளன. டெல்லி முதல்வர் அதிஷியை எதிர்த்து கல்கஜி தொகுதியில் பாஜக வேட்பாளராக முன்னாள் எம்பி ரமேஷ் பிதுரி அறிவிக்கப்பட்டுள்ளார். இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அல்கா லம்பா போட்டியிடுகிறார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார். இன்றும் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த பின்னணியில் கல்கஜி தொகுதியில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் ரமேஷ் பிதுரி. இந்த பிரசாரத்தின் போது, பீகாரில் முன்னர் பிரசாரம் செய்த லாலு பிரசாத் யாதவ், ஹேமமாலினியின் கன்னங்களைப் போல சாலைகளை அமைத்து தருவேன் என வாக்குறுதி அளித்தார். ஆனால் லாலு பிரசாத் யாதவ் தமது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இந்த தேர்தலில் எங்களுக்கு வாக்களித்தால் இந்த கல்கஜி தொகுதியின் ஒவ்வொரு சாலையையும் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தியின் கன்னங்களை போல அமைத்துத் தருவேன் என்றார். ரமேஷ் பிதுரியின் இத்தகைய ஆபாச பேச்சுக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஶ்ரீநதே கூறுகையில், பாஜக கட்சியே பெண்களுக்கு எதிரான கட்சிதான். பிரியங்கா காந்தி குறித்த ரமேஷ் பிதுரியின் கருத்துகள் அவரது மனநிலை எப்படிப்பட்டது என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை இப்படி கீழ்த்தரமாக விமர்சிக்கும் நபரிடம் இருந்து நாம் என்ன எதிர்பார்க்க முடியும்? அவருக்கான தண்டனைதான் என்ன? பிரியங்கா காந்தியிடம் பாஜக தலைமை கைகட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். மூத்த காங்கிரஸ் தலைவர் பவன் கேரா கூறுகையில், பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-ன் வளர்ப்பைத்தான் ரமேஷ் பிதுரியின் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் மேலிருந்து கீழ் வரை அனைவருமே இப்படித்தான் இருக்கின்றனர் என்றார். ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் கூறுகையில், வெட்கக் கேடான மலிவான தேர்தல் பிரசாரம். இதுதான் பெண்களுக்கு பாஜக தரக் கூடிய மரியாதையா? நாடாளுமன்ற எம்பியை இழிவாக பேசுகிறார்.. வெளிப்படையாக மக்களுக்கு பணம் தருகிறார்..இதுதான் பாஜகவின் வியூகமா? இப்படியான நபர்களிடம்தான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமா? என்பதை டெல்லி பெண் வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும் என்றார். ஆனால் ரமேஷ் பிதுரியோ, லாலு பிரசாத் யாதவ் எப்படி பேசினாரோ அப்படித்தானே நான் பேசினேன்.. இப்போது பிரியங்கா காந்தியிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறவர்கள் ஏன் அப்போது லாலுவை ஹேமமாலினியிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லவில்லை? ஹேமமாலினி ஒரு பெண் இல்லையா? ஹேமமாலினி சாதனையாளர் இல்லையா? என பதில் கேள்வி எழுப்பி இருக்கிறார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post