டெல்லி: “நானும் என் குடும்பத்திற்காக உழைக்கிறேன்.. என் குடும்பத்தில் 140 கோடி பேர் உள்ளனர்.. எனவே நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக உழைக்க வேண்டும்" என்று குவைத்தில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி குவைத் சென்றார். அந்நாட்டிற்குச் சென்ற பிரதமர் மோடியை விமான நிலையத்தில், குவைத் பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சர் ஷேக் ஃபஹத் யூசப் சவுத் அல்-சபா, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மற்றும் பல உயரதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர் ஷேக் சாத் அல் அப்துல்லா இன்டோர் ஸ்போர்ட்ஸ் வளாகத்தில் நடந்த 'ஹலா மோடி' நிகழ்ச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு குவைத்தில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து பிரதமர் நேற்று (டிசம்பர் 22) குவைத்தில் உள்ள வளைகுடா ஸ்பிக் தொழிலாளர் முகாமுக்குச் சென்றார். அங்கு இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவை 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற்றும் அரசின் தொலைநோக்குப் பார்வை திட்டமான "விக்சித் பாரத் 2047" திட்ட வளர்ச்சிக்கு இந்திய தொழிலாளர்களின் பங்களிப்பை எடுத்துரைத்தார்.
மேலும் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கடினமாக உழைக்கிறார்கள். வேலைக்காக இங்கு வந்துள்ள எனது நாட்டின் தொழிலாளர் சகோதரர்கள், அவர்களுடைய சொந்த கிராமத்தில் எவ்வாறு ஒரு சர்வதேச விமான நிலையத்தை உருவாக்குவது என்று நினைக்கிறார்கள். இந்த சிந்தனை தான் நமது நாட்டின் பலம்.
அவர்களது அர்ப்பணிப்பைப் பார்க்கும்போது என்னையும் கடினமாக உழைக்க தூண்டுகிறது. நீங்கள் 10 மணி நேரம் உழைத்தால் நான் 11 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று உணர்கிறேன். 11 மணி நேரம் உழைத்தால் நான் 12 மணி நேரம் வரை உழைக்க விரும்புகிறேன். உங்கள் குடும்பத்திற்காக நீங்கள் கடினமாக உழைக்கிறீர்களா இல்லையா? நானும் என் குடும்பத்திற்காக உழைக்கிறேன். என் குடும்பத்தில் 140 கோடி பேர் உள்ளனர். எனவே நான் இன்னும் கொஞ்சம் கூடுதலாக உழைக்க வேண்டும்.
இந்தியா உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு தகவல் தொடர்புகளை எளிதாக்குகிறது. இந்தியாவில் இன்டர்நெட் மலிவாக கிடைக்கிறது. குறைந்த செலவில் அனைவரும் நீங்கள் உங்களது குடும்பத்தினரை ஆன்லைனில் தொடர்பு கொண்டு பேசலாம். வீடியோ கால் செய்தால் கூட செலவு மிகவும் குறைவு” எனத் தெரிவித்தார்.
43 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் குவைத்துக்குச் சென்றிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. குவைத் சிட்டியில் உள்ள மன்னரின் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், குவைத் மன்னரிடம் இருந்து அந்நாட்டின் மிக உயரிய விருதான “முபாரக் அல்-கபீர்” விருதை பெற்றார் பிரதமர் மோடி.
அதைத்தொடர்ந்து, 2 நாள் குவைத் பயணத்தை முடித்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தியாவுக்கு புறப்பட்டார். குவைத்தில் இருந்து இந்தியா புறப்பட்ட பிரதமர் மோடியை குவைத் பிரதமர் அகமல்து அப்துல்லா அல் அகமது அல் ஷா, விமான நிலையம் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.