தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் பெரும் சரிவு.. 'மதுவும், கடனும்'.. ஸ்ரீதர் வேம்பு பரபரப்பு கருத்து

post-img
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் குழந்தை பிறப்பு விகிதம் 11 சதவீதம் அளவிற்கு சரிந்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக கடந்த 2024ம் ஆண்டில் வெறும் 8.50 லட்சம் குழந்தைகள் தான் பிறந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக முன்னணி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்த சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, குழந்தை பிறப்பு விகிதம் தமிழகத்தில் குறைய மதுப்பழக்கமும், கடனும் தான் காரணம் என்று கூறியுள்ளார். இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சி என்பது 0.92 சதவீதமாக உள்ளது. ஆனால் தேசிய சராசரியை விட அதிகமாக பீகாரில் 1.98 சதவீதமும், உத்தரபிரதேசத்தில் 1.70-ம், மேகாலயாவில் 1.5-ம், மத்திய பிரதேசத்தில் 1.49 சதவீதமும் மக்கள் தொகை வளர்ச்சி உள்ளது. இதேபோல் மகாராஷ்டிராவில் 0.71 சதவீதமும், மேற்கு வங்காளத்தில் 0.78 சதவீதமும் மக்கள் தொகை வளர்ச்சி இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில் இப்படி என்றால், தென் மாநிலங்களில் மக்கள் தொகை வளர்ச்சி கடும் சரிவினை சந்தித்துள்ளது. தேசிய சராசரியை விட மிக குறைவாக உள்ளது. தென்மாநிலங்களான கேரளாவில் 0.22-ம், ஆந்திராவில் 0.61 சதவீதமும், கர்நாடகாவில் 0.68 சதவீதமும், தெலுங்கானாவில் 0.74 சதவீதமாகவும் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெறும் 0.30 சதவீதம் மட்டுமே மக்கள் தொகை வளர்ச்சி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கேரளாவிற்கு அடுத்தபடியாக மக்கள் தொகை வளர்ச்சி குறைவாக உள்ள தென்னிந்திய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டில் 7 கோடியே 21 லட்சம் பேர் இருந்த போது எடுக்கப்பட்ட இந்த கணிப்பின்படி, தேசிய அளவில் மக்கள் தொகையில் தமிழகம் 7-வது இடத்தில் இருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் பிறப்பு விகிதம் மிக வேகமாக சரிவடைந்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டில் தமிழகத்தில் 9 லட்சத்து 45 ஆயிரத்து 701 குழந்தைகள் பிறந்துள்ளனர். 2020-ம் ஆண்டு 939783 குழந்தைகள், 2021-ம் ஆண்டில் 912864 குழந்தைகள், 2022-ம் ஆண்டில் 936367 குழந்தைகள் , 2023-ம் ஆண்டு 9 லட்சத்து 2 ஆயிரத்து 306 குழந்தைகள் பிறந்துள்ளனர். ஆனால் 2024-ம் ஆண்டில் 8 லட்சத்து 41 ஆயிரத்து 821 குழந்தைகள் மட்டுமே பிறந்து உள்ளனர். இது, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மிக குறைந்த அளவு ஆகும். பிறப்பு விகிதம் வெறும் ஆறு ஆண்டுகளில் 11 சதவீதம் சரிந்துள்ளது.தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் வேகமாக சரிந்து வருவது குறித்து கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசுகள் உள்ளன. ஏனெனில் ஒரு காலக்கட்டத்தில் முதியவர்கள் அதிகம் உள்ள மாநிலமாக உருவெடுக்கும். அதேபோல் பிறப்பு விகிதம் சரியாக இல்லை என்றால், பாலின விகிதாசாரத்தில் பெரிய ஏற்றத்தாழ்வு வரும். உற்பத்தி குறையும். பல்வேறு தொழிற்சாலை வேலைகளுக்கு வெளிமாநில மக்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலை வரும். தமிழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். . நிதி ஒதுக்கீடும் குறைந்துவிடும். திருமணத்திற்கு பெண் அல்லது ஆண் கிடைப்பது உள்பட ஏராளமான சமூக சிக்கல்கள் வரும். இந்நிலையில் தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் சரிவு குறித்து கருத்து தெரிவித்த சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, "தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் எவ்வளவு வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது என்பது பற்றி முன்னணி தமிழ் நாளிதழ் ஒன்று தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் பிறப்பு எண்ணிக்கையில் ஒட்டுமொத்தமாக 11 சதவீதம் சரிந்துள்ளது. மேலும் பிறப்பு விகிதம் வேகமாக சரிந்து வருகிறது. தமிழகத்தில் இப்போது பல மாவட்டங்களில் இறப்புகள் பிறப்புகளை விட அதிகமாக உள்ளது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் இப்போது மாற்று நிலைக்கு மிகவும் கீழே உள்ளது. பிறப்பு விகிதத்தில் கிழக்கு ஆசிய அளவில் பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. பிறப்பு விகிதம் தமிழகத்தில் சரிவதற்கு காரணங்கள் என்ன? மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு மிக வேகமாக நகரமயமாகி வருகிறது, அதுவும் ஒரு காரணம். ஆனால் கிராமப்புறங்களில் கூட பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்து வருகிறது. மது பழக்கத்தாலும், கடன் வாங்குவதாலும் ஏற்பட்ட அழுத்தங்களால் கிராம மக்கள் படும் துயரத்தை நான் நேரடியாகப் பார்க்கிறேன். மேலும் அதிகமான ஆண்கள், குறிப்பாக இளைஞர்கள், சமூகத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள். இதனால்பெண்கள் குடும்பச் சுமையை சுமக்க வேண்டிய நிலை உள்ளது. இதுவும் குறைந்த பிறப்பு விகிதம் குறைந்தததற்கு காரணம் என்று நான் நம்புகிறேன். நமது சமூகத்தில் நம்பிக்கையைப் புதுப்பிக்க, மதுபானம் மற்றும் கடன் வாங்கும் பிரச்சனையை நாம் தீர்க்க வேண்டும். இது ஒரு சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் மற்றும் ஆன்மீக பிரச்சனையாகும்" இவ்வாறு சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post