சென்னை: நேற்றைய தினம் வட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்த நிலையில், இன்று எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்பது குறித்த தகவல்களைச் சென்னை ரயின்ஸ் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களில் பெய்ததை போலக் கனமழை கொட்டி தீர்ப்பது இல்லை. அதேநேரம் தமிழ்நாட்டில் அவ்வப்போது சில இடங்களில் கணிசமாக மழை பெய்து வருகிறது. இது வெயிலில் இருந்து பொதுமக்கள் தப்பிக்கும் வகையில் இருக்கிறது.
இந்தச் சூழலில் நேற்றைய தினம் தமிழ்நாட்டில் பரவலாகப் பல இடங்களில் மழை பெய்தது. அதிலும் குறிப்பாக வடதமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், உள்ளிட்ட பல இடங்களில் மழை கொட்டியது. இது சென்னைவாசிகளுக்கு கொண்டாட்டமாக இருந்தது.
மழை இருக்கா: நேற்று இரவும் கூட சென்னையில் பல இடங்களில் நல்ல மழை பெய்தது. அதிகாலை வரையிலும் இந்த மழை தொடர்ந்தது. நேற்று போலவே இன்றும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்யுமா என்பதைப் பலரும் எதிர்பார்த்து இருக்கிறார்கள். நேற்றைய தினம் வடதமிழக மாநிலங்களில் கணிசமாகப் பல இடங்களில் மழை பெய்த நிலையில், இன்றைய தினம் வடமேற்கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை ரயின்ஸ் (COMK) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாகச் சென்னை ரயின்ஸ் தனது ட்விட்டரில், "வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவின் எல்லைப் பகுதிகளில் பரவலான மழை பெய்த நிலையில்.. இந்த சுழற்சி மண்டலம் தெற்கே நகர்ந்து வடமேற்கு உள்பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழையை ஏற்படுத்தும்.. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று நள்ளிரவு மீண்டும் மழை பெய்ய 50:50 வாய்ப்பு உள்ளது" என்று ட்வீட் செய்துள்ளனர்.
வானிலை மையம்: முன்னதாக மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் , "இன்று வட தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
விடிய விடிய இடி மழை.. வானில் வட்டமடித்து திருப்பி விடப்பட்ட விமானங்கள்.. சென்னை பயணிகள் கடும் அவதி!
நாளை ஆகஸ்ட் 28ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்.2ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தலைநகர் சென்னை: அதேபோல சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகத் திருவள்ளூர் பூண்டியில் 90 மிமீ மழை பெய்துள்ளது. அதேபோல பொன்னை அணையில் 70 மிமீ மழையும், ஆர்.கே.பேட்டை காவேரிப்பாக்கம் பகுதிகளில் தலா 60 மிமீ மழை பெய்துள்ளது. மேலும், சோழவரம், பணப்பாக்கம், பள்ளிப்பட்டு, அம்மூர், திருத்தணி, திருவாலங்காடு, காஞ்சிபுரம், வளசரவாக்கம், மணலி பகுதிகளிலும் தலா 50 மிமீ மழை கொட்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.