பாயிண்ட்டை பிடித்த இன்பதுரை.. அமைச்சர் கோவி.செழியன் விசாரணை குழுவை திசைதிருப்புவதாக குற்றச்சாட்டு

post-img
சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிமுக ,'யார் அந்த சார்?' என்ற போராட்டத்தை கையில் எடுத்த நிலையில், அமைச்சர் கோவி.செழியன் அதை விமர்சனம் செய்திருந்தார். இதற்கு அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை பதிலடி கொடுத்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழ்நாட்டில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சென்னை கோட்டூர்புரம் பகுதியில் பிரியாணிக் கடை நடத்தி வரும் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது 15க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. ஞானசேகரனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே ஞானசேகரன் திமுக அமைச்சர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகின. அதேபோல பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான தகவல்கள் அடங்கிய எப்ஐஆர் காப்பி பொது தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை அதிகரிக்க செய்தது. இந்த விவகாரம் தேசியளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது. மேலும், பாலியல் வன்முறை தொடர்பான இந்த வழக்கை விசாரிப்பதற்காக சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் சினேக பிரியா, ஆவடி துணை ஆணையர் அய்மன் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா ஆகிய மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தகவல்களுடன் எப்ஐஆர் காப்பி பொது வெளியில் வெளியானதற்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்தது. எப்ஐஆர் கசிந்தது எப்படி, விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே, இந்த சம்பவத்தில் ஒருவர்தான் குற்றவாளி என்று போலீஸ் கமிஷனர் அருண் சொன்னது ஏன் என்பது குறித்தெல்லாம் இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உள்ளது. இந்நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை வெளியிட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல் துறை டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் இருவர் நேரடியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்னதாக அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் விவகாரம் தொடர்பாக அதிமுக பெண் வழக்கறிஞர் வரலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். அதிமுக மற்றும் பாஜகவினர் இந்த விவகாரத்துக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மாணவி வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பிருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. பாதிக்கப்பட்ட மாணவி, ஞானசேகரன் மற்றொருவரிடம் செல்போனில் பேசி, 'அந்த சார் சொல்வதையும் கேட்க வேண்டும்' என மிரட்டியதாக கூறியிருந்தார். அதிமுக சார்பில் சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில், 'யார் அந்த சார்?' என்று வாசகங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் போராட்டம் திமுகவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சரான கோவி. செழியன், "யார் அந்த சார் என்று இல்லாத ஒன்றை தேடி எடப்பாடி பழனிசாமி அரசியல் ஆதாயம் தேடுகிறார். பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க தயங்கி வந்த நிலையில், திராவிட மாடல் ஆட்சியில் அந்த நிலை மாறியுள்ளது." என்று கூறியிருந்தார். அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான இன்பதுரை தன்னுடைய எக்ஸ்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "குற்றவாளி ஒருவர்தான் என எப்படி முடிவு செய்தீர்கள் என்று போலீசாரிடம் கேள்வி எழுப்பிதான் சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு விசாரணை குழுவையே அமைத்தது. #யார்_அந்த_SIR என இல்லாத ஒன்றை சொல்லி அரசியல் செய்கிறார் எடப்பாடியார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தற்போது கூறுவது விசாரணை குழுவை திசை திருப்பும் முயற்சி." என்று கூறியுள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post