அதானி மோசடி வழக்கில் எதிர்கொள்ளப் போகும் சவால்கள் - நிபுணர்கள் விளக்கம்

post-img


கௌதம் அதானியின் பெயர் இந்தியாவின் செல்வந்தர்கள் மற்றும் சக்தி வாய்ந்த தொழிலதிபர்களின் பட்டியலில் உள்ளது. அவரும் அவரது கூட்டாளிகள் சிலரும் அமெரிக்காவில் மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர்.
இதுவரை அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இதுவே மிகவும் தீவிரமானதாக இருக்கக்கூடும். அமெரிக்காவின் நீதித்துறை, அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC) ஆகிய அந்நாட்டு அரசு அமைப்புகள், இந்தக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளன.
இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று அதானி குழுமம் கூறியுள்ளது. மேலும், சட்ட வழிகள் குறித்து ஆராய இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் காரணமாக இந்திய பங்குச் சந்தையில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் கடந்த வியாழனன்று பெரும் சரிவு ஏற்பட்டது. குற்றச்சாட்டுகளின் தீவிரத்தையும் அவற்றுக்கான எதிர்வினைகளையும் பார்க்கும்போது, இந்த விவகாரம் இதோடு நிற்கப் போவதில்லை என்பது தெளிவாகிறது.
இப்போது பல கேள்விகள் நமக்கு முன்னே உள்ளன. அமெரிக்காவில் இந்த வழக்கு தொடர்பான சட்ட நடைமுறை என்னவாக இருக்கும்? இந்தக் குற்றச்சாட்டுகள் அதானி குழுமத்தின் வணிகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
கெளதம் அதானியும் அவரது கூட்டாளிகளும் சிறைக்குச் செல்லும் சாத்தியகூறு உள்ளதா? அதானி குழுமம் எதிர்காலத்தில் தனது திட்டங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து எப்படி நிதி திரட்ட முடியும்?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்ள பிபிசி ஹிந்தி, இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பல நிபுணர்களிடம் பேசியது.
பிரையன் பீஸ், நியூயார்க்கில் அரசு வழக்கறிஞராக உள்ளார். கெளதம் அதானி மற்றும் பிறர் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி விளக்கம் அளித்த அவர், “பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெற இந்தியாவில் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கத் திட்டம் தீட்டப்பட்டது. கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெய்ன் ஆகியோர் அமெரிக்க மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடம் இருந்து மூலதனத்தைத் திரட்ட முயன்றனர். அதனால்தான்  அவர்களிடம் இவர்கள் பொய் கூறினார்கள்,” என்றார்.
ஆனந்த் அஹுஜா அமெரிக்காவில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக உள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் அங்கு பணியாற்றி வருகிறார்.
பிபிசி ஹிந்தியிடம் பேசிய அவர், குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது அவ்வளவு எளிதாக இருக்காது எனத் தான் கருதுவதாகவும் அதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகவும் கூறினார்.
"முதலாவதாக, லஞ்சம் பெற்றவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால் இந்தியாவில் உள்ளவர்களின் வாக்குமூலத்தை அமெரிக்க அதிகாரிகள் எப்படிப் பெறுவார்கள்?
இதில் இந்தியாவின் சட்டங்களையும் பார்க்க வேண்டும். ஒருவர் அரசு அதிகாரியாக இருந்தால், அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கு அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். இதுவொரு சிக்கலான வழக்காக மாறலாம்," என்று விளக்கினார் ஆனந்த் அஹூஜா.

இந்தியாவில் இருப்பவர்களை, குறிப்பாக அரசு அதிகாரிகளை அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் எந்த அளவுக்கு விசாரிக்க முடியும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார் அவர்.
அதோடு, எதிர்காலத்தில் இந்திய உச்சநீதிமன்றமும் இதில் பங்கு வகிக்கலாம், ஏனென்றால் சட்டம் என்ன சொல்கிறது என்பதை உச்சநீதிமன்றம் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்று குறிப்பிட்டார் அஹூஜா.
“இரண்டாவது காரணம், மோசடி வழக்கில் ஒரு முக்கியமான விஷயத்தை நீதிபதி முன்னிலையில் நிரூபிக்க வேண்டும். அதாவது குற்றம் சாட்டப்பட்டவரின் செயல் மற்றும் நோக்கம் ஆகிய இரண்டுமே மோசடியை வெளிப்படுத்துவதாக இருக்கவேண்டும்.
உதாரணமாக நீங்கள் சில வேலைகளைச் செய்தீர்கள், ஆனால் நீங்கள் அதைத் தவறான நோக்கத்துடன் செய்யவில்லை என்று நிரூபிக்க முடியும் என்றால் அதை மோசடி எனக் கூறுவது கடினம். அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் இதை நிரூபிக்க முடியுமா என்பதைக் காலம்தான் சொல்லும்,” என்கிறார் ஆனந்த் அஹூஜா.
முழு செயல்முறையும் முடிவதற்கு எவ்வளவு காலம் ஆகும்? என்ற கேள்விக்கு பதில் அளித்த அஹுஜா “நீதித்துறையின் முந்தைய வழக்குகளைப் பார்த்தால், வழக்கமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் இருந்து விசாரணை முடிவதற்கு ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஆகும்,” என்றார்.

ஹெச்பி ரனினா ஒரு மூத்த கார்ப்பரேட் வழக்கறிஞர். “குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. இவை நிரூபிக்கப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்படலாம் அல்லது அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். ஜூரி (நடுவர் குழு) குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என்று கருதினால், தண்டனை பெரும்பாலும் அங்குள்ள நீதிபதியைப் பொறுத்து இருக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.
“அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தைப் பொறுத்த வரை அந்த அமைப்பு அபராதம் தொடர்பாக ஓர் ஒப்பந்தத்தை எட்ட முடியும். இருப்பினும் குற்றச்சாட்டுகளின் தன்மையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது அபராதத்தின் அளவு பெரியதாக இருக்கலாம். அந்த அபராதத்தைச் செலுத்துவது அதானி குழுமத்தின் மற்ற நிறுவனங்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்,” என்றார் அவர்.
கடந்த 1997ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே குற்றம் சாட்டப்பட்டவரை நாடு திருப்பி அனுப்புவது தொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்டது.
கௌதம் அதானியை கைது செய்ய அமெரிக்கா கோர முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இப்படி நடந்தால் இந்தியாவின் பதில் என்னவாக இருக்கும்?
“இது அந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளைப் பொறுத்தது. இதில் இரு அரசுகளும் சம்பந்தப்படலாம் என்று நான் கருதுகிறேன். இந்த விஷயத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இருவருக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படலாம்,” என்று ரனினா குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அதானி குழுமத்துடனான இரண்டு ஒப்பந்தங்களை ரத்து செய்ய கென்யா அரசு முடிவு செய்துள்ளது.
இந்த ஒப்பந்தங்களின்படி, கென்யாவின் தலைநகரான நைரோபியில் உள்ள ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தில் அதானி குழுமம் 1.85 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது. அதற்கு ஈடாக விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு நடத்துவதற்கான ஒப்பந்தம் பெறப்படவிருந்தது. இதுதவிர, 736 மில்லியன் டாலர்களுக்கு மற்றோர் ஒப்பந்தமும் இருந்தது. இதன் கீழ் அங்கு மின்கம்பிகள் அமைக்கும் பணியை அதானி குழுமம் பெற்றிருந்தது.
இந்த இரண்டு விவகாரங்களிலும் ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்துள்ளது. கென்யாவின் அதிபர் வில்லியம் ரூட்டோ வியாழன்று இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக அறிவித்தபோது அதற்கு ஊழலைக் காரணம் காட்டினார்.
கென்யாவின் நாடாளுமன்றத்தில் பேசிய ரூட்டோ, "எங்கள் புலனாய்வு அமைப்புகள் மற்றும் நட்பு நாடுகள் வழங்கிய புதிய தகவல்கள் ஊழல் பற்றிய மறுக்க முடியாத ஆதாரங்கள் மற்றும் நம்பகமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன. இதுதொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுக்க நான் தயங்கமாட்டேன்,” என்று கூறினார்.
அதானி குழும நிறுவனங்கள் கென்யாவை போலவே பல நாடுகளில் இயங்குகின்றன அல்லது திட்டங்களைத் தொடங்க முயல்கின்றன. இந்தக் குழுமம் இந்தியாவில் உள்ள பல மாநில அரசுகளுடனும், வெளிநாடுகளில் உள்ள பல அரசுகளுடனும் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ளது.

இருப்பினும் கென்யாவின் நடவடிக்கை போலவே மற்ற நாடுகளிலும் நடக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. வியாழனன்று அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் பங்கு விலைகளில் சரிவு ஏற்பட்டது. இருப்பினும் இதற்கு முன்பு குற்றச்சாட்டுகள் காரணமாகப் பங்கு விலைகள் வீழ்ச்சியடைந்து பின்னர் ஏறுமுகமாக ஆனதும் நடந்துள்ளது.
அம்பரிஷ் பலிகா ஒரு பங்குச் சந்தை நிபுணர் மற்றும் எந்த நிறுவனத்துடனும் தொடர்பு இல்லாதவர்.
ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு அதானி குழும பங்கு விலைகள் பெருமளவு சரிந்தன. ஆனால் இந்த முறை பங்கு விலை வீழ்ச்சி அந்த அளவுக்கு இருக்காது என்று தான் நினைப்பதாக அவர் பிபிசி இந்தியிடம் கூறினார்.
கடந்த 2023 ஜனவரியில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற அமெரிக்க நிறுவனம் தனது அறிக்கையில் அதானி குழுமத்திற்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. அந்த வாரத்தில் அதானி குழும நிறுவனங்களின் மொத்த பங்குச் சந்தை மதிப்பு சுமார் 50 பில்லியன் டாலர்கள் வீழ்ச்சி அடைந்தது.
“இந்தக் குழுமம் சவால்களை எதிர்கொள்வதில் தன் வழியைக் கண்டுபிடிப்பதில் வெற்றிகரமாக இருப்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் இத்தகைய அறிக்கைகள் அதன் பிம்பத்தின் மீது கேள்விகளை எழுப்புகின்றன என்பது உண்மைதான். இதன் காரணமாக குழுமம் நிதி திரட்டுவதில் தாமதத்தை எதிர்கொள்கிறது. இந்த முறை குற்றச்சாட்டுகள் வெளிச்சத்துக்கு வந்தநேரத்தில் ’அதானி கிரீன்’ நிறுவனத்துக்கு நிதி திரட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்தபோது குழுமம், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு நிதி திரட்டிக்கொண்டிருந்தது,” என்று பலிகா குறிப்பிட்டார்.

சந்தோஷ் தேசாய் ஓர் ஆய்வாளர். இந்த சர்ச்சை அதானி குழுமத்தின் பிம்பத்தைப் பாதிக்கும் என்று அவர் கருதுகிறார்.
முதலீட்டாளர்கள் பயப்படுவார்கள், எதிர்காலத்தில் அதானி குழுமம் வெளிநாடுகளில் இருந்து 'நிறுவன நிதி' பெறுவது அவ்வளவு சுலபமாக இருக்காது என்று அவர் நினைக்கிறார்.
"அதேநேரம் பொதுமக்கள் அவரைப் பார்க்கும் விதத்தில் இந்த விஷயம் வித்தியாசத்தை ஏற்படுத்துமா என்பது கேள்வி. அதானி அரசியல் துருவமுனைப்பின் சின்னமாக மாறிவிட்டார் என்று நான் நினைக்கிறேன்.
யாருக்கு அதானியை பிடிக்குமோ அவர்கள் தொடர்ந்து அவரை சாம்பியனாகவே பார்ப்பார்கள். அவர் வேண்டுமென்றே குறிவைக்கப்படுகிறார் என்று கருதுவார்கள். இந்தக் குழுமத்தைப் பற்றித் தாங்கள் எப்போதுமே சரியாகச் சொன்னதாக அவரைப் பிடிக்காதவர்கள் கூறுவார்கள்," என்று தேசாய் கூறினார்.
“முதலீட்டாளர்கள் லாபத்தையும் ஸ்திரத்தன்மையையும் விரும்புகிறார்கள். இந்தியா இதை வழங்க முடிந்தால், எந்த நிறுவனம் என்ன செய்தாலும் செய்யாவிட்டாலும் ஒரு வித்தியாசமும் ஏற்படாது," என்கிறார் சந்தோஷ் தேசாய்.
ஆயினும் 'ஒருவர் மற்றவரைச் சுட்டிக்காட்டும் யோக்கியதை’ உள்ள ஒரு உலகில் நாம் வாழ்கிறோமோ என்பதே சந்தேகமாக உள்ளதாகக் குறிப்பிடுகிறார் அவர்.
அவரது கூற்றுப்படி, வணிக உலகில் ஓரளவு அரசியல் ஆதரவு அவசியம் என்ற கருத்தை இந்த விவகாரம் வலுவாக்கக்கூடும்.

Related Post