HMPV வைரஸ் பரவல்.. “மக்களே பயப்படாதீங்க”.. மத்திய சுகாதாரத்துறை கொடுத்த ஆறுதல் செய்தி!

post-img
டெல்லி: சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ், உலக நாடுகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் தற்போது வரை அச்சப்படும் அளவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று உலகமெங்கும் மிக வேகமாகப் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. கொரோனா எனும் கோவிட் 19 தொற்றால் உலகமெங்கும் லட்சக்கணக்கானோர் பலியாகினர். இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த உலகில் உள்ள மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உட்பட அனைவரும் பல்வேறு ஆய்வுகளை செய்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், முகக் கவசம், தடுப்பூசி போன்ற தீவிர முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது. இந்த நிலையில், கொரோனா போன்று வேகமாக பரவும் புதிய வைரஸ் ஒன்று சீனாவில் பரவி வருவது உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எச்எம்பிவி (HMPV) எனப்படும் ஹியூமன் மெடாநிமோ வைரஸ் பாதிப்பால் சீனாவில் உள்ள பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டுள்ளனர். எச்எம்பிவி, கொரோனா, ஃபுளு காய்ச்சல் ஆகிய நோய்கள் ஒரே நேரத்தில் தாக்குவதால் சீனாவே திணறி வருகிறது. பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களை தாக்கும் எச்எம்பிவி வைரஸ் நோய்த் தாக்குதலால் சீனாவில் மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன. மைக்கோ பிளாஸ்மா நிமோனியா என்ற நோயும் சீனாவில் மக்களை அதிகம் தாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, சீனாவில் பரவும் எச்எம்பிவி வைரஸ் பற்றி இந்தியர்கள் அச்சப்பட வேண்டாம் என்றும், இந்தியாவில் இதுவரை எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு பதிவாகவில்லை என்றும் பொது சுகாதார இயக்குநரகம் தெரிவித்துள்ளது. சீனாவில் 'ஹெச்எம்பிவி' வைரஸ் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவில் பருவகால ஃபுளூ காய்ச்சல் பாதிப்பு தொடா்ந்து உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக பொது சுகாதாரப் பணிகள் தலைமை இயக்குநர் அதுல் கோயல் கூறுகையில், "ஹியூமன் மெட்டாநிமோ வைரஸ் (ஹெச்எம்பிவி) என்பது சாதாரண சளியை ஏற்படுத்தும் பிற வைரஸ் கிருமி போன்றதே. இது, இளம் வயதினர் மற்றும் முதியோருக்கு காய்ச்சல், தொண்டை வலி, உடல்வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக் கூடும்.. சீனாவில் ஹெச்எம்பிவி தொற்று வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, இந்தியாவில் சுவாசத் தொற்றுகள் மற்றும் பருவகால ஃபுளூ காய்ச்சல் பாதிப்புகளை தொடா்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். டிசம்பர் மாத தரவுகளின்படி, இந்த பாதிப்பு எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பு இல்லை. தற்போதைய சூழலில் யாரும் அச்சப்பட தேவையில்லை. பொதுவாக குளிா்காலங்களில் சுவாசத் தொற்று அதிகரிக்கும் என்பதால், மத்திய அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் மற்றும் படுக்கை வசதிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. சுவாசத் தொற்றுகளை தடுக்கும் வகையில் பொதுவான முன்னெச்சரிக்கை வழிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். சளி, இருமல் பாதிப்பு இருந்தால் பிறரிடம் இருந்து விலகி இருப்பது அவசியம். பாதிப்பு ஏற்பட்டால், மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post